Friday, 11 April 2008

குடும்ப அரசியல் (அ) வால்பையனுக்கு நன்றி

எனது முதல் அரசியல் சார்ந்த பதிவு. பிரச்சனை எதுவும் வராமல் இருக்க அந்த மகரநெடுங்குழைகாதனும் தகர நெடுங்குழைகாதனும் அருள் புரிய வேண்டும்!

டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி-பதில் பகுதியில் வால்பையன் கேட்டிருந்த ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்

குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))
அதே கேள்விக்கு என்னுடைய முந்தைய பதிவில் நான் அளித்த பதில்
குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?
அந்த பதிவில் வால்பையன் இட்டிருந்த பின்னூட்டம்
நகைசுவையான பதில், குடும்ப அரசியலை செய்யும் எல்லோருக்கும் இதே பதிலை எடுத்து கொள்ளலாமா(ஆட்டோ வரும் பரவாயில்லையா)
யோசித்துப் பார்த்தால் அதை வெறும் நகைச்சுவை என்று முற்றிலும் ஒதுக்கி விட முடியாது என்று நினைக்கிறேன். அதில் சிறிதளவு யதார்த்தமும் கலந்து இருப்பதாக இப்பொழுது தோன்றுகிறது. உதாரணத்திற்கு நான் ஒரு நிறுவனம் தொடங்கினால் (அட சும்மா ஒரு பேச்சுக்கு தான்) என்ன செய்வேன்? எனக்கு தனிப்பட்ட முறையில் பழக்கமான நபர்களில் யாரேனும் வேலைக்கு மாட்டுவார்களா என்று தேடுவேன். என்னுடன் படித்த மிகவும் திறமை உள்ளவர்கள் அனைவரும் ஏற்கனவே நல்ல வேலையில் பொட்டி பொட்டியாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகாது என்பதால் அவர்களை விட்டு விடுவேன். ஆனால் என்னுடன் படித்தவர்களில் சிலருக்கு ஓரளவிற்கு திறமை இருந்தும் சரியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நிறுவனத்தில் பொறியாளராக விருப்பமா என்று பார்ப்பேன். M.Com படித்த என் சித்தி பெண்ணுக்கு கணக்காளர் வேலை. அவள் எந்த அளவிற்கு வேலை தெரியும் என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் நம்பிக்கையான பெண். அது மட்டும் இல்லாமல் சிறிய நிறுவனம் தானே கணக்கு வழக்கு எல்லாம் எளிமையாகத் தான் இருக்கும். திறமையை விட நாணயம் தான் இங்கு முக்கியம்.

அதே போல் மனிதவளம் அந்தத் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ள என் தங்கைக்கு. அலுவலகத்தில் தேநீர் வழங்கும் பொறுப்பு என் சொந்த ஊரில் டீக்கடை நடத்தி கஷ்டப்படும் கோவாலு மாமாவுக்கு. என் தந்தையின் வாகன ஓட்டுனரின் வேலையில்லாத பையன் தான் என் அலுவலகத்தில் ஆஸ்தான டிரைவர். காவல்காரர் (சித்தப்பா - முன்னாள் இராணுவ வீரர்), வரவேற்பாளர் (அட்டகாசமாக ஆங்கிலம் பேசும் அக்கா மகள்), அந்தரங்க காரியதரிசி (**********) இப்படி யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வேலையிடங்களை எனக்கு தெரிந்தவர்களைக் கொண்டே நிரப்பி விடலாம். இது போக மீதம் இருக்கும் இடங்களை நிரப்ப மட்டுமே வெளியாட்கள் தேவைப்படுவார்கள். சிறிது காலம் கழித்து நிறுவனம் பெரியதாக வளரும் பொழுது மற்ற நிறுவனங்களில் இருக்கும் திறமைசாலிகளை இழுத்து முக்கிய பொறுப்புக்களை கொடுக்கலாம். நல்ல சம்பளமும் கொடுக்கலாம். எடுத்தவுடன் புதியவர்களை கொண்டு வருவதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று விலை கட்டுப்படியாகாது. இரண்டு அவர்கள் எந்த அளவிற்கு நம்பகமானவர்கள் என்று தெரியாது. நிறுவனம் வளர்ந்து நிர்வாகம் நன்றாக பிடிபடும் வரையில் இப்படியே தெரிந்தவர்களை வைத்து ஓட்ட வேண்டியது தான்.

சரி, இப்பொழுது விஜயகாந்த் பிரச்சனைக்கு வருவோம். அவர் கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. அவருக்கு வாக்களித்த பலர் அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது. அவரிடம் இப்பொழுது இருப்பதெல்லாம் குடும்பத்தினரும் பெரும்பாலும் விசிலடிச்சான் குஞ்சுகளான ரசிகர் பட்டாளமும் தான். அந்தக் கூட்டத்தில் அவர் கண்ணில் பட்ட வரையில் திறமையும் நேர்மையும் உடையவராக அவரின் மனைவியும் மச்சானும் இருந்தார்களோ என்னமோ. யார் கண்டது?
யாமறியோம் பராபரமே!

பின்குறிப்பு 1: இந்த லாஜிக் எல்லாம் வியாபாரம் செய்வதற்குத் தான் ஒத்து வரும் அரசியலுக்கு அல்ல என்று பின்னூட்டம் இடத் தயாராகும் பதிவர்களுக்கு: வியாபாரம் வேறு அரசியல் வேறு என்று நினைக்கும் அளவிற்கு இவ்வளவு அப்பாவியா நீங்கள்!?

பின்குறிப்பு 2: இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தான் சொல்லி இருக்கிறேன். இப்படி தான் நடக்க வேண்டும் என்றல்ல.

பின்குறிப்பு 3: இந்த கேள்வியைக் கேட்டு, தோதாக ஒரு பின்னூட்டமும் போட்டு இப்படி ஒரு பதிவெழுத என்னைத் தூண்டி விட்ட வால்பையனுக்கு நன்றி!

4 குட்டு:

said...

கலக்கல் லாஜிக்.. ரொம்ப உண்மையும் கூட.

Anonymous said...

Nice one

Anonymous said...

//அவர் கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது.//

பாமக, கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாலும் பரவால்ல. லதிமுக ஜனதான்னு ஒரு ஆள் கட்சிக்க்கு எல்லாம் வரலாறு புவியியல் இருக்குன்னு சொல்லுர உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியல் பேசுறத நிறுத்தனும். அப்போ தான் நாடு உருப்படும்.

said...

//பாமக, கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாலும் பரவால்ல. லதிமுக ஜனதான்னு ஒரு ஆள் கட்சிக்க்கு எல்லாம் வரலாறு புவியியல் இருக்குன்னு சொல்லுர உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியல் பேசுறத நிறுத்தனும். அப்போ தான் நாடு உருப்படும்.//

:(
எதற்கும் என் அடுத்த பதிவையும் படித்து விடுங்களேன்!