Saturday, 26 September 2009

குவாண்டின் டராண்டினோவின் இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் - எனது பார்வையில்


இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

குவாண்டின் டராண்டினோ - நவீனத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். ரிசர்வாயர் டாக்ஸ் (Reservoir Dogs), பல்ப் பிக்க்ஷன் (Pulp Fiction), கில் பில் (Kill Bill) போன்ற திரைப்படங்களின் மூலம் முத்திரை பதித்த இவரின் புத்தம் புதிய வெளியீடு இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglourious Basterds) - படத்தலைப்பில் வலிய திணிக்கப்பட்ட எழுத்துப் பிழைகளில் ஆரம்பமாகும் குவாண்டினின் ஸ்டைல் படம் முழுவதும் தொடர்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்கியிருக்கும் சமயம். ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரான்சில் நடைபெறும் கதை. அங்கே உள்ள யூதர்களை தேடிப்பிடித்து தீர்த்து கட்டும் யூத வேட்டைக்காரன் (அட நம்ம விஜய் இல்லீங்க) நாஜிப் படையின் கர்னல் ஹான்ஸ் லான்டா. ஒரு கிராமத்தில் பதுங்கியிருக்கும் யூத குடும்பம் ஒன்றை முழுவதுமாக தீர்த்து கட்டுவதில் இருந்து படம் ஆரம்பமாகிறது. அதிலிருந்து தப்பிப்பது சூசன்னா என்ற ஒரே ஒரு இளம் பெண் மட்டுமே. இவள் சில வருடங்களுக்குப் பின் தனது யூத அடையாளங்களை மறைத்து விட்டு பாரீஸில் உள்ள ஒரு சிறிய திரையரங்கின் உரிமையாளராக உருமாறுகிறாள்.

இதற்கிடையில் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் யூத வீரர்களை கொண்டு லெப்டினன்ட் அல்டோ என்பவனின் தலைமையில் "இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்" என்ற குழு அமைக்கப்படுகிறது (தமிழில் இப்படம் மொழி பெயர்க்கப்பட்டால் என்ன பெயர் சூட்டப்படு!?). முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும், தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் எதிர்க்க முடியும் என்பது இவர்களின் சித்தாந்தம். இவர்களின் பணி ஜெர்மானிய இராணுவத்தை போர்க்களத்தில் எதிர்ப்பது அல்ல. பதிலாக நாஜிக்களை கொடூரமாக கொன்று ஜெர்மானியர்களிடையே பீதியைக் கிளப்புவது. கொல்லப்பட்டவர்கள் தலையின் மேல்பாகத்தை ஞாபகார்த்தமாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்வது இவர்கள் ஸ்டைல் (குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 தலை கொய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு அல்டோ கொடுக்கும் டார்கெட்). நாஜிக்களை குழுவாகக் கொல்லும் செயல் வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக அக்குழுவில் இருந்து ஒரே ஒரு நபரை மட்டும் உயிரோடு விட்டு விடுவார்கள். அப்படி விடுவிக்கப்படும் நபரின் நெற்றியில் ஸ்வஸ்திகா சின்னம் கத்தியால் கீறப்படும், அந்நபரின் நாஜி அடையாளம் கடைசி வரை மறையாமல் இருக்க.

இந்தக் குழு தங்கள் பணியை செவ்வனே செய்து வரும் வேளையில் ஜெர்மனியின் பிரச்சார அமைச்சர் கோபெல்ஸ் (Joseph Goebbels) மேற்பார்வையில் ஜெர்மானிய வீரர்களின் சாகசத்தை விவரிக்கும் ஒரு பிரச்சாரத் திரைப்படம் உருவாகிறது. அத்திரைப்படத்தின் கதாநாயகனுக்கு சூசன்னா மீது ஒரு கண். இவன் வற்புறுத்தலின் பேரில் இப்படத்தை சூசன்னாவின் திரையரங்கில் வெளியிட கோபெல்ஸ் சம்மதிக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஹிட்லர், ஜெர்மனி விமானப்படையின் தளபதி கேரிங் (Hermann Göring), நாஜி கட்சியின் முக்கிய பிரமுகரான மார்டின் பொர்மன் (Martin Bormann) என்று நாஜி கட்சியின் பெரும் தலைகள் அனைவரும் பாரீசில் ஒன்று கூடுகின்றனர். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் யூத வேட்டைகாரனான ஹானிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் குடும்பத்திற்கு நேர்ந்த கதிக்கு பழி வாங்கும் விதமாக, நிகழ்ச்சியின் போது திரையரங்குக்கு நெருப்பூட்டி மொத்த கூட்டத்தையும் கொளுத்த முடிவு செய்கிறாள் சூசனா.

இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்து கொள்ளும் இங்கிலாந்து இராணுவமும் நாஜிக்களை திரையரங்கில் வைத்து மொத்தமாக அழிக்க முடிவெடுக்கிறது. இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் குழுவுடன் இணைந்து செயல்படும் திட்டத்துடன் இங்கிலாந்து வீரர்கள் பிரான்ஸில் இறங்குகிறார்கள். இவர்களுக்கு உதவ ஒரு அழகான உளவாளி நடிகையும் ஆஜர்.

இப்படி இரண்டு கோஷ்டிகளும் ஒரே காரியத்தை ஒரே நேரத்தில் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனால் ஏதும் குழப்பம் ஏற்பட்டதா, எடுத்த காரியம் சுபமா, ஹிட்லரும் மற்ற நாஜிக்களும் என்ன ஆனார்கள், ஹானினால் தன் தலைவர்களை காப்பாற்ற முடிந்ததா போன்ற இதர விவரங்களை உங்கள் வசதிக்கேற்ப வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ, டாரண்டிலோ காண்க!

படத்தில் அல்டோவாக வரும் பிராட் பிட், சூசன்னாவாக வரும் மெலானி, ஜெர்மானிய நடிகையாக வரும் டயான க்ரூகர் (ட்ராய் படத்தில் ஹெலனாக நடித்தவர்), நடிகனாக வரும் டேனியல் பூருஹெல் என அனைவரும் கச்சிதம். பிராட் பிட் தன்னை இத்தாலியராக காட்டிக் கொள்ளும் காட்சியில் காட்பாதர் பட மர்லின் பிரான்டோவை அப்பட்டமா காப்பி அடிக்க, தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால் வில்லன் ஹானாக வரும் கிறிஸ்டேப் வால்ட்ஸ் மற்ற அனைவரையும் இடது கையால் ஓரம் கட்டுகிறார். சுருக்கமாக சொன்னால் - அட்டகாசம். அங்கிளுக்கு ஒரு ஆஸ்கார் பார்சல்!

டராண்டினோவின் புகழ் பெற்ற நான்-லீனியர் பாணி இதில் கிடையாது. படம் உங்கள் மூளையை குடையாமல் சீராக நேர் கோட்டில் செல்கிறது. இப்படத்தை தன் மாஸ்டர் பீஸ் என்று சொன்னவர் தன் முத்திரையான நான்-லீனியர் திரைக்கதை உத்தியை குத்தாமல் விட்டது ஆச்சரியம் தான்.

டராண்டினோவின் படங்களில் தென்படும் மற்றுமொரு விசேஷம் - வன்முறை. ரிசர்வாயர் டாக்ஸ் படத்தில் வரும் அந்த காவலரின் காதறுக்கும் நேரடியான வன்முறை காட்சியானாலும் சரி, கில் பில் படத்தில் வரும் பகடி கலந்த கத்தி சண்டை காட்சியானாலும் சரி வன்முறை ரசிகர்களுக்கு சரியான விருந்து. இந்தப் படத்தில் வன்முறைக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் இருந்தாலும் ஏனோ டராண்டினோ அடக்கியே வாசித்திருக்கிறார். நாஜி வீரன் ஒருவனை பேஸ்பால் மட்டையால் அடித்து நொறுக்கும் காட்சி மட்டுமே விதிவிலக்கு.

வசனமே இல்லாமல் ஆக்சன் படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசும் பாத்திரங்களையும் நீண்ட உரையாடல்களையும் கொண்டு க்ரைம் / ஆக்க்ஷன் கதைகளைப் படைத்தவர் டராண்டினோ. ரிசர்வாயர் டாக்ஸ் படத்தில் வரும் மடோனா பாடல் மற்றும் உணவகத்தில் டிப்ஸ் கொடுப்பதை பற்றிய உரையாடல்கள், பல்ப் பிக்க்ஷன் படத்தில் சாமுவேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பைபிள் வாசகம் சொல்லிக் கொல்லும் வசனம் போன்றவை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது, நம் திருவிளையாடல் திரைப்பட வசனத்தைப் போல! டராண்டினோவின் மற்ற படங்களை ஒப்பிடுகையில், இந்தப் படத்தில் வசனம் கொஞ்சம் சுமார் தான் என்றாலும் சில இடங்களில் டராண்டினோவின் டச் இல்லாமல் இல்லை. ஒரு உதாரணம்

மனதில் ஒன்று நினைத்துக் கொள்வேன், அது என்ன என்று நீ கண்டுபிடி என்பது போன்ற் ஒரு விளையாட்டின் போது வரும் வசனம்
முதல் நபர்: நான் காட்டுப் பகுதியில் இருந்து அமெரிக்கா சென்றவன் என்று கூறினாய். நான் போகும் போது படகில் சென்றேனா?
இரண்டாம் நபர்:
ஆம்

முதல் நபர்: என் விருப்பதிற்கு மாறாக இழுத்துச் செல்லப்பட்டேனா?
இரண்டாம் நபர்:
ஆம்

முதல் நபர்: படகில் செல்லும் போது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தேனா?
இரண்டாம் நபர்:
ஆம்

முதல் நபர்:
நான் ஒரு நீக்ரோவா?

இரண்டாம் நபர்:
இல்லை

முதல் நபர்:
அப்படி என்றால் நான் கிங்காங்.
அதே போல் முதல் காட்சியில் பிரஞ்சு விவசாயியை ஹான் விசாரிக்கும் போது யூதர்களை எலிகளுக்கு ஒப்பிடும் வசனமும் நச்!

டராண்டினோ படங்களில் உள்ள மற்றுமொரு ஸ்பெஷாலிட்டி - பின்னணி இசைக்கு அவர் பயன்படுத்தும் பழைய பாடல்களும் ஆல்பம் இசைகளும் (Kill Bill - Twisted nerve, Woo Hoo. Pulp Fiction - Jungle Boogie, Son of a preacher man, Reservoir Dogs - Stuck in the middle). இதிலும் அப்படியே என்றாலும் மற்ற படங்கள் அளவிற்கு என்னை கவரவில்லை. Rabbia e Tarantella என்ற இராணுவ ட்ரம் பீட் மட்டுமே பிடித்தது. மேலும் சில முறை கேட்டால், மற்ற பாடல்களும் பிடிக்கலாம்!

ஆக, டராண்டினோவின் மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது நான்-லீனியர் தன்மை, வன்முறை, வசனம், பாடல் என்று அனைத்து தளங்களிலும் இது ஒரு படி கீழே தான். இருந்தாலும் டராண்டினோ ரசிகர்கள் தவற விடக்கூடாத படம். மற்றவர்களும் தான்.

Wednesday, 23 September 2009

பாட்டி வடை சுட்ட கதையும் என்னைப் போல் ஒருவனும்.

இன்று எனது மகனுக்காக வாங்கிய ஒரு கதைப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு குறிப்பிட்ட கதையை படித்ததும் அதிர்ந்து போனேன். இக்கதைகளை படிக்கும் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஒரே நோக்கத்துடன் படைக்கப்பட்ட கதை குப்பை அது. அதைப் படித்த போது ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. இந்துத்துவம், பார்பனீயம், முதலாளித்துவம் என்று உலகில் உள்ள அனைத்து அயோக்கியத்தனத்தையும் ஒன்றாக கரைத்து வாசகர்களின் மேல் வாந்தியெடுப்பதை தவிர வேறு எந்த வித குறிக்கோளும் இல்லாத அந்த கதை இதோ இது தான்

ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது.

முதலில் பாட்டியை கவனிப்போம். ஒரு வயதான பெண்மணியை குறிப்பிட வேறு பல சொற்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை இவள் "பாட்டி" என்றே அழைக்கப்படுகிறாள். கிழவி, ஆயா போன்ற நலிந்த, நசுக்கப்பட்ட மக்களின் பாஷையில் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை. இவள் பாட்டியாக இருப்பதற்கும் கிழவியாக இல்லாமல் போனதற்கும் காரணம் ஒன்று தான் - இவள் ஆதிக்கசாதியின் பிரதிநிதி. இவள் எதற்காக வடை விற்க வேண்டும்? ஏன் சிக்கன் 65 அல்லது மட்டன் சுக்கா விற்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால் மேலும் பல படிமங்கள் புலப்படும்.

அடுத்தது காக்கா. உலகில் எத்தனையோ பறவைகள் இருக்க எதற்காக இந்த கதையில் காக்கா? ஏன் ஒரு கிளியோ, வெண்புறாவோ, அன்னமோ வடையை திருடவில்லை? காரணம் இல்லாமலில்லை. இந்து சாஸ்திரப்படி பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன். காலில் அழுக்கு இருக்கும். அழுக்கு கருப்பாக இருக்கும். அதாவது பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்கள் கருப்பாக இருப்பார்கள். ஆக கருப்பான காகம் இங்கே சூத்திரனின் குறியீடு. ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் நாலு என்ற சுலபமான கணக்கு தான் இதுவும். இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொறு விசயம் இருக்கிறது. இந்த கதையில் ஒரு இடத்தில் கூட "காகம்" என்ற மரியாதை தொனிக்கும் சொற்பிரயோகம் கிடையாது. கதை முழுவதும் "காக்கா" என்ற மரியாதையற்ற வார்த்தை தான். பாட்டி கிழவியாக கூடாது. காக்கா காகம் ஆக முடியாது. இது தான் இவர்களின் தர்மம்.

இக்கதையில் வரும் நரி ஒரு புத்திசாலி. நல்ல வார்த்தைகளில் பேசும் ஒரு கனவான் தோற்றம் அதற்கு. மேலுக்கு நயவஞ்சகவாதி போல சித்தரிக்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அது பற்றி பிறகு பேசலாம்.

இத்தகைய பாத்திரப் படைப்புக்களின் இடையே இந்த கதையை கட்டுடைத்தால் நமக்கு நமக்கு மிஞ்சுவது கீழ் கண்ட வினாக்கள் தான்

1) இக்கதையில் காகம் கிழவியை ஏமாற்றியதை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டு, கிழவி இன்று வரை மற்றவர்களை ஏமாற்றி வருவதை இருட்டடிப்பு செய்வது ஏன்? நேற்று சுட்ட ஊசிப் போன வடையை விற்கும் ஆயிரக்கணக்கான கிழவிகளை பற்றி பக்கம் பக்கமாக எழுத விசயங்கள் இருக்க, இந்த கதையில் அதைக் கண்டித்து ஒரே ஒரு வார்த்தை கூட இல்லையே?

2) கிழவியை ஏமாற்றிய காக்கைக்கு வடை பறி போனது தண்டனையாம். சரி நல்லது. காக்கையை ஏமாற்றிய நரிக்கு மட்டும் என்ன தண்டனை? கதையை முழுவதும் 12 தடவை படித்து விட்டேன், அது மட்டும் தெரியவில்லை. இளைத்தவன் என்றால் தண்டனை. தடித்தவனுக்கு புத்திசாலி பட்டமா?

3) நரி பாட சொன்னதாம் காக்கா உடனே வாயில் வடை இருப்பதையும் மறந்து பாடியதாம். உலகில் உள்ள அனைத்து காகங்களையும் முகஸ்துதிக்கு மயங்கும் முட்டாளாக சித்தரிப்பதைத் தவிர இந்த காட்சிக்கு வேறு என்ன பொருள் கொள்வது? முட்டாள் நரி இல்லையா? முட்டாள் பாட்டி இல்லையா? அது ஏன் காகம் மட்டும் முட்டாள்?

4) இந்த வரியை பாருங்கள் - "காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாட"
இந்த வரியில் தான் எவ்வளவு ஒரு ஆணவம் கலந்த அயோக்கியத்தனம்? காக்கையால் குயில் போல பாட முடியாமல் பரிதாபமாக "கா கா" என்று கத்துவதை கதையாக்கி கேலி செய்யும் அளவுக்கு வன்மம் தெரிக்கிறது. தியேட்டரில் சிரிக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மணிவண்ணா?

பி.கு: எதையும் நேர் கோட்டில் பார்த்தால் முற்போக்குவாதி கிடையாதாம். அதான் ஒரு 42 டிகிரி கோணத்தில் இருந்து பார்த்தேன். இப்பொ நானும் முற்போக்குவியாதி தான். அப்போ நீங்க?