Saturday, 26 September 2009

குவாண்டின் டராண்டினோவின் இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் - எனது பார்வையில்


இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

குவாண்டின் டராண்டினோ - நவீனத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். ரிசர்வாயர் டாக்ஸ் (Reservoir Dogs), பல்ப் பிக்க்ஷன் (Pulp Fiction), கில் பில் (Kill Bill) போன்ற திரைப்படங்களின் மூலம் முத்திரை பதித்த இவரின் புத்தம் புதிய வெளியீடு இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglourious Basterds) - படத்தலைப்பில் வலிய திணிக்கப்பட்ட எழுத்துப் பிழைகளில் ஆரம்பமாகும் குவாண்டினின் ஸ்டைல் படம் முழுவதும் தொடர்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்கியிருக்கும் சமயம். ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரான்சில் நடைபெறும் கதை. அங்கே உள்ள யூதர்களை தேடிப்பிடித்து தீர்த்து கட்டும் யூத வேட்டைக்காரன் (அட நம்ம விஜய் இல்லீங்க) நாஜிப் படையின் கர்னல் ஹான்ஸ் லான்டா. ஒரு கிராமத்தில் பதுங்கியிருக்கும் யூத குடும்பம் ஒன்றை முழுவதுமாக தீர்த்து கட்டுவதில் இருந்து படம் ஆரம்பமாகிறது. அதிலிருந்து தப்பிப்பது சூசன்னா என்ற ஒரே ஒரு இளம் பெண் மட்டுமே. இவள் சில வருடங்களுக்குப் பின் தனது யூத அடையாளங்களை மறைத்து விட்டு பாரீஸில் உள்ள ஒரு சிறிய திரையரங்கின் உரிமையாளராக உருமாறுகிறாள்.

இதற்கிடையில் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் யூத வீரர்களை கொண்டு லெப்டினன்ட் அல்டோ என்பவனின் தலைமையில் "இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்" என்ற குழு அமைக்கப்படுகிறது (தமிழில் இப்படம் மொழி பெயர்க்கப்பட்டால் என்ன பெயர் சூட்டப்படு!?). முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும், தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் எதிர்க்க முடியும் என்பது இவர்களின் சித்தாந்தம். இவர்களின் பணி ஜெர்மானிய இராணுவத்தை போர்க்களத்தில் எதிர்ப்பது அல்ல. பதிலாக நாஜிக்களை கொடூரமாக கொன்று ஜெர்மானியர்களிடையே பீதியைக் கிளப்புவது. கொல்லப்பட்டவர்கள் தலையின் மேல்பாகத்தை ஞாபகார்த்தமாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்வது இவர்கள் ஸ்டைல் (குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 தலை கொய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு அல்டோ கொடுக்கும் டார்கெட்). நாஜிக்களை குழுவாகக் கொல்லும் செயல் வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக அக்குழுவில் இருந்து ஒரே ஒரு நபரை மட்டும் உயிரோடு விட்டு விடுவார்கள். அப்படி விடுவிக்கப்படும் நபரின் நெற்றியில் ஸ்வஸ்திகா சின்னம் கத்தியால் கீறப்படும், அந்நபரின் நாஜி அடையாளம் கடைசி வரை மறையாமல் இருக்க.

இந்தக் குழு தங்கள் பணியை செவ்வனே செய்து வரும் வேளையில் ஜெர்மனியின் பிரச்சார அமைச்சர் கோபெல்ஸ் (Joseph Goebbels) மேற்பார்வையில் ஜெர்மானிய வீரர்களின் சாகசத்தை விவரிக்கும் ஒரு பிரச்சாரத் திரைப்படம் உருவாகிறது. அத்திரைப்படத்தின் கதாநாயகனுக்கு சூசன்னா மீது ஒரு கண். இவன் வற்புறுத்தலின் பேரில் இப்படத்தை சூசன்னாவின் திரையரங்கில் வெளியிட கோபெல்ஸ் சம்மதிக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஹிட்லர், ஜெர்மனி விமானப்படையின் தளபதி கேரிங் (Hermann Göring), நாஜி கட்சியின் முக்கிய பிரமுகரான மார்டின் பொர்மன் (Martin Bormann) என்று நாஜி கட்சியின் பெரும் தலைகள் அனைவரும் பாரீசில் ஒன்று கூடுகின்றனர். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் யூத வேட்டைகாரனான ஹானிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் குடும்பத்திற்கு நேர்ந்த கதிக்கு பழி வாங்கும் விதமாக, நிகழ்ச்சியின் போது திரையரங்குக்கு நெருப்பூட்டி மொத்த கூட்டத்தையும் கொளுத்த முடிவு செய்கிறாள் சூசனா.

இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்து கொள்ளும் இங்கிலாந்து இராணுவமும் நாஜிக்களை திரையரங்கில் வைத்து மொத்தமாக அழிக்க முடிவெடுக்கிறது. இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் குழுவுடன் இணைந்து செயல்படும் திட்டத்துடன் இங்கிலாந்து வீரர்கள் பிரான்ஸில் இறங்குகிறார்கள். இவர்களுக்கு உதவ ஒரு அழகான உளவாளி நடிகையும் ஆஜர்.

இப்படி இரண்டு கோஷ்டிகளும் ஒரே காரியத்தை ஒரே நேரத்தில் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனால் ஏதும் குழப்பம் ஏற்பட்டதா, எடுத்த காரியம் சுபமா, ஹிட்லரும் மற்ற நாஜிக்களும் என்ன ஆனார்கள், ஹானினால் தன் தலைவர்களை காப்பாற்ற முடிந்ததா போன்ற இதர விவரங்களை உங்கள் வசதிக்கேற்ப வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ, டாரண்டிலோ காண்க!

படத்தில் அல்டோவாக வரும் பிராட் பிட், சூசன்னாவாக வரும் மெலானி, ஜெர்மானிய நடிகையாக வரும் டயான க்ரூகர் (ட்ராய் படத்தில் ஹெலனாக நடித்தவர்), நடிகனாக வரும் டேனியல் பூருஹெல் என அனைவரும் கச்சிதம். பிராட் பிட் தன்னை இத்தாலியராக காட்டிக் கொள்ளும் காட்சியில் காட்பாதர் பட மர்லின் பிரான்டோவை அப்பட்டமா காப்பி அடிக்க, தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால் வில்லன் ஹானாக வரும் கிறிஸ்டேப் வால்ட்ஸ் மற்ற அனைவரையும் இடது கையால் ஓரம் கட்டுகிறார். சுருக்கமாக சொன்னால் - அட்டகாசம். அங்கிளுக்கு ஒரு ஆஸ்கார் பார்சல்!

டராண்டினோவின் புகழ் பெற்ற நான்-லீனியர் பாணி இதில் கிடையாது. படம் உங்கள் மூளையை குடையாமல் சீராக நேர் கோட்டில் செல்கிறது. இப்படத்தை தன் மாஸ்டர் பீஸ் என்று சொன்னவர் தன் முத்திரையான நான்-லீனியர் திரைக்கதை உத்தியை குத்தாமல் விட்டது ஆச்சரியம் தான்.

டராண்டினோவின் படங்களில் தென்படும் மற்றுமொரு விசேஷம் - வன்முறை. ரிசர்வாயர் டாக்ஸ் படத்தில் வரும் அந்த காவலரின் காதறுக்கும் நேரடியான வன்முறை காட்சியானாலும் சரி, கில் பில் படத்தில் வரும் பகடி கலந்த கத்தி சண்டை காட்சியானாலும் சரி வன்முறை ரசிகர்களுக்கு சரியான விருந்து. இந்தப் படத்தில் வன்முறைக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் இருந்தாலும் ஏனோ டராண்டினோ அடக்கியே வாசித்திருக்கிறார். நாஜி வீரன் ஒருவனை பேஸ்பால் மட்டையால் அடித்து நொறுக்கும் காட்சி மட்டுமே விதிவிலக்கு.

வசனமே இல்லாமல் ஆக்சன் படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசும் பாத்திரங்களையும் நீண்ட உரையாடல்களையும் கொண்டு க்ரைம் / ஆக்க்ஷன் கதைகளைப் படைத்தவர் டராண்டினோ. ரிசர்வாயர் டாக்ஸ் படத்தில் வரும் மடோனா பாடல் மற்றும் உணவகத்தில் டிப்ஸ் கொடுப்பதை பற்றிய உரையாடல்கள், பல்ப் பிக்க்ஷன் படத்தில் சாமுவேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பைபிள் வாசகம் சொல்லிக் கொல்லும் வசனம் போன்றவை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது, நம் திருவிளையாடல் திரைப்பட வசனத்தைப் போல! டராண்டினோவின் மற்ற படங்களை ஒப்பிடுகையில், இந்தப் படத்தில் வசனம் கொஞ்சம் சுமார் தான் என்றாலும் சில இடங்களில் டராண்டினோவின் டச் இல்லாமல் இல்லை. ஒரு உதாரணம்

மனதில் ஒன்று நினைத்துக் கொள்வேன், அது என்ன என்று நீ கண்டுபிடி என்பது போன்ற் ஒரு விளையாட்டின் போது வரும் வசனம்
முதல் நபர்: நான் காட்டுப் பகுதியில் இருந்து அமெரிக்கா சென்றவன் என்று கூறினாய். நான் போகும் போது படகில் சென்றேனா?
இரண்டாம் நபர்:
ஆம்

முதல் நபர்: என் விருப்பதிற்கு மாறாக இழுத்துச் செல்லப்பட்டேனா?
இரண்டாம் நபர்:
ஆம்

முதல் நபர்: படகில் செல்லும் போது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தேனா?
இரண்டாம் நபர்:
ஆம்

முதல் நபர்:
நான் ஒரு நீக்ரோவா?

இரண்டாம் நபர்:
இல்லை

முதல் நபர்:
அப்படி என்றால் நான் கிங்காங்.
அதே போல் முதல் காட்சியில் பிரஞ்சு விவசாயியை ஹான் விசாரிக்கும் போது யூதர்களை எலிகளுக்கு ஒப்பிடும் வசனமும் நச்!

டராண்டினோ படங்களில் உள்ள மற்றுமொரு ஸ்பெஷாலிட்டி - பின்னணி இசைக்கு அவர் பயன்படுத்தும் பழைய பாடல்களும் ஆல்பம் இசைகளும் (Kill Bill - Twisted nerve, Woo Hoo. Pulp Fiction - Jungle Boogie, Son of a preacher man, Reservoir Dogs - Stuck in the middle). இதிலும் அப்படியே என்றாலும் மற்ற படங்கள் அளவிற்கு என்னை கவரவில்லை. Rabbia e Tarantella என்ற இராணுவ ட்ரம் பீட் மட்டுமே பிடித்தது. மேலும் சில முறை கேட்டால், மற்ற பாடல்களும் பிடிக்கலாம்!

ஆக, டராண்டினோவின் மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது நான்-லீனியர் தன்மை, வன்முறை, வசனம், பாடல் என்று அனைத்து தளங்களிலும் இது ஒரு படி கீழே தான். இருந்தாலும் டராண்டினோ ரசிகர்கள் தவற விடக்கூடாத படம். மற்றவர்களும் தான்.

7 குட்டு:

said...

நன்றாக எழுதியிருக்கீங்க.

படத்தில் ஒரு சின்ன திருப்பல் இருக்கின்றது, அதை அவதானித்தீர்களா என்று தெரியவில்லை..:)

said...

@TBCD
//நன்றாக எழுதியிருக்கீங்க.//

நன்றி!

//படத்தில் ஒரு சின்ன திருப்பல் இருக்கின்றது, அதை அவதானித்தீர்களா என்று தெரியவில்லை..:)//

இரண்டு மூன்று கவணித்தேன் நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்று குறிப்பாகத் தெரியவில்லை. ஏதேனும் க்ளூ?

said...

”அட” போட வச்சிருச்சி உங்க பதிவு(கள்). :) :)

கலக்குங்க! :)

said...

ரொம்ப நல்லா எழுதறீங்க நீங்க எல்லாம் அடிக்கடி எழுத கூடாதா? நாங்க வந்து படிப்போமே?
ஓட்டுக்கள் போட்டாச்சு
http://www.geethappriyan.blogspot.com/

said...

@ஹாலிவுட் பாலா:
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் தளத்தில் எனது பதிவுக்கு லிங்க் கொடுத்ததற்கு பெரிய நன்றி! :)

said...

@கார்த்திகேயன்:
நன்றி. எழுதலாம் தான்...இந்தப் பாழாய் போன சோம்பேறித்தனம்! :(

ஒரு மாதம் முன் District 9 படத்தைப் பற்றி ஒரு பதிவெழுத ஆரம்பித்தேன். சோம்பலின் காரணமாக, எழுதாமல் draftஇல் விட்டு விட்டேன். உங்களின் இந்த கமெண்டைப் பார்த்ததும், அதை அவசர அவசரமாக முடித்து வெளியிட்டு விட்டேன். நன்றி! :)

said...

attagaasamana vimarsanam... :) :)

inga innum padam release aavalango... :( me waiting..