Wednesday, 30 December 2009

ஸ்னாட்ச் [Snatch] - எனது பார்வையில்

ஜில்லென்று ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு கீழ் கண்ட பத்தியைப் படிக்கவும்.

பெல்ஜியத்தில் இருந்து கோல்ப் பந்தளவு உள்ள ஒரு வைரத்தைக் கடத்தும் ஃப்ரான்கி (Frankie "Four Finger") என்ற கொள்ளைக்காரன் அமெரிக்காவில் உள்ள அவி (Cousin Avi) என்பவனிடம் அந்த வைரத்தை விற்கும் முயற்சியின் ஒரு கட்டமாக டோக் (Doug[las]) எனும் வைர வியாபாரியை சந்திக்க லண்டன் வந்திருப்பதை அறிந்து கொள்ளும் ரஷிய / உக்ரைனிய ஆயுத வியாபாரியான போரிஸ் (Boris The Blade) அந்த வைரத்தை ஃப்ரான்கியிடம் இருந்துக் கைப்பற்ற சாலமன், வின்சென்ட் என்ற இரு ஆப்பிரிக்கர்களை நியமிக்க, அவர்கள் டைரோன் (Tyrone) என்ற மற்றொருவனுடன் சேர்ந்து அந்த வைரத்தை அபகரிக்கும் போது ஒரு சூதாட்ட விடுதியை தாக்க, அதனால் ஆத்திரமடையும் அந்த சூதாட்ட குழுவின் தலைவனான பிரிக் டாப் (Brick Top) சாலமன், வின்சென்ட் மற்றும் டைரோனை மடக்க, அவர்கள் மூவரும் பிரிக் டாப்பிடம் இருந்து தப்பிப்பதற்காக தற்போது போரிஸிடம் இருக்கும் வைரத்தை பிரிக் டாப்பிடம் ஒப்படைப்பதாக கூறி அதற்கான முயற்சியில் இறங்க, இதற்கிடையில் இந்த குழப்படியைப் பற்றி தெரிந்து கொள்ளும் அவியும் லண்டன் வந்து டோனி (Bullet Tooth Tony), ரோஸ்பட் (Rosebud) என்ற தாதாக்களின் உதவியோடு அந்த வைரத்தை துரத்த...

அடடா மூச்சை விட்டு விட்டீர்களே. ஜில்லென்று இன்னொரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு மேலே உள்ள பத்தியைப் மீண்டும் படிக்கவும்.

என்ன முடியவில்லையா? ஒரே குழப்பமாக இருக்கிறதா? பாதகமில்லை. வேறு ஒரு கதை சொல்கிறேன்.

லண்டனில் சட்டவிரோதமாக நடக்கும் குத்துச்சண்டைகளின் ப்ரமோட்டர்களில் ஒருவன் டர்க்கிஷ் (Turkish). அவன் ஐரிஷ் நாடோடிக் கும்பலை சேர்ந்த மைக்கி (Mickey) என்பவனிடம் இருந்து ஒரு வாகனம் வாங்க முயற்சித்து மைக்கி மற்றும் மைக்கியின் சகாக்களால் ஏமாற்றப்படுகிறான். பின்விளைவாக ஏற்படும் சர்ச்சைகளில் டர்கிஷ் தனது குத்துச்சண்டை வீரர்களில் ஒருவனான ஜார்ஜை இழக்க நேரிடுகிறது. அடுத்த போட்டியில் சண்டையிட யாரும் இல்லாததால் ஜார்ஜை வீழ்த்திய மைக்கியையே அந்தப் போட்டியில் சண்டையிட செய்கிறான் டர்க்கிஷ். அதில் எதிர்பாராதவிதமாக மைக்கி வெற்றி பெற, அந்தப் போட்டியை வைத்து சூதாட்டம் செய்த பிரிக் டாப் பெருத்த நஷ்டம் அடைகிறான். இதனால் ஆத்திரமடையும் பிரிக் டாப் டர்க்கிஷையும் மைக்கியையும் மிரட்டி அடுத்த போட்டியில் சொன்னபடி ஒழுங்காக (!) சண்டையிடா விட்டால் அவர்களை கொன்று விடுவதாக மிரட்டுகிறான். இதனிடையே பிரிக் டாப் நடத்தும் சூதாட்ட விடுதி சில ரவுடிகளால் தாக்கப்பட, அவர்களைத் தேடி கிளம்புகிறான்.

என்னடா, சம்பந்தமே இல்லாமல் இரண்டு கதை சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். இது இரண்டுமே Snatch திரைப்படத்தில் வருவது தான். மேலே உள்ள இரு பத்திகளில் வரும் 'பிரிக் டாப்' கதாபாத்திரம் தான் இந்த இரு கதைகளையும் இணைக்கும் (பெரும்) புள்ளி. மறுபடியும் ஒரு முறை படித்துப் பாருங்கள் புரிந்தாலும் புரியலாம்! அப்படியும் புரியவில்லை என்றால் Snatch திரைப்படத்தை பார்த்து விடுங்கள். தெளிவாக புரியும்.

சில படங்கள் மட்டுமே நம்மை மறுபடி பார்க்கச் செய்யும். இந்தப் படத்தை டிவிடியில் பார்த்து முடித்த உடனேயே மறுபடி ஆரம்பத்தில் இருந்து பார்க்கத் தொடங்கினேன். அந்த அளவிற்கு சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம் இது. ஏராளமான கதாபாத்திரங்கள், சின்ன சின்ன ஷாட்டுகள், விறுவிறு திரைக்கதை, அள்ளித் தெளித்த நகைச்சுவை என்ற சரியான மசாலா தான் Snatch.

மகாபாரதம் ரேஞ்சுக்கு கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒருவர் விடாமல் அனைவரும் தனிப்பட்டு தெரிகிறார்கள். குறிப்பாக

ஃப்ரான்கி: Usual Suspects, Sin City போன்ற படங்களில் கலக்கிய டெல் டோரோ (Del Toro) இந்தப் படத்தில் ஃப்ரான்கி. சிறிது நேரமே வந்தாலும், ஸ்டைலுக்கு குறைவில்லை. சூதாட்ட மோகத்தில் விரல், உயிர், கை என அனைத்தையும் இழக்கும் கேரக்டர்.

கஸின் அவி: பார்க்க பெரியப்பா போன்ற தோற்றம். வைரம் கையை விட்டு போகாமல் இருக்க நியூயார்க் - லண்டன் டிரிப் அடித்து டென்ஷனாகும் பார்ட்டி.

ப்ரிக் டாப்: சூதாட்டம் நடத்தும் 'பயங்கர'வாதி. சடலங்களை எப்படி பன்றிகளின் உதவியோடு அப்புறப்படுத்துவது என்று ட்யூஷன் எடுக்கும் காட்சியில் ஏ-க்ளாஸ் டெலிவரி.

சால், வின்னி, டைரோன்: சின்ன சின்ன வசனங்கள் பேசினாலும், அத்தனையும் அபார நகைச்சுவை. முக்கியமாக டைரேனின் அப்பாவித்தனமான முக பாவனை ஆஹா!

மைக்கி: ஐரிஷ் நாடோடியாக, புரியாத ஆங்கிலம் (ஆங்கிலம் தானா அது?) பேசி கலக்கி இருப்பவர் பிராட் பிட். அனாசியமான நடிப்பு!

டர்க்கிஷ் & டாமி: ப்ரிக் டாப்பின் சிலந்தி வலையில் சிக்கி நொந்து நூலாகும் கேரக்டரில் டர்க்கிஷ் மற்றும் அவன் சகா டாமி.

இவர்களைத் தவிர படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வரும் சமையல்காரன் சாசேஜ் சார்லி, சூதாட்ட விடுதியில் புக்கி (bookie) வேலை பார்க்கும் பெண் போன்ற சின்னஞ்சிறு பாத்திரங்கள் கூட மனதில் நிற்கிறார்கள். முக்கியமாக அந்த பெண் புக்கி பேசுவது ஐந்து வரிகள் தான் என்றாலும் அழகோ அழகு (யூடுயூபில் பார்க்க).

இந்தப் படத்தை இயக்கியவர் பாடகி மடோனாவின் முன்னாள் கணவரான Guy Ritchie. இந்தப் படம் "Lock, Stock and Two Smoking Barrels" என்ற மற்றொரு படத்தின் அப்பட்டமான காப்பியாம். இதில் கூத்து என்னவென்றால் "Lock, Stock and Two Smoking Barrels" படத்தை இயக்கியவரும் Guy Ritchie தான் (நம்மூர் இயக்குனர் கதிர் ஞாபகம் வருகிறதா?).

துக்கடா: இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் பலதரப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களாக வருவது இப்படத்தின் முக்கிய அம்சமாகும். இது படம் முழுவதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்கர்கள், உக்ரைனியர்கள், ரஷியர்கள், ஐரிஷ்காரர்கள், யூதர்கள் என அனைவரும் வருகிறார்கள்.

இந்தியர்கள்? ஓ யெஸ் இருக்கிறார்களே! என்ன கேரக்டரா? அதுக்கு படம் பாருங்க :)

1 குட்டு:

said...

இவர் படங்கள் எல்லாமே இப்படித்தான். ஆனால் சுவாரசியமாக இருக்கும்!