Sunday, 30 November 2008

என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?

என் பதிவுலக நண்பர் ஒருவர் சமீபத்தில் நடந்த மும்பை பிரச்சனையைப் பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார். ஆனால் அதை யாரும் படிக்க முடியாது.

அவர் எழுதி ட்ராப்டில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவை படித்த நான் எப்பொழுது இதை வெளியிடப் போகிறீர்கள் என்று கேட்ட போது அவர் அந்தப் பதிவை வெளியிடப் போவதில்லை என்று கூறினார்.

"ஏன்?"

"தீவிரவாதத்தைக் கண்டிக்கும் இந்தப் பதிவை வெளியிட்டால் எனக்கு இந்துத்துவா முத்திரை குத்தப்படும். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என் மனதில் பட்டதை சொல்லியே தீருவேன் என்ற தைரியமும், பக்குவமும் எனக்கு இன்னும் வரவில்லை. எதற்கு வீண் வம்பு?"

"ஆனால் உங்கள் பதிவில் எந்த ஒரு மதத்தையும் குறை கூறவில்லையே? தீவிரவாதத்தை எதிர்த்துத் தானே எழுதியிருக்கிறீர்கள்?"

"அது எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பதிவுலகில் உலா வரும் போலி மதச்சார்பற்ற பதிவர்களுக்கு அது வேறு மாதிரியாகத் தான் படும்"

"இதைப் பதிப்பித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது?"

"இப்பொழுது மும்பை பற்றி எழுதும் நான் மாலேகான் குண்டு வெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதாது ஏன் என்று கேள்வி வரும். அதற்கு காரணம் என் மதவெறியும் சாதி புத்தியும் தான் என்று ஒரு பிரச்சாரம் நடக்கும். அப்படி ஒரு முறை முத்திரை குத்தப்பட்டு விட்டால் கடைசி வரைக்கும் அந்தக் கறை அழியாது. அவர்களுக்கு பதில் சொல்ல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. விடுங்க"

"மாலேகான் குண்டு வெடிப்பு நடந்தது 2006- இல். அப்பொழுது உங்களுக்கு வலைப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாது. நீங்கள் பதிவெழுத வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது என்று சொல்ல வேண்டியது தானே?"

"சொன்னால்? புரிந்து கொள்வார்களா? நான் அதைக் கண்டித்து ஒரு பதிவாவது எழுதாத வரையில் இரைச்சல் நிற்காது. அந்த சம்பவத்தை பற்றி கண்டித்து எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அப்படி எழுதினால் இன்னொரு கோஷ்டி 2002இல் நடந்ததை பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்பும். இதற்கு ஒரு முடிவே கிடையாது"

"இது விதண்டாவாதம்"

"நீங்களும் இந்த பதிவுலகில் சிறிது காலமாக இயங்கி வருகிறீர்கள். நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்"


யோசித்துப் பார்த்தால் அந்த நண்பர் சொன்னதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்தால் கீழ் வெண்மணியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது, கருணாநிதி ஆட்சியைக் குறை கூறினால் ஜெயலலிதா ஆட்சியை ஏன் குறை கூறவில்லை என்று கேள்வி எழுப்புவது, தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எழுதினால் சென்ற பா.ஜ.க ஆட்சியின் போது தூங்கிக் கொண்டிருந்தாயா என்று சாடுவது. இது போன்ற எல்லா விவாதத்துக்கும் சாதி/மதப் பூச்சு வேறு!

அரசியல் மட்டுமல்ல. அனைத்து தளத்திலும் இதே வாதம் தான். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் ஒரு பதிவில் ரஜினியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரியென்று ரஜினியையும் விமர்சனம் செய்தால் எம்.ஜி.ஆர் மட்டும் என்ன புனிதமா என்ற கேள்வி மற்றொரு பக்கமிருந்து. எம்.ஜி.ஆரை பற்றியும் எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது, எம்.ஆர்.இராதா பற்றியும் எழுதினாலே ஆயிற்று என்றொரு கூட்டம். ஆக ஒரு சினிமா விமர்சனத்தை அரசியலாக மாற்றியாகி விட்டது.

இன்று மும்பை பயங்கரவாதத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் மாலேகான் குண்டு வெடிப்பை கண்டித்து ஒரு வரியாவது எழுதி விட்டுத் தான் தொடங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்தாகி விட்டது. மாலேகான் பற்றி எழுதும் முன்னர் 2006இல் நடந்த மும்பை இரயில் குண்டு வெடிப்பைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் குஜராத் கலவரம் பற்றி ஒரு கண்டனம். அப்படியே நூல் பிடித்துப் போனால் இராம ஜென்ம பூமி, மகாத்மா காந்தி கொலை, முகமதியர் படையுடுப்பு, யூதர்கள் வரலாறு, ஆதாம் ஏவாள், குரங்கு, அமீபா....

இப்படி எந்த ஒரு வாதத்திற்கும் முன் வாதம் ஒன்று தேவை என்று கூறும் அறிவு ஜீவி நண்பர்களுக்கு ஒரு கேள்வி - ஒரு விசயத்தைப் பற்றி எழுதும் முன்னர் அது சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தைப் பற்றியும் எழுதி விட்டுத் தான் மெயின் மேட்டருக்கே வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி? இந்த அளவுகோலின் படி பார்த்தால் ஒவ்வொரு பதிவரும் உலக வரலாற்றை முழுதுமாக எழுதி விட்டுத்தான் பதிவெழுதவே உட்கார வேண்டும். ஒரு சம்பவத்தை ஒருவர் கண்டித்து எழுதவில்லை என்பதினால் மட்டுமே அவர் அந்த சம்பவத்தை ஆதரிக்கிறார் என்ற முடிவுக்கு எப்படி வர முடிகிறது உங்களால்?

அதுவும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொதுப்படையாகவே இருக்கிறது - "இன்று இப்படி எழுதும் எல்லோரும் அன்று குப்பறப்படுத்து குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்களா?" என்ற ரீதியில். இன்று இந்த நபர் இப்படி கூறுகிறார் ஆனால் அன்று அப்படிக் கூறினார் என்று ஆதாரத்தோடு எல்லாம் சொல்வதில்லை. போகிற போக்கில் புழுதி வாரி விடுவதோடு சரி. அவர் அந்த விசயத்தை ஆதரிப்பதாக கூறியதே இல்லையே என்று கேட்டால், அவர் அந்த விசயத்தை எதிர்ப்பதாக என்றுமே எழுதியது இல்லையே, அது ஒன்றே சாட்சி அவர் அந்த சம்பவத்தை ஆதரிப்பதற்கு என்று நியாயப்படுத்துகிறார்கள்.

வடிவேலு பாசையில் சொன்னால் "சுத்த சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு?" சந்திரமுகி பிரபு ஸ்டைலில் (!?) சொன்னால் "என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?


பின் குறிப்பு: பொதுவாக நான் இந்த மாதிரி விசயத்தை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. இந்த மாதிரி விதண்டாவாதங்களை நிறைய பார்த்திருந்தாலும் படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததே கிடையாது; இன்று மதியம் வரை.

இன்று மதிய உணவின் போது மனைவியிடம் "குழம்பில் கொஞ்சம் உப்பு கம்மி" என்று சொன்னதற்கு மனைவியின் பதில்...

"போன வருசம் கோயம்புத்தூர் ஓட்டல் அன்னபூரணால லஞ்ச் சாப்பிடும் போது சாம்பார்ல உப்பு ஜாஸ்தியா இருந்ததே அதப் பத்தி நீங்க இதுவரைக்கும் ஒரு தடவ கூட வாயத் திறந்ததில்ல, இப்போ என் சமையல பத்தி மட்டும் என்ன கமெண்ட் வேண்டிக்கிடக்கு?"

பிற்சேர்க்கை (02/12/2008): இந்தப் பதிவைப் படித்த சில நண்பர்கள் நான் எழுதியது ஒரு சாராரை மட்டும் குற்றம் சாட்டுவது போல தென்படுகிறது என்று கூறினார்கள். என் நோக்கம் அதுவல்ல. ஒரு வேளை அப்படி தோன்றியிருந்தால் மன்னிக்கவும். நான் சொன்னது இது மாதிரியான வாதத்தை முன்வைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். இந்த பதிவுலகத்தில் நான் பார்த்த உதாரணங்களில் சில:

1. ஒர் பதிவர் போலிச் சாமியார் பற்றி ஒரு பதிவெழுதினார். அதற்கு வந்த பின்னூட்டம் - "இந்து சாமியாரை பற்றி எழுதும் நீங்கள் தீவிரவாதம் வளர்க்கும் இஸ்லாமிய மதராஸாக்களை பற்றி ஏன் எழுதவில்லை?". இத்தனைக்கும் அந்தப் பதிவை எழுதியவர் இந்து மதத்தை தாக்கி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அந்த சாமியார் அடித்த கூத்தைப் பற்றி மட்டுமே எழுதியிருந்தார்.

2. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதின் வன்முறையை பற்றி அரசியல் கலப்பில்லாமல்
கண்டித்து எழுதிய ஒரு பதிவருக்கு வந்த பின்னூட்டம் - "தர்மபுரியில் பஸ் எரிந்த போது எங்கே போயிருந்தீர்கள்?". அது வரை அந்தப் பதிவர் எழுதிய பதிவுகளே 10 கூட இருக்காது. அதிலும் மொக்கை இல்லாத முதல் பதிவு அது தான். அதற்குள் இப்படி ஒரு கேள்வி.

இது மாதிரி ஆயிரம் எழுதலாம். இப்பதிவின் தலைப்பை மறுபடியும் படிக்கவும்!

And now we're even!

19 குட்டு:

said...

////ஒரு சம்பவத்தை ஒருவர் கண்டித்து எழுதவில்லை என்பதினால் மட்டுமே அவர் அந்த சம்பவத்தை ஆதரிக்கிறார் என்ற முடிவுக்கு எப்படி வர முடிகிறது உங்களால்?
/////

:) ஞாயமான கேள்வி. ஆனா, சிலர், ஆப்வியஸ்ஸா, இப்படி நடந்துக்கிட்டா, ஈஸியா நாம இந்த மாதிரி முடிவுக்கு வர முடியுது.

உ.ம். பல பேரு இருக்காங்க நம்ம மத்தியில்.

said...

முழுக்க முழுக்க நியாயமான கருத்துகளால் ரொம்பி இருக்கும் பதிவு! பொலிடிக்கலி கரெக்ட் என்பதை வைத்து ஆடும் சிலம்பங்களை தெளிவாக முன்வைத்திருக்கிறீர்கள் - நன்றி!

Anonymous said...

///ஒரு சம்பவத்தை ஒருவர் கண்டித்து எழுதவில்லை என்பதினால் மட்டுமே அவர் அந்த சம்பவத்தை ஆதரிக்கிறார் என்ற முடிவுக்கு எப்படி வர முடிகிறது உங்களால்?///

நீங்கள் எங்களை ஆதரிக்க வில்லை என்றால் எதிரியை ஆதரிப்பதாகவே அர்த்தம்

ஜார்ஜ்.W.புஷ்

said...

உண்மை தான் மணி, நானும் சில பதிவுகள் எழுதலாமென்று நினைத்து பின் கைவிட்டதுண்டு. எல்லாம் பின்விளைவுகள் பற்றிய பயத்தில் தான். முழுக்க முழுக்க மெத்த படித்த மேதாவிகள் புழங்கும் இந்த வலையுலகம் கண்ணுக்கு தெரியாத இந்த எதிரிகளால் அறிவு வளர்ச்சி தடை பட்டு நிற்கிறது. ஏனெனில் நாமெல்லாம் தமிழ் நண்டு தானே.

said...

உண்மையான கருத்துக்கள்!!

//"ஆனால் இந்தப் பதிவுலகில் உலா வரும் போலி மதச்சார்பற்ற பதிவர்களுக்கு அது வேறு மாதிரியாகத் தான் படும்"

இதுவே எனக்கும் நேர்ந்தது.இங்கே தான் வலைபதிவர்கள் காசுக்காகவும், புகழுக்காகவும் எழுதும் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து வேறுபடுகிறார்கள். நமக்கு புகழோ பணமோ முதன்மையானதல்ல.
கருத்துக்களே முதன்மையானது.

எனவே இது போல் கவலை பட்டு கொண்டு இருந்தால் ஒரு உண்மையையும் வெளிப்படுத்த இயலாது.

துணிவுடன் இருப்போம். வாழ்த்துக்கள்!!

said...

பாக்கலாம்.

said...

//"இப்பொழுது மும்பை பற்றி எழுதும் நான் மாலேகான் குண்டு வெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதாது ஏன் என்று கேள்வி வரும். அதற்கு காரணம் என் மதவெறியும் சாதி புத்தியும் தான் என்று ஒரு பிரச்சாரம் நடக்கும். அப்படி ஒரு முறை முத்திரை குத்தப்பட்டு விட்டால் கடைசி வரைக்கும் அந்தக் கறை அழியாது. அவர்களுக்கு பதில் சொல்ல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. விடுங்க"//

மலேக்கான் குண்டு வெடிச்ச போது யாரும் பதிவு எழுதவில்லை என்பது உண்மைதான். ஆனால் மலேக்கான் குண்டுவெடித்ததன் உண்மை (அண்மையில்) வெடித்த போது ஏன் எழுதவில்லை என்று கேட்டால் அது ஞாயம் தானே ?

மற்றவர்களின் விமர்சனம் பற்றி கவலைப்படதோர் தவறாகப் படுவது எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதற்கு தடையாக இருப்பது வெறும் மனத்தடை தான். எவரோ எதோ சொல்கிறார்கள் என்பதற்காக எழுதுபவர் சுறுக்கிக் கொள்வது ஒருவருடைய தாழ்வுணர்ச்சிதான்.

ஒருவரின் சொல்லுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட தனது எண்ணத்திற்கும், நிகழ்வுக்கும் கொடுக்காமல் புலம்புவதும் கூட தன்னளவில் ஏமாற்றிக் கொள்வதே.

said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

said...

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வாங்கிய அபினவிர்க்கு (abhinav bindra) 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அரசாங்கம்..
இத்தனைக்கும் அவர் ஏற்கனவே பணக்காரர்..

ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எங்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 5 லட்சம்.. பாதுகாப்புக்கு படை வீரர்களின் மதிப்பு அவ்வளவு தானா?

பாதுகாப்பு படை வீரரின் உயிரின் மதிப்பு 5 இலட்சம்.. ஆனால் ஒலிம்பிக் தங்கத்தின் மதிப்பு 6 கோடியா????????....

சிந்திப்போம்..

said...

// இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்தால் கீழ் வெண்மணியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது, கருணாநிதி ஆட்சியைக் குறை கூறினால் ஜெயலலிதா ஆட்சியை ஏன் குறை கூறவில்லை என்று கேள்வி எழுப்புவது, தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எழுதினால் சென்ற பா.ஜ.க ஆட்சியின் போது தூங்கிக் கொண்டிருந்தாயா என்று சாடுவது. இது போன்ற எல்லா விவாதத்துக்கும் சாதி/மதப் பூச்சு வேறு!

அரசியல் மட்டுமல்ல. அனைத்து தளத்திலும் இதே வாதம் தான். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் ஒரு பதிவில் ரஜினியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரியென்று ரஜினியையும் விமர்சனம் செய்தால் எம்.ஜி.ஆர் மட்டும் என்ன புனிதமா என்ற கேள்வி மற்றொரு பக்கமிருந்து. எம்.ஜி.ஆரை பற்றியும் எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது, எம்.ஆர்.இராதா பற்றியும் எழுதினாலே ஆயிற்று என்றொரு கூட்டம். ஆக ஒரு சினிமா விமர்சனத்தை அரசியலாக மாற்றியாகி விட்டது.//


நன்றி:: மணி(யின்) ஓசை

இதை ஒரு பதிவாக எனது தளத்தில் கையாண்டிருக்கிறேன். அதற்கான நன்றி இது.

நன்றி.
http://nanbanshaji.blogspot.com/2008/11/trial-by-bloggers.html

said...

//SurveySan said...ஆனா, சிலர், ஆப்வியஸ்ஸா, இப்படி நடந்துக்கிட்டா, ஈஸியா நாம இந்த மாதிரி முடிவுக்கு வர முடியுது.

உ.ம். பல பேரு இருக்காங்க நம்ம மத்தியில்.//

நீங்கள் சொல்வது புரிகிறது. நான் அந்த மாதிரி பதிவர்களுக்கு வரும் எதிர்வினையைப் பற்றி பேசவில்லை என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்!

said...

பினாத்தல் சுரேஷ், muru: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

said...

//Anonymous said...
நீங்கள் எங்களை ஆதரிக்க வில்லை என்றால் எதிரியை ஆதரிப்பதாகவே அர்த்தம்

ஜார்ஜ்.W.புஷ்
//

அப்படி சொன்ன புஷ்ஷை சர்வாதிகாரி என்று விமர்சித்த அதே நபர்கள் தான் இது மாதிரி நடந்து கொள்கிறார்கள். Irony!

said...

//வீரன்(Veeran) said...
எனவே இது போல் கவலை பட்டு கொண்டு இருந்தால் ஒரு உண்மையையும் வெளிப்படுத்த இயலாது.//

வீரன், பதிவர்கள் அனைவரும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுதுவதில்லை. மனதில் தோன்றும் சில எண்ணங்களை பொதுவில் வைக்கிறார்கள். அவ்வளவே. அப்படிப்பட்டவர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாமா? தைரியம் இருந்தால் எழுது, இல்லையேல் இடத்தை காலி செய் என்று சொல்வது சரியா?

said...

//கோவி.கண்ணன் said...
மலேக்கான் குண்டு வெடிச்ச போது யாரும் பதிவு எழுதவில்லை என்பது உண்மைதான். ஆனால் மலேக்கான் குண்டுவெடித்ததன் உண்மை (அண்மையில்) வெடித்த போது ஏன் எழுதவில்லை என்று கேட்டால் அது ஞாயம் தானே ?//

நியாயம் இல்லை. ஒருவர் ஒரு விசயத்தைப் பற்றி எழுதுவதற்கும் எழுதாமல் இருப்பதற்கும் ஆயிரம் காரணம் இருக்கலாம். அதைப் பற்றித் தெரியாமல் நீங்களாகவே ஒரு முன் தீர்மானம் கொண்டு அவர் எழுதாமல் போனதற்கு காரணம் கற்பிப்பது சிறிதும் நியாயம் இல்லை.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்: சிறிது நாட்களுக்கு முன் ஈழத் தமிழர் பற்றி பதிவர்கள் ஒரு தொடர் பதிவு எழுதியது ஞாபகம் இருக்கலாம். நானும் எழுத ஆரம்பித்தேன், ஆனால் பல காரணங்களால் எழுதி முடிக்க முடியவில்லை. அதைக் காரணம் காட்டி, சினிமா தொடர் பதிவு எழுதும் நான் ஈழப் பிரச்சனையைப் பற்றி ஏன் எழுதவில்லை, ஈழத்தை விட சினிமா தான் முக்கியமா என்று கேட்பீர்களா?

மற்றபடி, வீரனுக்கு நான் சொன்ன மறுமொழி உங்களின் மற்ற கருத்துக்களுக்கு பொருந்தும்.

said...

//ஆட்காட்டி1 said...

பாக்கலாம்.//

பாக்கலாம்ன்னா? ஒரே திகிலா இருக்கே. என்ன சொல்ல வர்ரீங்க?

said...

முத்து குமரன், இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும் கூட, நீங்கள் சொல்லது உண்மையான உண்மை! :(

said...

//நண்பன் said...
இதை ஒரு பதிவாக எனது தளத்தில் கையாண்டிருக்கிறேன். அதற்கான நன்றி இது. //

நண்பரே, முதன் முதலாக நான் எழுதியது 'quote' ஆகியிருக்கிறது. அப்படி quote செய்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி! :)

said...

கலக்கல் பதிவு