Wednesday, 23 September 2009

பாட்டி வடை சுட்ட கதையும் என்னைப் போல் ஒருவனும்.

இன்று எனது மகனுக்காக வாங்கிய ஒரு கதைப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு குறிப்பிட்ட கதையை படித்ததும் அதிர்ந்து போனேன். இக்கதைகளை படிக்கும் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஒரே நோக்கத்துடன் படைக்கப்பட்ட கதை குப்பை அது. அதைப் படித்த போது ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. இந்துத்துவம், பார்பனீயம், முதலாளித்துவம் என்று உலகில் உள்ள அனைத்து அயோக்கியத்தனத்தையும் ஒன்றாக கரைத்து வாசகர்களின் மேல் வாந்தியெடுப்பதை தவிர வேறு எந்த வித குறிக்கோளும் இல்லாத அந்த கதை இதோ இது தான்

ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது.

முதலில் பாட்டியை கவனிப்போம். ஒரு வயதான பெண்மணியை குறிப்பிட வேறு பல சொற்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை இவள் "பாட்டி" என்றே அழைக்கப்படுகிறாள். கிழவி, ஆயா போன்ற நலிந்த, நசுக்கப்பட்ட மக்களின் பாஷையில் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை. இவள் பாட்டியாக இருப்பதற்கும் கிழவியாக இல்லாமல் போனதற்கும் காரணம் ஒன்று தான் - இவள் ஆதிக்கசாதியின் பிரதிநிதி. இவள் எதற்காக வடை விற்க வேண்டும்? ஏன் சிக்கன் 65 அல்லது மட்டன் சுக்கா விற்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால் மேலும் பல படிமங்கள் புலப்படும்.

அடுத்தது காக்கா. உலகில் எத்தனையோ பறவைகள் இருக்க எதற்காக இந்த கதையில் காக்கா? ஏன் ஒரு கிளியோ, வெண்புறாவோ, அன்னமோ வடையை திருடவில்லை? காரணம் இல்லாமலில்லை. இந்து சாஸ்திரப்படி பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன். காலில் அழுக்கு இருக்கும். அழுக்கு கருப்பாக இருக்கும். அதாவது பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்கள் கருப்பாக இருப்பார்கள். ஆக கருப்பான காகம் இங்கே சூத்திரனின் குறியீடு. ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் நாலு என்ற சுலபமான கணக்கு தான் இதுவும். இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொறு விசயம் இருக்கிறது. இந்த கதையில் ஒரு இடத்தில் கூட "காகம்" என்ற மரியாதை தொனிக்கும் சொற்பிரயோகம் கிடையாது. கதை முழுவதும் "காக்கா" என்ற மரியாதையற்ற வார்த்தை தான். பாட்டி கிழவியாக கூடாது. காக்கா காகம் ஆக முடியாது. இது தான் இவர்களின் தர்மம்.

இக்கதையில் வரும் நரி ஒரு புத்திசாலி. நல்ல வார்த்தைகளில் பேசும் ஒரு கனவான் தோற்றம் அதற்கு. மேலுக்கு நயவஞ்சகவாதி போல சித்தரிக்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அது பற்றி பிறகு பேசலாம்.

இத்தகைய பாத்திரப் படைப்புக்களின் இடையே இந்த கதையை கட்டுடைத்தால் நமக்கு நமக்கு மிஞ்சுவது கீழ் கண்ட வினாக்கள் தான்

1) இக்கதையில் காகம் கிழவியை ஏமாற்றியதை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டு, கிழவி இன்று வரை மற்றவர்களை ஏமாற்றி வருவதை இருட்டடிப்பு செய்வது ஏன்? நேற்று சுட்ட ஊசிப் போன வடையை விற்கும் ஆயிரக்கணக்கான கிழவிகளை பற்றி பக்கம் பக்கமாக எழுத விசயங்கள் இருக்க, இந்த கதையில் அதைக் கண்டித்து ஒரே ஒரு வார்த்தை கூட இல்லையே?

2) கிழவியை ஏமாற்றிய காக்கைக்கு வடை பறி போனது தண்டனையாம். சரி நல்லது. காக்கையை ஏமாற்றிய நரிக்கு மட்டும் என்ன தண்டனை? கதையை முழுவதும் 12 தடவை படித்து விட்டேன், அது மட்டும் தெரியவில்லை. இளைத்தவன் என்றால் தண்டனை. தடித்தவனுக்கு புத்திசாலி பட்டமா?

3) நரி பாட சொன்னதாம் காக்கா உடனே வாயில் வடை இருப்பதையும் மறந்து பாடியதாம். உலகில் உள்ள அனைத்து காகங்களையும் முகஸ்துதிக்கு மயங்கும் முட்டாளாக சித்தரிப்பதைத் தவிர இந்த காட்சிக்கு வேறு என்ன பொருள் கொள்வது? முட்டாள் நரி இல்லையா? முட்டாள் பாட்டி இல்லையா? அது ஏன் காகம் மட்டும் முட்டாள்?

4) இந்த வரியை பாருங்கள் - "காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாட"
இந்த வரியில் தான் எவ்வளவு ஒரு ஆணவம் கலந்த அயோக்கியத்தனம்? காக்கையால் குயில் போல பாட முடியாமல் பரிதாபமாக "கா கா" என்று கத்துவதை கதையாக்கி கேலி செய்யும் அளவுக்கு வன்மம் தெரிக்கிறது. தியேட்டரில் சிரிக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மணிவண்ணா?

பி.கு: எதையும் நேர் கோட்டில் பார்த்தால் முற்போக்குவாதி கிடையாதாம். அதான் ஒரு 42 டிகிரி கோணத்தில் இருந்து பார்த்தேன். இப்பொ நானும் முற்போக்குவியாதி தான். அப்போ நீங்க?

11 குட்டு:

Anonymous said...

Hello brother, really u r a front going man (அதாங்க முற்போக்குவாதி)

said...

அண்ணாச்சி.., நாங்க இதுவரைக்கும் இப்படி படிச்சதே இல்லீங்க அண்ணாச்சி..,

said...

Super!!!

said...

நல்லா இருந்தது. ரசித்தேன்.

யாருக்குத்தெரியும்? உண்மையாகவே நீங்க சொன்னதெல்லாம் நம்பி யாராவது இதைப் பரப்பிடப் போறாங்க..

said...

சூப்பர் , சரியான பதிவு .. உங்கள் கற்பனை மிகவும் நன்றாக இருக்கிறது. இதற்கு வயித்துபோக்கு சாரி முற்போக்கு பார்டிகளிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். :-) .

-Gokul

said...

அடடே...அருமை..
நல்ல நையாண்டி...நல்ல கற்பனை...
போலிப் பகுத்தறிவு சிங்கங்களுக்கு சரியான சாட்டையடி!

said...

நல்ல காமெடி பதிவு.பல பேர் இப்படிதான் கோக்கு மாக்கதான் யோசிக்கிறாங்க.

said...

அனைவருக்கும் நன்றி!

said...

boss..here from forumhub...... sooper thinking.......chanceh illa kalakitteenga..... first timer to ur blog :)

Tharangini said...

i am at a loss for words manivannan! :)

Anonymous said...

Very nice........ -Samuthran