Wednesday, 15 October 2008

சினிமா - சர்வே, கேள்வி பதில், மலரும் நினைவுகள்.


நாகார்ஜுனன் ஆரம்பித்து பிரகாஷினால் மீம் ஆக்கப்பட்ட தமிழ் திரைப்பட சர்வே பதிவுகள் தமிழ் பதிவுலகில் ஆக்டோபஸ் போல கை, கால், வால் என அனைத்தையும் பரப்பி வருகிறது. யார் யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை விட இன்னும் யார் யார் எழுதவில்லை என்பதைக் கணக்கெடுப்பது சுலபம் என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கு யாரும் என்னை கூப்பிடவில்லை (நான் ஒருவன் இங்கே இருப்பது தெரிந்தால் தானே கூப்பிடுவதற்கு?). சிறு வயதில் இருந்தே என் ராசி அப்படி. கிரிக்கெட், கால்பந்து என்று எந்த ஆட்டையிலும் சேர்க்க மாட்டார்கள். என்ன போச்சு என்று நானும் தனியாக விளையாடுவேன். அதே கொள்கையை பின்பற்றி, இதோ...


1-அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?


எந்த வயது என்பது சரியாக நினைவில்லை. மதுரையில் முரட்டுக்காளை படம் பார்க்க சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்றதும், டிக்கெட் கிடைக்காமல் வேறு ஏதோ ஒரு படத்துக்கு சென்றதும் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஐந்து வயது இருக்கலாம்.
விடியும் வரை காத்திரு, தண்ணீர் தண்ணீர், தியாகி, Jaws, Moonraker, Genghis Khan, The Gods must be crazy போன்ற படங்களை அரங்கில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. பார்த்த வயதும் காலமும் குழப்பமாக இருக்கிறது.

1-ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நன்றாக நினைவு தெரிந்த பின் பார்த்த படம் சென்னை நாகேஷ் தியேட்டரில் 'பாடும் வானம்பாடி'.

1-இ. என்ன உணர்ந்தீர்கள்?

கூட்டம் அதிகம் இருந்ததால் சிறுவனான என்னை பெண்கள் வரிசையில் நிறுத்தி டிக்கெட் வாங்க வைத்தார்கள். மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

சிவாஜி (லண்டனில்). நான் சென்ற பொழுது அதே வளாகத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான Shrek 3, Rise of the Silver Surfer போன்ற படங்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்த போது, பல நாட்களாக ஓடிக் கொண்டிருந்த சிவாஜி மட்டும் ஹவுஸ் புல்!

இந்த பதிவை படித்த என் மனைவி சொன்னது "குசேலன் படம் தானே அரங்கில் கடைசியாக பார்த்தது?" அப்படி ஒரு படம் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டேன் போல!

3-அ. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது

பெரியார்

3-ஆ. எங்கே

வீட்டில் (டி.வி.டி).

3- இ. என்ன உணர்ந்தீர்கள்?

சிறு வயதில் பள்ளியில் "ஆமைக்கும் முயலுக்கும் ரேஸு" நாடகம் நடத்தினோம் (நான் ஆமை). காட்டில் நடக்கும் கதை என்பதால் நாடக அரங்கில் நாலைந்து வேப்ப மர குச்சிகளை நட்டு வைத்து பில்ட்-அப் கொடுத்தோம்.
பெரியார் படத்தின் தரத்தை பார்த்த போது அந்த நாடகம் தான் நினைவுக்கு வந்தது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ஒவ்வொரு கால கட்டத்திலும் வேறு வேறு படங்களின் தாக்கம் இருந்திருக்கிறது. எதன் தாக்கம் அதிகம் என்று சொல்வது கடினம். முள்ளும் மலரும், நாயகன், சத்யா, மகாநதி, குருதிப்புனல், இருவர், ஹேராம், பிதாமகன், புதுப்பேட்டை, பருத்தி வீரன், அஞ்சாதே, சுப்ரமணியபுரம் என்று பல படங்கள்.
நடுவே தில்லுமுல்லு, சென்னை-600028, ஓரம் போ என்று லைட் வெயிட் படங்களும் உண்டு.

ஏதாவது ஒரு படத்தை தான் சொல்ல வேண்டும் என்றால் அது 'ஒன்ஸ் மோர்'. அந்தப் படத்தில் தான் நான் சிம்ரனை முதலில் பார்த்தேன். பார்த்ததும் தாக்கப்பட்டேன். அந்த தாக்குதலில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆனது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

மதுரையில் நடந்த முதல்வன் திரைப்பட விவகாரம். என் சகோதரர் கேபிள் டீ.வி தொழில் நடத்தி வந்ததால் எனக்கு இவ்விசயத்தில் நேரடி அனுபவம் உண்டு. அரசியல்வாதிகள் சின்ன சின்ன சில்லறை விசயங்களுக்கு கூட எவ்வளவு சீரியசாகவும் சின்ஸியராகவும் வேலை செய்வார்கள் என்பதை உணர வைத்த நிகழ்ச்சி அது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

விக்ரம். இந்தப் படத்திற்கு இளையராஜா கம்ப்யூட்டர் கொண்டு இசையமைப்பதாக செய்தி வந்தது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று சரியாக தெரியாத காலம் அது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகிய ஒரு நன்பனிடம் கேட்ட போது "கம்ப்யூட்டர் என்றால் கை கால் எல்லாம் இருக்கும் (ரோபோ என்று கொள்க). ஸ்விட்ச் போட்டால் அதுவாகவே கீ-போர்ட், ஆர்மோனியம் எல்லாம் வாசிக்கும். இனி மேல் இளையராஜா செய்ய வேண்டியது எல்லாம் ஸ்விட்ச் போட வேண்டியது மட்டுமே" என்றான். நம்பினேன் :(

அபூர்வ சகோதரர்கள் பார்த்து விட்டு ஷூவின் அடிப்பாகத்தை கிழித்து முட்டி வரை இழுத்து விட்டு, ஒரு மேஜையின் பின்னால் நின்று குள்ள அப்புவாக 'புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பர' பாடினேன். நிறைய பேர் கை தட்டினார்கள். அப்பா முதுகில் தட்டினார், ஒரு ஜோடி ஷூவை பாழாக்கியதற்காக.

ஓரளவு விஷயம் தெரிந்ததும் தாக்கப்பட்டது இருவர் படத்தினால். தொழில்நுட்பத்தில் பல சிகரங்களை தொட்ட இந்தப் படம் வேறு பல காரணங்களுக்காக தோல்வி அடைந்தது சோகமே.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

முன்பு குமுதத்தில் வந்த லைட்ஸ்-ஆன் பகுதி பிடிக்கும். என் மாமா சேர்த்து வைத்திருந்த பழைய பேசும் படம் பத்திரிக்கைகளை நிறைய தரம் படித்திருக்கிறேன். தங்களுக்கு பிடித்த திரைப்படப் பாடல்களைப் பற்றி வாசகர் எழுதும் ஒரு பகுதி அருமையாக இருக்கும். இன்றைய பல திரைப்பட பாடல் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு அதுவே முன்னோடி. அதே போல ஒரு திரைப்படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் ஒரு பகுதியும் ரொம்பப் பிடிக்கும் (பெரும்பாலும் continuity பிழைகள்).

சலூனில் காத்திருக்கும் சமயங்களில் வாரமலரின் 'துணுக்கு மூட்டை', தினத்தந்தியின் 'அல்லி பதில்கள்' படித்தது ஒரு வித 'சுய துன்புறுத்தலில் மகிழ்வடையும்' (masochism) முயற்சியாக இப்பொழுது தோன்றுகிறது.

அயல்நாடு வந்ததில் இருந்து தமிழ் வாசிப்பு என்றாலே பதிவுகளின் மூலம் தான் என்றாகிவிட்டது. தமிழ் சினிமா என்று தேடிப் பிடித்து வாசிப்பதில்லை. தற்சமயம் R P ராஜநாயஹத்தின் திரைப்படம் சார்ந்த Carnal thoughts பதிவுகள் அபாரமாக இருக்கிறது. லக்கிலுக், மோகன்தாஸ் ஆகியோர் எழுதும் சினிமா விமர்சனங்களை விரும்பிப் படிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

இசையைப் பொறுத்தவரை நான் ஒரு ஞானசூன்யம். ஒரு பாடலைப் பாடியது எஸ்.பி.பியா ஜேசுதாஸா என்று கூட கண்டுபிடிக்க தெரியாது. இருந்தாலும் ஒரு காலத்தில் பாடல்களை கேட்பதை ஒரு வேலையாகவே செய்து வந்தேன்.

இப்பொழுது எல்லாம் அயர்ன் செய்யும் பொழுதும் ஷேவ் செய்யும் பொழுதும் பின்னணியில் பாடலை ஓட விடுவதுடன் சரி. சிறு வயதில் குத்து பாடல்கள் பிடித்தது. பின்னர் காதல் பாடல்கள், சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பழைய பாடல்கள் என்று ரசனை மாறி இப்பொழுது மறுபடியும் குத்து பாடலில் வந்து நிற்கிறது (நாக்க முக்க - காதலில் விழுந்தேன், கத்தாழ கண்ணால - அஞ்சாதே, கன் கணபதி தான் - ஓரம் போ, மதுர குலுங்க - சுப்ரமணியபுரம், ஊரோரம் புளியமரம் - பருத்திவீரன்).

பாடல்களைத் தவிர்த்து பின்னணி இசை என்று பார்த்தால் யுவன் சங்கர் ராஜாவின் புதுப்பேட்டை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அவ்வப்போது இந்திப் படங்கள் பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிப் படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை. மொழி தெரியாதது ஒரு முக்கிய காரணம். ஜெர்மனி, ஸ்பானிஷ், ப்ரஞ்சு பொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் போது ஏற்படாத நெருடல் இந்திய மொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதே பிரச்சனை சீன, ஜப்பானிய மொழிப் படங்கள் பார்க்கும் பொழுதும் உண்டு!

தற்போது நான் தமிழை விட அதிகம் பார்ப்பது வேற்று நாட்டுப் படங்களே. பலர் ஹாலிவுட் படங்கள் எல்லாம் குப்பை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹாலிவுட் படங்களில் குப்பை அதிகம் வரக் காரணம் ஹாலிவுட் படங்கள் அதிகம் வருவதே. அனிமேஷன் (Wall-E), ஃபாண்டஸி (Lord of the Rings) போன்ற வகைப் படங்கள் எடுப்பதில் ஹாலிவுட்டை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.

பாதித்த படங்கள் அனைத்தையும் பட்டியலிட்டால் இந்த பதிவு கொள்ளாது என்பதால் சில மட்டும் - Amores perros, The Motorcycle Diaries (ஸ்பானிஷ்), Das Boot, Run Lola Run (ஜெர்மனி), Irreversible (பிரான்ஸ்), Seven Samurai, Ran (ஜப்பான்), Hero (சீனம்), Oldboy (கொரியா), The Shawshank Redemption, Amadeus, Pulp Fiction, Saving Private Ryan (ஆங்கிலம்)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அடுத்த கேள்விக்குச் செல்லவும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

முந்தைய கேள்விக்குச் செல்லவும்.
-------------------------------------------------

இந்த விளையாட்டைத் தொடர ஐந்து பேரை அழைக்க வேண்டுமாம். அழையா விருந்தாளியான நான் இன்னும் சிலரை கூட்டு சேர்ப்பது நியாயமில்லை என்பதினால் நானாக யாரையும் அழைக்கப் போவதில்லை. இதைப் படிக்கும் யாராவது ஐந்து பேர் என்ன வேண்டுமோ எழுதிக் கொள்ளுங்கள் (ஐந்து பேராவது இந்தப் பதிவைப் படித்தால்)

7 குட்டு:

said...

//ஓரளவு விஷயம் தெரிந்ததும் தாக்கப்பட்டது இருவர் படத்தினால். தொழில்நுட்பத்தில் பல சிகரங்களை தொட்ட இந்தப் படம் வேறு பல காரணங்களுக்காக தோல்வி அடைந்தது சோகமே.///


உண்மைதான்!

எத்தனையோ படங்கள் இப்படியான ரீதியில் தோல்வியினை தழுவியிருந்தாலும் கூட இந்த படத்தின் தோல்வி ஒரு புரியாத புதிர்தான்! (இத்தனைக்கும் இது தமிழக அரசியல் தொடர்பான கதை என்றும் கூட மீடியாக்களால் விளம்பரமாகியிருந்தது!)

பாடல்கள் ஒளிப்பதிவு,மோகன்லால் பிரகாஷ்ராஜ் நடிப்பு மணிரத்னம் என எல்லாம் அம்சங்களுமே இதில் +

Anonymous said...

{கூட்டம் அதிகம் இருந்ததால் சிறுவனான என்னை பெண்கள் வரிசையில் நிறுத்தி டிக்கெட் வாங்க வைத்தார்கள். மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.}

ஹி ஹி. பொய் தானே?

said...

நல்லா இருக்கு! சில பல விசயங்களில் ரொம்ப சிம்பிளாக சொல்லியிருந்தாலும் ரசிக்க வைத்தது!

said...

நல்ல நகைசுவை உணர்வுடன் எழுதி இருக்கிறீர்கள்...தொடர்ந்து எழுதவும்...

Anonymous said...

//"கம்ப்யூட்டர் என்றால் கை கால் எல்லாம் இருக்கும் (ரோபோ என்று கொள்க). ஸ்விட்ச் போட்டால் அதுவாகவே கீ-போர்ட், ஆர்மோனியம் எல்லாம் வாசிக்கும். இனி மேல் இளையராஜா செய்ய வேண்டியது எல்லாம் ஸ்விட்ச் போட வேண்டியது மட்டுமே" என்றான். நம்பினேன் :(//

இவ்ளோ அப்பாவியா நீங்க?

Sachin said...

//ஏதாவது ஒரு படத்தை தான் சொல்ல வேண்டும் என்றால் அது 'ஒன்ஸ் மோர்'. அந்தப் படத்தில் தான் நான் சிம்ரனை முதலில் பார்த்தேன். பார்த்ததும் தாக்கப்பட்டேன். அந்த தாக்குதலில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆனது.//

:)

said...

very interesting write-up!