Thursday, 9 April 2009

மனம் போன போக்கிலே... (15/04/2009)

மூன்று வாரம் விடுமுறையில் இந்தியா செல்லலாம் என்று முடிவெடுத்ததுமே விஜய் மல்லையாவின் ரசனையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து கிங் பிஷர் ஏர்லைன்ஸை தேர்ந்தெடுத்தேன். சிறிது ஏமாந்து தான் போனேன். லண்டன்-பெங்களூரு விமானத்தில் இருந்த பணிப்பெண்களை விட பெங்களூரு-மதுரை விமானத்தில் இருந்த பெண்கள் பரவாயில்லை. மல்லையாவிற்கு மெயில் அனுப்பி இருக்கிறேன், பார்த்து சரி செய்தால் சந்தோஷம்.

+++++++++++++++++++++++++++++++++

நான் பார்த்த வரையில் தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தில் நல்ல முன்னேற்றம். பெரும்பாலும் நாலு தடங்கள், சில இடங்களில் ஆறு! ஆனால் இருக்கும் நாலு தடங்களில் இடதுபுறம் இருக்கும் இரண்டு போவதற்கு, வலதுபுறம் இருக்கும் இரண்டு வருவதற்கு என்று ஓட்டுனர்களுக்கு யாரவது சொன்னால் பரவாயில்லை. அனைத்து தடங்களிலும் வருகிறார்கள் அனைத்து தடங்களிலும் போகிறார்கள். இவர்கள் இப்படி ஓட்டும் வரை நாலு என்ன நாற்பது தடங்கள் அமைத்தாலும் உபயோகம் லேது.

+++++++++++++++++++++++++++++++++

மதுரை, கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் ஒரு அற்புதக் காட்சியை கண்டேன். வயது வித்தியசம் இல்லாமல் பெரும்பாலான மக்களின் கையில் ஒரு டென்னிஸ் மட்டை! ஆகா தமிழகத்தில் விளையாட்டு ஆர்வம் அதிகமாகிவிட்டது. வரவேற்கத்தக்க மாற்றம் தான் என கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டேன். பிறகு தான் தெரிந்தது அது டென்னிஸ் மட்டை கிடையாது என்பது. கொஞ்ச நேரம் கரன்டில் சார்ஜ் செய்து விட்டு அடித்தால் கொசு எல்லாம் 100% செத்து விழும் என்ற உத்திரவாதத்துடன் ISI CSI முத்திரை குத்தி வரும் கொசு அடிக்கும் கருவியாம்! (CSI -> Chinese Standards Institution)

+++++++++++++++++++++++++++++++++

இந்த பயணத்தின் போது சில பதிவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். திட்டமிட்டபடி கொங்கு நாடு செல்ல முடியாததால் பரிசல், செல்வேந்திரன், லதானந்த் அங்கிள், வெயிலான், வால்பையன் ஆகியோரை சந்திக்க முடியவில்லை. மதுரையில் இருந்த 10 நாட்களில் சீனா அய்யா, தருமி அய்யா ஆகியோரையாவது பார்த்துப் பேசி இருக்கலாம். விதி செய்த சதியால் இந்தியாவில் இருந்த மூன்று வாரமும் இணையத்தின் பக்கம் திரும்பக் கூட முடியாத அளவிற்கு அலைச்சல். அடுத்த முறை வரும் பொழுது கண்டிப்பாக...

+++++++++++++++++++++++++++++++++

பெங்களூருல் புதிய விமான நிலையம் ஊருக்கு வெளியே சிறியதாக அழகாக இருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து பொம்மனஹல்லி செல்ல டாக்ஸி பிடிக்கலாம் என்று கட்டணம் கேட்டதும் என் முடிவை மாற்றிக் கொண்டேன். அடுத்த விமானம் பிடித்து மதுரை வந்து, மதுரையில் இருந்து ட்ரெயின் ஏறி, பெங்களூர் கண்டோன்மென்டில் இறங்கி டாக்ஸி பிடித்து பொம்மனஹல்லி போய் சேர்ந்தேன். நேரம் அதிகம் ஆனாலும் செலவு கம்மி!

+++++++++++++++++++++++++++++++++

பணிப்பெண்கள் விசயத்தில் சொதப்பினாலும் தலைக்கு 45 கிலோ லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி அளித்த காரணத்தால் கிங் பிஷருக்கு ஒரு ஓ! நல்ல "கனமான" புத்தகங்களாக அள்ளிக் கொண்டு வந்து விட்டேன்.
வாங்கியதில் சில - சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( 2 தொகுதிகள்) ,விஞ்ஞானச் சிறுகதைகள், எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம், ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சாருவின் ஸீரோ டிகிரி, மருதனின் விடுதலைப் புலிகள், இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு, செல்லமுத்து குப்புசாமியின் பிரபாகரன்: ஒரு வாழ்க்கை, Prodigyயில் இருந்து ஏழு புத்தகங்கள். இது தவிர முன்னமே வாங்கி பாதி படித்தும் படிக்காமலும் வைத்திருந்த சில புத்தகங்களையும் தூக்கிக் கொண்டு வந்தாகி விட்டது (சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், புறநானூறு ஓர் எளிய அறிமுகம், கதாவிலாசம், இந்திரா பார்த்தசாரதியின் சில புத்தகங்கள் இன்ன பிற).

கிங் பிஷர் கொடுத்த 45 கிலோவில் 37 கிலோ இதற்கே சரியாகிப் போனது. மீதம் 8 கிலோவில் அடைத்துக் கொண்டு வந்த அப்பளம், மோர் மிளகாய், மாவடு, மசாலாப் பொடியை வைத்து அடுத்த பயணம் வரை காலம் கழிக்க வேண்டும். யாராவது லண்டன் பக்கம் வந்தால் சொல்லுங்கள். கொஞ்சம் சமையல் பொருட்கள் தேவைப்படுகிறது. அப்படியே கொஞ்சம் புத்தகங்களும் :)

+++++++++++++++++++++++++++++++++

இது வரை இங்கு கொண்டு வந்த புத்தகங்களையும் திரைப்பட டி.வி.டிகளையும் பார்த்தாலே தலை சுத்துகிறது. மொத்தமாக இந்தியா திரும்ப வேண்டிய நிலை வந்தால் ஒரு சரக்குக் கப்பலே தேவைப்படும். சின்னதாக ஒரு சரக்குக் கப்பல் என்ன விலையாகும் என்று யாருக்காவது தெரியுமா?

+++++++++++++++++++++++++++++++++

சரக்கடிப்பவர்கள் கிங் பிஷர் பெயரைப் பார்த்து அதிகம் ஆசைப்பட்டு ஏறி ஏமாற வேண்டாம். முதல் ரவுண்டு வோட்காவில் கொஞ்சம் ஆரஞ்சு ஜூஸ் கலந்து கொடுத்தார்கள். இரண்டாவது ரவுண்டில் ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் வோட்கா. மூன்றாவது நாலாவது ரவுண்டு எல்லாம் வெறும் ஆரஞ்சு ஜூஸு மட்டும் தான். கொடுமை! :(

Wednesday, 8 April 2009

அமுக்கான் (எ) அமுக்குப் பேய் (எ) Sleeping Paralysis


லதானந்த் அங்கிள் அமுக்கான்னு ஒரு பதிவு போட்டு சிரியஸா இல்லாம சீரியஸா பதில் சொல்ல சொல்லி இருக்காரு. அவரு (தனியா) தூங்கிகிட்டு இருக்கும் போது யாரோ அமுக்குற மாதிரி இருக்காம். கைய கால அசைக்க முடியாம அதலபாதாளத்துக்குள்ளாற விழுகுற மாதிரி ஒரே பீலிங்ஸாம். ரொம்பவே பயந்துட்ட மாதிரி தெரியுது.

எங்க ஊரு பக்கம் இதுக்கு பேரு 'அமுக்குப் பேய்'. அலோபதி மருத்துவத்துல இத Sleeping paralysis-ன்னு சொல்லுவாங்க. இந்த அனுபவம் எல்லோருக்கும் ஒரு தடவையாவது வந்திருக்கும்னு சொல்லுறாங்க. உங்களுக்கு இது வரைக்கும் இந்த அனுபவம் வந்தது இல்லைன்னா ஒன்னு நீங்க ரொம்ப சின்ன புள்ளைன்னு அர்த்தம். இல்லாட்டி போனா பேய் அமுக்குறது கூட தெரியாம நீங்க ஓவர் மப்புல தூங்குறீங்கன்னு அர்த்தம்.


இந்த பேய் ஏன் வருதுன்னு பார்க்கலாம். பொதுவா நீங்க தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது உங்க மூளை உடம்பு ரெண்டும் ஒரே நேரத்துல எழுந்திரிக்கனும். ஆனா சில சமயம் மூளை சுறுசுறுப்பா எழுந்த பிறகும் உடம்பு மட்டும் சோம்பேறித்தனமா படுத்துக்கிட்டே இருக்கும். மூளைய பொருத்த வரைக்கும் உங்களுக்கு முழிப்பு வந்தாச்சு ஆனா உங்க மத்த புலன்கள் எல்லாம் இன்னும் முழிக்காததால மூளை தர்ற சிக்னல் எதுவும் உங்க உடம்புக்கு எட்டாது. உங்க மூளை ஆணையிட்டாலும், மனசு ஆசைப்பட்டாலும் உங்களால கை, கால், மூக்கு, முடி எதையுமே அசைக்க முடியாது. என்னடா நான் கைய தூக்க சொல்லி ஆர்டர் போட்டும் இந்த கை சும்மாவே இருக்கேன்னு மூளையும் கொஞ்சம் குழம்பிப் போயிடும். அந்த மாதிரி நேரத்துல நீங்க சின்ன வயசுல படிச்ச திகில் கதை எல்லாம் உங்க மூளைக்கு ஞாபகம் வந்து...அமுக்குப் பேய்!

சரி இந்த மூளையும் உடம்பும் வேற வேற நேரத்துல எந்திரிக்க என்ன காரணம்? அது இன்னும் யாருக்கும் சரியா தெரியலை. ஒழுங்கில்லாத தூக்கம், மனச்சுமை, புது சூழ்நிலை இது மாதிரி வெண்டைக்காய விளக்கெண்ணைல முக்கி எடுத்த மாதிரி காரணம் சொல்லுறாங்க. நீங்க கைய கால அசைக்காம நல்ல ட்ரீம் அடிச்சிக்கிட்டு இருக்க சொல்ல, டமால்னு முழிப்பு வருதுன்னு வச்சிக்கோங்க, உங்க உணர்ச்சி எல்லாம் திரும்பிடும். ஆனா உங்க மூளையில ஒரு பார்ட் மட்டும் இது வெறும் கனவு தான், இதுக்கு போயி எதுக்கு கைய கால ஆட்டிக்கிட்டு கம்முன்னு கிடன்னு உடம்புக்கு ஆர்டர் போடுறதும் ஒரு காரணம்னு ஆராய்ஞ்சி பிரிச்சி மேஞ்சி கண்டுபிடிச்சி இருக்காங்க.

இந்த பிரச்சனை அடிக்கடி வந்தா, இனிமே மல்லாக்க படுக்காம குப்பற படுங்க. அமுக்கான் வர்றது குறையும்.