Sunday, 30 November 2008

என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?

என் பதிவுலக நண்பர் ஒருவர் சமீபத்தில் நடந்த மும்பை பிரச்சனையைப் பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார். ஆனால் அதை யாரும் படிக்க முடியாது.

அவர் எழுதி ட்ராப்டில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவை படித்த நான் எப்பொழுது இதை வெளியிடப் போகிறீர்கள் என்று கேட்ட போது அவர் அந்தப் பதிவை வெளியிடப் போவதில்லை என்று கூறினார்.

"ஏன்?"

"தீவிரவாதத்தைக் கண்டிக்கும் இந்தப் பதிவை வெளியிட்டால் எனக்கு இந்துத்துவா முத்திரை குத்தப்படும். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என் மனதில் பட்டதை சொல்லியே தீருவேன் என்ற தைரியமும், பக்குவமும் எனக்கு இன்னும் வரவில்லை. எதற்கு வீண் வம்பு?"

"ஆனால் உங்கள் பதிவில் எந்த ஒரு மதத்தையும் குறை கூறவில்லையே? தீவிரவாதத்தை எதிர்த்துத் தானே எழுதியிருக்கிறீர்கள்?"

"அது எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பதிவுலகில் உலா வரும் போலி மதச்சார்பற்ற பதிவர்களுக்கு அது வேறு மாதிரியாகத் தான் படும்"

"இதைப் பதிப்பித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது?"

"இப்பொழுது மும்பை பற்றி எழுதும் நான் மாலேகான் குண்டு வெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதாது ஏன் என்று கேள்வி வரும். அதற்கு காரணம் என் மதவெறியும் சாதி புத்தியும் தான் என்று ஒரு பிரச்சாரம் நடக்கும். அப்படி ஒரு முறை முத்திரை குத்தப்பட்டு விட்டால் கடைசி வரைக்கும் அந்தக் கறை அழியாது. அவர்களுக்கு பதில் சொல்ல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. விடுங்க"

"மாலேகான் குண்டு வெடிப்பு நடந்தது 2006- இல். அப்பொழுது உங்களுக்கு வலைப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாது. நீங்கள் பதிவெழுத வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது என்று சொல்ல வேண்டியது தானே?"

"சொன்னால்? புரிந்து கொள்வார்களா? நான் அதைக் கண்டித்து ஒரு பதிவாவது எழுதாத வரையில் இரைச்சல் நிற்காது. அந்த சம்பவத்தை பற்றி கண்டித்து எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அப்படி எழுதினால் இன்னொரு கோஷ்டி 2002இல் நடந்ததை பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்பும். இதற்கு ஒரு முடிவே கிடையாது"

"இது விதண்டாவாதம்"

"நீங்களும் இந்த பதிவுலகில் சிறிது காலமாக இயங்கி வருகிறீர்கள். நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்"


யோசித்துப் பார்த்தால் அந்த நண்பர் சொன்னதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்தால் கீழ் வெண்மணியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது, கருணாநிதி ஆட்சியைக் குறை கூறினால் ஜெயலலிதா ஆட்சியை ஏன் குறை கூறவில்லை என்று கேள்வி எழுப்புவது, தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எழுதினால் சென்ற பா.ஜ.க ஆட்சியின் போது தூங்கிக் கொண்டிருந்தாயா என்று சாடுவது. இது போன்ற எல்லா விவாதத்துக்கும் சாதி/மதப் பூச்சு வேறு!

அரசியல் மட்டுமல்ல. அனைத்து தளத்திலும் இதே வாதம் தான். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் ஒரு பதிவில் ரஜினியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரியென்று ரஜினியையும் விமர்சனம் செய்தால் எம்.ஜி.ஆர் மட்டும் என்ன புனிதமா என்ற கேள்வி மற்றொரு பக்கமிருந்து. எம்.ஜி.ஆரை பற்றியும் எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது, எம்.ஆர்.இராதா பற்றியும் எழுதினாலே ஆயிற்று என்றொரு கூட்டம். ஆக ஒரு சினிமா விமர்சனத்தை அரசியலாக மாற்றியாகி விட்டது.

இன்று மும்பை பயங்கரவாதத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் மாலேகான் குண்டு வெடிப்பை கண்டித்து ஒரு வரியாவது எழுதி விட்டுத் தான் தொடங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்தாகி விட்டது. மாலேகான் பற்றி எழுதும் முன்னர் 2006இல் நடந்த மும்பை இரயில் குண்டு வெடிப்பைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் குஜராத் கலவரம் பற்றி ஒரு கண்டனம். அப்படியே நூல் பிடித்துப் போனால் இராம ஜென்ம பூமி, மகாத்மா காந்தி கொலை, முகமதியர் படையுடுப்பு, யூதர்கள் வரலாறு, ஆதாம் ஏவாள், குரங்கு, அமீபா....

இப்படி எந்த ஒரு வாதத்திற்கும் முன் வாதம் ஒன்று தேவை என்று கூறும் அறிவு ஜீவி நண்பர்களுக்கு ஒரு கேள்வி - ஒரு விசயத்தைப் பற்றி எழுதும் முன்னர் அது சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தைப் பற்றியும் எழுதி விட்டுத் தான் மெயின் மேட்டருக்கே வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி? இந்த அளவுகோலின் படி பார்த்தால் ஒவ்வொரு பதிவரும் உலக வரலாற்றை முழுதுமாக எழுதி விட்டுத்தான் பதிவெழுதவே உட்கார வேண்டும். ஒரு சம்பவத்தை ஒருவர் கண்டித்து எழுதவில்லை என்பதினால் மட்டுமே அவர் அந்த சம்பவத்தை ஆதரிக்கிறார் என்ற முடிவுக்கு எப்படி வர முடிகிறது உங்களால்?

அதுவும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொதுப்படையாகவே இருக்கிறது - "இன்று இப்படி எழுதும் எல்லோரும் அன்று குப்பறப்படுத்து குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்களா?" என்ற ரீதியில். இன்று இந்த நபர் இப்படி கூறுகிறார் ஆனால் அன்று அப்படிக் கூறினார் என்று ஆதாரத்தோடு எல்லாம் சொல்வதில்லை. போகிற போக்கில் புழுதி வாரி விடுவதோடு சரி. அவர் அந்த விசயத்தை ஆதரிப்பதாக கூறியதே இல்லையே என்று கேட்டால், அவர் அந்த விசயத்தை எதிர்ப்பதாக என்றுமே எழுதியது இல்லையே, அது ஒன்றே சாட்சி அவர் அந்த சம்பவத்தை ஆதரிப்பதற்கு என்று நியாயப்படுத்துகிறார்கள்.

வடிவேலு பாசையில் சொன்னால் "சுத்த சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு?" சந்திரமுகி பிரபு ஸ்டைலில் (!?) சொன்னால் "என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?


பின் குறிப்பு: பொதுவாக நான் இந்த மாதிரி விசயத்தை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. இந்த மாதிரி விதண்டாவாதங்களை நிறைய பார்த்திருந்தாலும் படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததே கிடையாது; இன்று மதியம் வரை.

இன்று மதிய உணவின் போது மனைவியிடம் "குழம்பில் கொஞ்சம் உப்பு கம்மி" என்று சொன்னதற்கு மனைவியின் பதில்...

"போன வருசம் கோயம்புத்தூர் ஓட்டல் அன்னபூரணால லஞ்ச் சாப்பிடும் போது சாம்பார்ல உப்பு ஜாஸ்தியா இருந்ததே அதப் பத்தி நீங்க இதுவரைக்கும் ஒரு தடவ கூட வாயத் திறந்ததில்ல, இப்போ என் சமையல பத்தி மட்டும் என்ன கமெண்ட் வேண்டிக்கிடக்கு?"

பிற்சேர்க்கை (02/12/2008): இந்தப் பதிவைப் படித்த சில நண்பர்கள் நான் எழுதியது ஒரு சாராரை மட்டும் குற்றம் சாட்டுவது போல தென்படுகிறது என்று கூறினார்கள். என் நோக்கம் அதுவல்ல. ஒரு வேளை அப்படி தோன்றியிருந்தால் மன்னிக்கவும். நான் சொன்னது இது மாதிரியான வாதத்தை முன்வைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். இந்த பதிவுலகத்தில் நான் பார்த்த உதாரணங்களில் சில:

1. ஒர் பதிவர் போலிச் சாமியார் பற்றி ஒரு பதிவெழுதினார். அதற்கு வந்த பின்னூட்டம் - "இந்து சாமியாரை பற்றி எழுதும் நீங்கள் தீவிரவாதம் வளர்க்கும் இஸ்லாமிய மதராஸாக்களை பற்றி ஏன் எழுதவில்லை?". இத்தனைக்கும் அந்தப் பதிவை எழுதியவர் இந்து மதத்தை தாக்கி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அந்த சாமியார் அடித்த கூத்தைப் பற்றி மட்டுமே எழுதியிருந்தார்.

2. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதின் வன்முறையை பற்றி அரசியல் கலப்பில்லாமல்
கண்டித்து எழுதிய ஒரு பதிவருக்கு வந்த பின்னூட்டம் - "தர்மபுரியில் பஸ் எரிந்த போது எங்கே போயிருந்தீர்கள்?". அது வரை அந்தப் பதிவர் எழுதிய பதிவுகளே 10 கூட இருக்காது. அதிலும் மொக்கை இல்லாத முதல் பதிவு அது தான். அதற்குள் இப்படி ஒரு கேள்வி.

இது மாதிரி ஆயிரம் எழுதலாம். இப்பதிவின் தலைப்பை மறுபடியும் படிக்கவும்!

And now we're even!