Friday, 6 February 2009

மனம் போன போக்கிலே... (06/02/2009)

விடுபட்டவை, அவியல், பொரியல், கூட்டாஞ்சோறு, காக்டெய்ல், சேவல் வால் வரிசையில்....இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "மனம் போன போக்கிலே"

********************

ஒரு வழியாக ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்தாகி விட்டது. நல்ல படம் தான் சந்தேகம் இல்லை. ஆனால் உலகமே பாராட்டும் அளவிற்கு இந்தப் படத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நம்ம ஊரில் சொல்வார்களே "ஒரு தடவை பார்க்கலாம்" என்று, அந்த அளவுக்கு தான் இருக்கிறது. ஒரு வேளை நான் தான் உலக சினிமா தெரியாத ஞான சூன்யமோ என்னவோ? படத்தின் பலம் திரைக்கதையும் படத்தொகுப்பும். படத்தின் பலவீனம் நம்ப முடியாத செயற்கைத்தனம். இப்படத்தில் அமிதாப்பின் கையெழுத்தை வாங்க மலம் அப்பிய உடம்புடன் ஜமால் ஓடுவதை இயற்கையான காட்சியமைப்பு என்று கூறுபவர்களின் கண்களில், அதே மலம் அப்பிய சிறுவனுக்கு அமிதாப் கையெழுத்து போடும் காட்சி எப்படி செயற்கையாக படாமல் போனது என்பது ஆச்சிரியமே! இது போல ஆயிரம் சொல்லலாம்.

ஏஆர் ரஹ்மான் ஒரு ஆச்சரியம். ஒரு புள்ளியில் இமயம் தொடும் இவர் மறுகணம் அங்கிருந்து சறுக்கி அதாள பாதாளத்தில் விழுகிறார். சலீம் ஜாவத்தை முதன் முதலாக சந்திக்கும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை அவர் சறுக்கிய இடத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டிய இடத்தில் உடைந்து உடைந்து ஒலிக்கும் ஒரு இரைச்சல். அதே சமயம் படம் முடியும் போது வரும் பாடலின் ரிதம் அசத்தல்.

ஆஸ்கார் கிடைக்கலாம் ஆச்சரியம் இல்லை. கோல்டன் க்ளோப் கிடைத்தது தான் ஆச்சரியம்!

********************

இந்த ஊரில் "வெற்றிப்படம்" படிக்காதவன் கூட ஓடுகிறது ஆனால் 'நான் கடவுள்' எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. இந்தப் படம் பார்க்கும் வரை ஒரு விமர்சனத்தையும் படிக்கக் கூடாது என்று இருந்தேன், ஆனால் உண்மைத் தமிழன் மற்றும் யுவகிருஷ்ணா எழுதிய பதிவுகளை பார்க்கும் பொழுது எழுந்த டெம்டேஷனை கட்டுப்படுத்த முடியாமல் க்ளிக்கி விட்டேன். படம் பார்க்கும் போது ஒரு 3 மணி நேரம் செலக்டிவ் அம்னீஷியா வந்தால் அது நான் அடுத்த ஜென்மத்தில் செய்யப் போகும் புண்ணியம்.
லக்கி (எ) யுவகிருஷ்ணா ஜெயமோகனின் வசனத்தைப் பற்றி எழுதி இருப்பதை படித்த போது மனதில் தோன்றியது - இப்படத்தைப் (குறிப்பாக ஜெயமோகனின் வசனத்தைப்) பற்றிய சாருவின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதே! :)

********************

இந்திய இலங்கை அணிகளுக்கிடையே இப்பொழுது இலங்கையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரைப் பற்றி எழுத கொஞ்சம் விசயம் இருக்கிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இதைப் பற்றி எழுதினால் அது சொந்த செலவில் சூன்யம் வைத்த கதையாக போகும் என்பதால்....விடு ஜூட்!

********************

ஒரு கேள்வி: நீச்சலடிப்பது உடலை மெலிய வைக்கும் என்பது உண்மையானால், ஏன் எல்லா திமிங்கலங்களும் குண்டாக இருக்கிறது?

********************

4 குட்டு:

Raja said...

//இப்படத்தைப் (குறிப்பாக ஜெயமோகனின் வசனத்தைப்) பற்றிய சாருவின் விமர்சனம் என்னவாக இருக்கும்//

kusumbu?

said...

நீச்சலடிப்பது உடலை மெலிய வைக்கும் என்பது உண்மையானால், ஏன் எல்லா திமிங்கலங்களும் குண்டாக இருக்கிறது?

ரூம் போட்டு யோசிப்பீங்களா?

Anonymous said...

As an Indian and Tamilan, you should be proud about AR Rahman's music instead of criticising

said...

ரஹ்மான் இசையை யார் இப்பொழுது விமர்சித்தாலும் இந்த பதில் தான் வரும்....அதர்காக மனதில் பட்டதை கூட சொல்ல கூடாத என்ன?

படம் ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தது, ஆனால் படத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பின் கதை காண்பிப்பது சிறுது நெரத்திலேயே கொட்டாவி விட வைத்து விட்டது.