Monday, 5 October 2009

டிஸ்ட்ரிக்ட்-9 - எனது பார்வையில்


படம் வந்து சில மாதங்கள் ஆகி விட்டதாலும், ஏற்கனவே பலர் இப்படத்தைப் பற்றி எழுதிவிட்ட காரணத்தாலும் பெரிய பில்ட்-அப் எல்லாம் கொடுக்காமல் நேராக கதைக்கு போகலாம்.

1982ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரான ஜோகனஸ்பர்க் மேல் ஒரு வேற்றுக்கிரக விண்கலம் பழுதடைந்து நிற்கிறது. விண்கலத்தின் உள்ளே போய் பார்த்தால் நொந்து நூடுல்ஸாகி இத்துப்போன இடியாப்பம் போன்ற நிலையில் வேற்றுக்கிரகவாசிகள் (செல்லமாக இறால்கள்). அரசு இந்த இறால்களை வறுவல் செய்து சாப்பிடாமல் டிஸ்ட்ரிக்ட்-9 (District-9) என்ற பெயரில் ஒரு முகாம் அமைத்து சமத்து பிள்ளைகளாக இருக்கச் சொல்கிறது.

2010ஆம் ஆண்டு. டிஸ்ட்ரிக்ட்-9இல் குடியேறிய வேற்றுக்கிரகவாசிகள் குடியும் குடித்தனமுமாக வாழ, முகாமின் ஜனத்தொகை கிட்டத்தட்ட 20 இலட்சத்தைத் தொடுகிறது. ஜனத்தொகைப் பெருக்கத்துடன் குற்றங்களும் பெருகி, நிலைமை மிகவும் சீர்கெட்ட நிலையில் இருக்க, ஜோகனஸ்பர்க் மக்கள் பொருத்தது போதும் என பொங்கியெழுகின்றனர். அரசாங்கம் வேற்றுக்கிரகவாசிகளுக்காக புதிய முகாமொன்றை ஊரை விட்டு வெகு தொலைவு தள்ளி அமைக்கிறது. புதிய முகாமின் பெயர் டிஸ்ட்ரிக்ட்-10.

வேற்றுக்கிரகவாசிகளை டிஸ்ட்ரிக்ட்-9இல் இருந்து டிஸ்ட்ரிக்ட்-10க்கு மாற்றும் பொறுப்பு MNU என்ற தனியார் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. விக்கூஸ் என்ற MNU நிறுவன அதிகாரி இந்தப் பணிக்கு தலைவராக அறிவிக்கப்படுகிறார். இடமாற்றப் பணியின் முதல் படியாக டிஸ்ட்ரிக்ட்-9இல் இருக்கும் அனைத்து வேற்றுக்கிரகவாசிகளுக்கும் வெளியேற்ற உத்தரவு அறிக்கை (Eviction notice) அளிக்கப் போகும் விக்கூஸ் மேல் எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு திரவத்தின் சில துளிகள் படுகிறது. இதன் விளைவாக அவர் வேற்றுக்கிரகவாசிகளைப் போல உருமாற ஆரம்பிக்கிறார். இலவச இணைப்பாக வேற்றுக்கிரகவாசிகளின் ஆயுதங்களைக் கையாளும் திறனையும் பெறுகிறார். இந்த ஆயுதங்களை சாதாரண மனிதர்களால் இயக்க முடிவதில்லை - வேற்றுக்கிரகவாசிகளின் மரபணு (DNA)) கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆயுதங்கள் கட்டுப்படுகின்றன. விக்கூஸின் இந்தப் புதிய திறனைக் கண்டறியும் MNU, விக்கூஸைக் கொன்று கொத்துக்கறியாக்கி அவர் உடலை ஆராய முடிவு செய்கிறது.

MNUவிடம் இருந்து தப்பும் விக்கூஸ் நேராக டிஸ்ட்ரிக்ட்-9ஐ அடைகிறார். அங்கு கிறிஸ்டேபர் என்னும் வேற்றுக்கிரகவாசியின் மூலம் அவர் மேல் பட்ட அந்த திரவம் உண்மையில் வேற்றுக்கிரக விண்கலத்தை செலுத்த தேவையான எரிபொருள் என்று தெரிந்து கொள்கிறார். அந்த எரிபொருள் கிடைத்தால் கிறிஸ்டேபரும் பிற வேற்றுக்கிரகவாசிகளும் தங்கள் கிரகத்திற்கு திரும்ப முடியும் என்பதையும் தன்னால் சாதாரண மனிதனாக உருமாற முடியும் என்பதையும் அறிந்த விக்கூஸ், கிறிஸ்டேபரின் துணையோடு தற்போது MNU வசம் இருக்கும் அந்த எரிபொருளை கைப்பற்ற முடிவு செய்கிறார். விக்கூஸ் மற்றும் கிறிஸ்டேபரால் MNUவிடம் இருத்து அந்த எரிபொருளை மீட்க முடிந்ததா, வேற்றுக்கிரகவாசிகளால் தங்கள் தாய்கிரகத்திற்க்கு திரும்ப முடிந்ததா, விக்கூஸ் மீண்டும் மனித உருவம் கிடைத்ததா என்பது மீதிக்கதை.

வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி இதற்கு முன் ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் அந்தப் படங்களில் இருந்து டிஸ்ட்ரிக்ட்-9ஐ வேறுபடுத்தி காட்டுவது இரண்டு விசயங்கள்

  • மற்ற படங்களில் வரும் வேற்றுக்கிரகவாசிகளின் நோக்கம் பூமியை கைப்பற்றுவதாக அல்லது அழிப்பதாக இருக்கும். விசேஷ சக்திகளும் நவீன ஆயுதங்களும் கொண்டிருக்கும் (என்க்குத் தெரிந்து ஸ்பீல்பெர்க்கின் ET ஒரு விதிவிலக்கு). இந்தப் படத்தில் அப்படி இல்லாமல் மனிதர்களிடம் உதை வாங்கும் இறால்களாக வருவது ஒரு வித்தியாசம்.
  • விளிம்பு நிலை மனிதர்களின் குறியீடாக வேற்றுக்கிரகவாசிகளை சித்தரித்திருப்பது. டிஸ்ட்ரிக்ட்-6 என்பது தென்னாப்பிரிக்க நகரமான கேப்டவுனில் இருந்த ஒரு குடியிருப்புப் பகுதி. 1970களில் இந்தப் பகுதியில் இருந்த வெள்ளையர் அல்லாத மக்கள் தென்னாப்பிரிக்க அரசினால் வேறு இடங்களுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் படத்திற்க்கு டிஸ்ட்ரிக்ட்-9 என்று பெயரிட்டது டிஸ்ட்ரிக்ட்-6 நினைவாகத் தான்.

இந்த இரண்டு காரணங்களும் படத்தின் முதல் பாதியை 'அட வித்தியாசமான படமா இருக்கே!' என்று ரசிக்க வைக்கிறது. படத்தின் பிற்பகுதியோ சேஸிங், விக்கூஸின் ஹீரோயிசம், துப்பாக்கிச் சண்டை என்று மூன்றாம் தர ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருக்கிறது.

நீங்கள் வித்தியாசமான படங்களின் ரசிகர் என்றால் இந்தப் படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்து விட்டு ஓடி வந்து விடுங்கள். இல்லை உங்களுக்கு ஆக்க்ஷன் காட்சிகள் தான் பிடிக்கும் என்றால், இரண்டாவது பாதி மட்டும் பாருங்கள் போதும்.

.