Thursday, 29 May 2008

எச்சில் இலையும் யூஸ்ட் ப்ளேட்டும்

"தமிழ்நாட்டுல தான் இந்த மாதிரி அநியாயம் எல்லாம் நடக்கும்" என்றான் பிரசாத். கொஞ்சம் முன்னர் சொன்ன போது 'உங்க ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம்' என்றான். இப்பொழுது கொஞ்சம் பெரிய மனதுடன் 'தமிழ்நாட்டுல தான் இந்த மாதிரி அநியாயம்'.

விஷயம் இது தான். ஒரு சொந்த விஷயமாக நானும் என்னுடன் பணிபுரியும் பிரசாத்தும் மதுரை சென்று விட்டு காரில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தோம். மதுரையில் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று நான் சொன்ன போது பசிக்கவில்லை என்றவன் திண்டுக்கல் தாண்டியதும் பசிக்கிறது என்றான். தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் முன் காரை நிறுத்தினேன். மர பெஞ்சு போட்டு வாழை இலையில் சாதம் சாம்பார் ரசம் மோர் பொரியல் அப்பளம் என்று நிறைவான சாப்பாடு. சாப்பிட்டு முடித்ததும் கை கழுவ செல்லும் போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.

"தம்பி. இலையை தொட்டியில போட்டுடுங்க" என்றார் உணவு பரிமாறியவர்.

நான் என் இலையை எடுத்தேன்.

பிரசாத் இலையை எடுக்காமல் "என்ன சொன்னீங்க?" என்றான் அவரிடம்.

"நீங்க சாப்பிட்ட இலையை எடுத்து அதோ அங்க இருக்கிற தொட்டிக்குள்ள போட்டுடுங்க"

"எதுக்கு?"

"இது என்ன தம்பி கேள்வி? நீங்க சாப்பிட்ட இலையை நீங்க தான் எடுக்கனும்"

"எடுக்க முடியாது. என்ன பண்ணுவீங்க?"

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் யாரும் அவரிடம் இப்படி சொன்னதில்லை போல. "எடுத்து போடுங்க தம்பி" என்று சொல்லி விட்டு கல்லாவில் அமர்ந்திருந்தவரை ஒரு வித இயலாமையுடன் பார்த்தார்.

"என்னால் எடுக்க முடியாது. வேணும்னா நீங்க எடுத்து போடுங்க. இல்லை அது அங்கேயே கிடக்கட்டும். எனக்கென்ன வந்தது?"

"நம்ம கடையில இது தான் சார் சிஸ்டம். அவங்கவங்க சாப்பிட்ட இலையை அவங்களே எடுத்து போடணும். அதோ போர்டு மாட்டியிருக்கு பாருங்க" என்றார் கல்லாகாரர்.

'சாப்பிட்ட பின் இலையை தெட்டியில் போடவும்' என்று தப்பாக சொன்னது ஓரமாக இருந்த பலகை ஒன்று.

"இப்படி ஓரமா எழுதி வச்சா யாருக்கு தெரியும். அதுவும் தமிழ்ல. உள்ளே வரும் போதே உங்க சிஸ்டம் இது தான்னு சொல்லி இருக்கணும். என்ன ஆனாலும் சரி நான் எச்சில் இலையை எடுக்க மாட்டேன்" என்றான் பிரசாத் தீர்மானமாக.

பிரசாத் வேறு மாநிலத்தவன். சென்னையில் சில வருடங்கள் இருந்ததால் தமிழ் நன்றாக பேச வரும். ஆனால் வாசிக்கத் தெரியாது.

"எடுத்துடுங்களேன் பிரசாத். உங்க வீட்ல நீங்க எடுத்து போடுறது இல்லையா? அந்த மாதிரி" என்றேன் நான்.

"எங்க வீட்ல நான் எடுப்பேன். இங்கே எதுக்கு? இதுக்கும் சேர்த்து தானே காசு வாங்குறாங்க?"

"ஊருக்கு புதுசா தம்பி? இந்த பக்கம் எல்லாம் இது சகஜம். எல்லா கடையிலையும் இப்படித் தான்" என்றார் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர். அறுபது வயது இருக்கும். சட்டை இல்லை. மேலுக்கு துண்டு மட்டும் போட்டிருந்தார்.

"இங்க சகஜமா இருக்கலாம். எனக்கு இது எல்லாம் அசிங்கம். முதல்ல இலையை எடுக்க சொல்லுவீங்க. அடுத்தது டேபிள் துடைக்க சொல்லுவீங்க. அதுக்கு வேற ஆளை பாருங்க. என்னால முடியாது. நீங்க வாங்க மணி. நேரம் ஆச்சு. காசு கொடுத்துட்டீங்க இல்ல? கிளம்பிக்கிட்டே இருப்போம். என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்க. Country brutes"

இதற்குள் இந்த கூத்தை வேடிக்கை பார்க்க கடைக்கு வெளியே பத்து பேர் கூடியிருந்தனர்.

"பேசுறத பார்த்தாலே தெரியலையா. இவன் அந்த ஸ்டேட்காரன் தான். திமிர் பிடிச்சவங்க. அவன் மட்டும் இலையை எடுத்துப் போடாம வெளியே வரட்டும். மண்டையையும் வண்டியையும் உடைக்கிறேன்" என்றது அந்த பத்தில் ஒரு இள ரத்தம்.

"பிரச்சனை வேண்டாமே பிரசாத். எடுத்துடுங்க ப்ளீஸ்" என்றேன் நான். வண்டி என்னுடையது.

"என்ன பேசுறீங்க? நாம யாரு. பாக்குற வேலை என்ன. என்ன சம்பளம் வாங்குறோம். உங்களுக்கு வேணும்ன்னா இது பெரிய விசயமா இல்லாம இருக்கலாம். என் ஸ்டேட்டஸ்க்கு இது எல்லாம் ரொம்ப கேவலம். எங்க ஊருல வந்து கேட்டுப் பாருங்க எங்க ஃபேமிலிய பத்தி. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. வாங்க கிளம்பலாம்" என்றான் பிரசாத். கொஞ்சம் பயந்திருந்தான் என்பது அவன் குரலில் தெரிந்தது.

அந்த துண்டுப் பெரியவர் சாப்பிட்டுவிட்டு இலையுடன் எழுந்தார். "சரி விடுங்க தம்பி. உங்க இலையையும் நானே எடுத்துடுறேன்" என்றவாறே பிரசாத்தின் இலையை எடுத்தார்.

"ஏ பெரிசு. அவங்க இலையை நீ ஏன் எடுக்கிற? தலையெழுத்தா?" என்றார் கல்லாக்காரர்.

"அட விடுப்பா. படிச்ச பசங்க. பெரிய இடத்து பிள்ளை போல இருக்கு. அதான் கூச்சப்படுது. அந்த தம்பி இலையை எடுத்தா நான் என்ன குறைஞ்சா போயிடப்போறேன்" என்று இரண்டு இலையையும் தொட்டியில் போட்டார்.

"நன்றி" என்றேன் கொஞ்சம் சங்கடத்துடன்.

"அது கிடக்கட்டும் விடுங்க. நீங்க பத்திரமா ஊரு போய் சேருங்க. ஏய் என்ன வேடிக்கை இங்க. எல்லாரும் போய் சோலிய பாருங்க போங்க" என்று கூட்டத்தை விலக்கினார்.

பிரசாத்தை விரோதத்துடன் பார்த்த கூட்டத்தை தாண்டி வந்து காரில் ஏறிக் கிளம்பினோம்.

கொஞ்சம் தூரம் போனதும் "உங்க ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் நடக்கும்" என்றான் என்னிடம். பெங்களூரு சேரும் வரை இதையே வேறு வேறு விதமாக சொல்லியபடியே வந்தான்.

இது நடந்து ஆறு மாசம் இருக்கும். எப்பொழுது எந்த உணவகம் சென்றாலும் இந்தப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டான். "நல்ல வேளை. இங்கே எல்லாம் டீசண்ட். இலையை எடுக்கத் தேவை இல்லை" என்பான் நக்கலோடு. அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுடன் உணவருந்தும் போது தான் உறுதியாக நின்று தன் கொள்கையில் வெற்றி பெற்றதை விதவிதமாக சொல்லி பெருமகிழ்ச்சி அடைவான்.

போன வாரம் நாங்கள் இருவரும் அலுவலக வேளையாக இங்கிலாந்து வந்து சேர்ந்தோம். எங்கள் இருவருக்கும் முதல் அயல்நாட்டுப் பயணம். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு சென்று குளித்து விட்டு நேராக அலுவலகம். அங்கே கொஞ்சம் வேலை முடித்து விட்டு மதிய உணவிற்காக அலுவலகத்தில் இருந்த ரெஸ்ட்டாரண்ட் சென்றோம். யானை விலை கொடுத்து உப்புச்சப்பில்லாத பாஸ்தா பீட்சா வாங்கி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது "எக்ஸ்க்யூஸ் மீ" என்ற குரல்.

திரும்பிப் பார்த்தோம். ரெஸ்ட்டாரண்டில் பணிபுரிபவர் என்பது சீருடையைப் பார்த்ததும் தெரிந்தது.

"எஸ்"

"அந்த டேபிளில் சாப்பிட்டது நீங்களா?" என்றார் புரிந்தும் புரியாத ஆங்கிலத்தில்.

"ஆம்"

"நீங்கள் உபயோகப்படுத்திய தட்டை எடுத்து அங்கே வைக்க வேண்டும்"

'Please place the used plates and cutlerys on the conveyer belt' என்று எழுதி இருந்த போர்டை அப்பொழுது தான் பார்த்தோம்.

"மன்னிக்கவும். நாங்கள் கவனிக்கவில்லை. இதோ வைத்து விடுகிறோம்" என்று சொல்லி விட்டு ப்ளேட்டை எடுக்க டேபிளை பார்த்து நடந்தான் பிரசாத். நானும் தான்.

இது நடந்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் பிரசாத் என்னிடம் ஏதேதோ பேசினான். ஆனால் இதுவரை "இந்த ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் நடக்கும்" என்று மட்டும் சொல்லவே இல்லை.

6 குட்டு:

said...

////அந்த தம்பி இலையை எடுத்தா நான் என்ன குறைஞ்சா போயிடப்போறேன்" என்று இரண்டு இலையையும் தொட்டியில் போட்டார்.///

இதுதான் பக்குவம் என்பது.இந்த நிலையை அடைய நிறைய அனுபவப்பட்டிருக்க வேண்டும்!

said...

பகட்டுக்கு செய்யுறதுதான் இதெல்லாம். என் பாசையில சொன்னா வெட்டி பந்தா. ஊர் பாஷையில சொன்னா ஷோ காட்டுறது.

said...

நீங்கள் பார்த்த ஹோட்டல் கடைக்காரர் கொஞ்சம் மிருதுவாக பேசியிருப்பது போல் தெரிகிறது. எங்கள் ஊரில் உள்ள கடைகளில் இலையை எடுத்துப் போட கொஞ்சம் மறந்தாக் கூட, அவர்கள் அதை நமக்கு தெரிவிக்கும் தொனியே வேறு.

நான் எனது ஊருக்கு மிக அரிதாக செல்வதால், ஹோட்டல் கடைகளில் சாப்பிடும் போதெல்லாம் இலையை எடுக்க மறந்துவிடுவேன். அப்போது அவர்கள் அதை தெரிவிக்கும் அதிகார அலட்சிய‌ தோரனை மிகச்சாதாரணமாக யாரையும் கோபம் கொள்ளச்செய்யும் என நான் உணர்வதுண்டு.

உங்கள் நண்பரின் எண்ணம் தவறானதுதான் எனினும் ......

"எச்சில் இலை" எனும் கருத்தாக்க அழுக்கு அக்கடைகாரர்களின் மனதில் படிந்திருப்பதுதான் நமது ஊர்களில் உள்ள கடைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த கருத்தாக்க அழுக்கு அவர்களை தங்களது தொழில் மீதே வெறுப்பினைக் கொள்ளச் செய்துள்ளது. முடிந்தவரை கடைகாரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் மனம் நோகாமல் நடந்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் சுட்டிக் காட்டிய அந்த அயல்நாட்டு கடையில் பின்பற்றப்படும் வழக்கம், "சுய சேவை" (self service) எனும் முறையையோ அல்லது மனிதஆற்றல் பற்றாக்குறையையோ மையமாகக் கொண்டது. நன்றி

said...

நல்ல பதிவு. பின்னூட்டங்களும் அருமை.

said...

நானாக இருந்திருந்தால், என்னுடைய நண்பனாக இருந்திருந்தாலும் ரெண்டு தட்டுத் தட்டி இருப்பேன்.
கக்கா போயிட்டு கழுவுறானோ என்னவோ? அவரு பெரிய இடத்து பிறப்பாச்சே? நீங்க சொன்னது.அவருக்கு சந்தனமும். பன்னீரும் தான் வெளியால வருமோ?

இன்னுமொரு நாட்டிலும் இந்த நடைமுறை உள்ளது. அங்க தான் இப்பவும் சண்டை நடக்குது.
அங்க இப்பிடி கொழுப்பு பிடித்து பேசினால் நல்ல மரியாதையும் கிடைக்கும்.

said...

வெவரம் தெரியாப்புள்ள இங்கிலிபீசுல சொல்லவும் பொசுக்குனு எடுத்து போட்டுட்டாரு