Monday, 1 June 2009

மனம் போன போக்கிலே... (01/06/2009)

கிரிக்கெட்டில் ஒரு ஆட்டக்காரர் 25 ஓட்டங்கள் எடுத்தால் அவரை தலை மீது தூக்கி வைத்து ஆடுகிறார்கள். ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடிவிட்டால் திரையரங்கில் கும்பாபிஷேகமே நடக்கிறது. தேர்தலில் 25 இடங்களில் வென்றால் வரலாறு காணாத வெற்றி என்று ஊரெங்கும் போஸ்டர். கிரிக்கெட்டுக்கும் சினிமாவிற்கும் அரசியலுக்கும் கிடைக்கும் மரியாதையில் அயிரத்தில் ஒரு பங்கு கூட இலக்கியத்துக்கு கிடையாது. ஒரு எழுத்தாளன் பதிவெழுத வந்த இருபதே மாதங்களுக்குள் 25 பதிவுகள் எழுதி இருக்கிறானே அதை பாராட்டி ஒரு விருது, சரி வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு விழா? அட அது கூட தேவையில்லை, போன பதிவைப் படித்த லட்சக்கணக்கான வாசகர்களில் ஒரே ஒருவராவது நாலு வார்த்தை பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கலாம் அல்லவா? ம்ஹும் ஒரு புண்ணாக்கும் கிடையாது. வருகிற கோபத்திற்கு சூடாக ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு பூன் மொழியில் பதிவெழுதலாம் என்று இருக்கிறேன்.

++++++++++++++++++++++++

ஒரு எழுத்தாளனின் தரத்தை நிர்ணயிக்க பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் சரியான தராசு அல்ல என்ற கருத்தில் நான் தெளிவாகவே இருக்கிறேன். நல்ல வாசகர்கள் கடிதம் எழுதுகிற ரகம் இல்லை என்றார் சுஜாதா. பின்னூட்டங்களுக்கும் அது பொருந்தும். மேலே சொன்ன மாதிரி பூன் மொழியில் பதிவெழுதாமல் இன்னுமும் தமிழில் தொடர்ந்து எழுதக் காரணம் என்னை விடாமல் படித்து வரும் வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்ற காரணத்தினால் தான். சென்ற வாரம் என் பதிவுகளுக்கு சப்ஸ்க்ரைப் செய்த என் நாலு வயது மகனையும் சேர்த்து இதுவரை மொத்தம் ஆறு பேர் என் பதிவுகளை கூகிள் ரீடரில் இணைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் என் வந்தனம். இந்த ஆறு பேரில் நான் மட்டுமே வெவ்வேறு கூகிள் அக்கவுண்டுகளின் மூலம் இரண்டு முறை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறேன். இது தவிர என் மனைவி, என் மகன் மற்றும் கூகிள் ரீடரை எப்படி உபயோகிப்பது என்று டெஸ்ட் செய்ய (மட்டும்) என் பதிவை இணைத்த என் தோழி ஆகிய ஐந்து பேரை கழித்து விட்டு பார்த்தாலும் இது பெரிய சாதனை தான். இப்பொழுது எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் - யார் அந்த ஆறாவது நபர்?

பிற்சேர்க்கை: ஆச்சரியம்! இந்த பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே சப்ஸ்க்ரைப் செய்தவர்களின் எண்ணிக்கை எழாக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது எனக்கு இருப்பதெல்லாம் இரண்டு கேள்விகள் மட்டுமே
1) யார் அந்த ஆறாவது நபர்?
2) யார் அந்த ஏழாவது நபர்?

++++++++++++++++++++++++

ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது தான் இலக்கியவாதிகளின் முக்கிய அடையாளம் என்ற அளவுகோலின் படி பார்த்தால், பதிவுலகில் எழுதி வரும் இலக்கியவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது நிச்சயம். யாரெல்லாம் 'தெருப் பொறுக்கி' எழுத்தாளர்கள் என்று தெளிவாக தெரியாத வரையில் பதிவர் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது. மீறி கலந்து கொண்டால் கோஷ்டி சண்டையின் நடுவே சிக்கி மண்டை உடைபடலாம். எச்சரிக்கை!

பை தி வே, இலக்கியம் பொழுதுபோக்கல்ல என்று யார் சொன்னது?

++++++++++++++++++++++++

இந்த பதிவு முழுவதும் இலக்கியம், இலக்கியவியாதிகள் என்று கொஞ்சம் சீரியசாகவே போய் விட்டதால் லைட் வெயிட்டாக வேறு விசயம் ஏதாவது பேசலாமா? டான் பிரவுனின் (Dan Brown) புகழ் பெற்ற 'The Da Vinci Code' நாவலை விட அவரின் முந்தைய நாவலான 'Angels and Demons' எனக்கு கொஞ்சமே கொஞ்சம் அதிகம் பிடித்திருந்த காரணத்தினால் சென்ற வாரம் அந்தப் படத்தைப் பார்த்தேன். நாவலுக்கும், திரைக்கதைக்கும் இடையே நிறையவே மாற்றங்கள். உதாரணம் - கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான CERN நிறுவனத்தின் தலைமை அதிகாரி படத்தில் இல்லை. படத்தின் பிற்பகுதியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். இவை அத்தனையும் தாண்டி, படம் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. இதற்கு பேசாமல் ஸ்டார் டிரக் (Star Trek) போயிருக்கலாம்.

++++++++++++++++++++++++

2 குட்டு:

said...

//அந்த ஆறாவது நபர் யார்?//

உங்க சின்ன வீடா இருக்குமோ? சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.

ரொம்ப நல்ல பதிவராக இருக்கீங்க.

Anonymous said...

ரங்குடு said...

/* ரொம்ப நல்ல பதிவராக இருக்கீங்க */

இன்னும்மா இந்த ஊரு நம்புது..?