Thursday, 10 April 2008

டோண்டு ஐயா மற்றும் சம்பந்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க...

எதாவது எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் தாவு கழண்டு விடுகிறது. போதாக்குறைக்கு சோம்பல் வேறு. சுஜாதா மறைவுக்கு ஒருஅஞ்சலி பதிவு போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன். ஸ்டெல்லா புரூஸ், ரகுவரன் என்று காலம் ஓடி விட்டது. இன்னும் சுஜாதா பதிவு 4 வரி தாண்டவில்லை. அப்படியே அதை எழுதி முடித்தாலும், இப்பொழுது அதை வெளியிட்டால், 'என்ன எம்ஜிஆர் செத்துட்டாரா?' என்று நக்கல் வரும் என்பதால் அந்த பதிவை வெளியிடவும் முடியாது.

எனக்கென்று பெரிதாக ஒரு லட்சியம், கொள்கை, கருத்து, கத்திரிக்காய் என்று எதுவும் கிடையாது. நானெல்லாம் பதிவு எழுத வந்ததே தமிழ் எழுதிப் பழக வேண்டும் என்பதற்காகத் தான். அதுவும் நடக்கிற காரியமாக தெரியவில்லை. அதனால் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று கொஞ்சம் திருட்டு வேலை. டோண்டு ஐயாவிடம் பிறர் கேட்ட கேள்விகளில் சிலவற்றை எனக்கு வந்ததாக எடுத்துக் கொண்டு விட்டேன். டோண்டு மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற பதிவர்கள் மன்னிக்க. இதை நான் வெளியிடுவதில் உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இருந்தால், copyright ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். நீக்கி விடுகிறேன். கேள்விகளுக்கு போகலாமா?

உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா?
எனது பதிவுகளை உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களும் படிக்கிறார்கள் பின்னூட்டமும் இடுகிறார்கள். நான் தான் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்று சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனால் உண்மை என்னவென்றால், என் பதிவுகளை யாருமே படிப்பதில்லை, நான் உட்பட.

பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு மிக அதிகப் பொருத்தமாக இருப்பது யார்?
விஷால்!?

பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?
பதிவு போடவே வக்கில்லை இதில் எதிர் பதிவா? அட போங்கப்பா.

உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?
கல்லூரியில் படித்த காலத்தில் புதிய முகம் திரைப்படத்தில் வரும் 'நேற்று இல்லாத மாற்றம்' ஸ்டைலில் ஒரு கவிதை எழுதினேன்.

பல்பின் வெளிச்சம் எல்லாம் ப்யூஸ் போகும் வரை
சைக்கிள் பயணம் எல்லாம் பஞ்சர் ஆகும் வரை
என்று ஜெயமோகன் கட்டுரை போல நீளமாக போகும் அந்த கவிதையை படித்த என் தோழி அதன் கடைசி வரியாக உனது கிறுக்கல் எல்லாம் இங்க்கு தீரும் வரை என்று எழுதி முடித்தாள். அன்றைக்கு விட்டது தான். தமிழுலகம் தப்பியது.

உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?
என் மனதிற்கு பிடித்த பதிவை நான் இன்னும் எழுதவே இல்லை என்பது தான் உண்மை. அப்படி ஒரு பதிவை நான் எழுதி விட்டேன் என்று தோன்றி விட்டால், நான் இந்த வலையுலகில் சாதித்தது(!) போதும் என்று கிளம்பி விடுவேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)

நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
முடியாது. ஏனென்றால் நான் வசிப்பது சென்னையில் அல்ல.

குமுதத்தில் பாலகுமாரன் - எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம் என சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர் இதை ஒரு 10 வருடத்திற்க்கு முன்பே சொல்லி இருந்தால் அவரை தீர்க்கதரிசி என்று சொல்லி இருக்கலாம்.

குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?

அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?
நான் அம்பேல்

"Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பெரும்பான்மையினரின் நம்பிக்கைக்கு எதிராக ஒன்றை சொன்னால் விரைவில் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். அறியாமையின் காரணமாகவும் இருக்கலாம். மற்றபடி விநாயகரின் இருப்பையே நம்பாதவர்களுக்கு பாரதம் என்ற கதையை வியாசர் சொல்லி விநாயகர் எழுதியிருந்தால் என்ன? விநாயகர் சொல்லி வியாசர் எழுதியிருந்தால் என்ன?

2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?
வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் 12 வருடங்களுக்குள் வல்லரசு ஆக வேண்டும் என்றால் ஹிட்லர் காட்டிய வழி தான் சாத்தியம். தேவையா? நிற்க, இந்தியா வல்லரசு ஆவதினால் என்ன பிரயோஜனம்?

தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?
அழகிரியும் ஸ்டாலினும் கட்சி சாம்ராஜ்யத்தை ஆளுக்கு பாதியாக பிரித்து பரிபாலனம் செய்யலாம். ஆட்சிக்கு? என் சாய்ஸ் கனிமொழி!

ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?
சுத்தமாக கிடையாது. ஆனாலும் வீடு கட்டும் பொழுது கொஞ்சம் போல வாஸ்து பார்த்தது உண்மை. நாளை வீட்டை விற்கும் பொழுது இதை காரணமாக காட்டி சில ஆயிரங்கள் குறைத்துக் கேட்கக் கூடாதே என்ற வியாபார நோக்கம் தான்!

ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?
எனக்கு இந்த பழக்கத்தை கொண்டு வந்தது என் தந்தையார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.

இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?
ரொம்ப சுலபமான கேள்வி. ஒன்பது என்பதே சரியான பதில்.

8 குட்டு:

Anonymous said...

Nice. keep it up

said...

//ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?
எனக்கு இந்த பழக்கத்தை கொண்டு வந்தது என் தந்தையார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.//
எங்கேயோ போயிட்டீங்க. :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

பதிவு சூப்பர்...

said...

//குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?//

நகைசுவையான பதில், குடும்ப அரசியலை செய்யும் எல்லோருக்கும் இதே பதிலை எடுத்து கொள்ளலாமா(ஆட்டோ வரும் பரவாயில்லையா)

அதென்ன எனது கேள்விகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம்

ஏதேனும் உள்குத்தா

வால்பையன்

said...

வால்பையன்:
//நகைசுவையான பதில், குடும்ப அரசியலை செய்யும் எல்லோருக்கும் இதே பதிலை எடுத்து கொள்ளலாமா(ஆட்டோ வரும் பரவாயில்லையா)//

அப்படி ஆட்டோ அனுப்பினால், அந்தக் கட்சியில் அவர்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு உறுப்பினர்களே இல்லை என்று அவர்களே ஒத்துக் கொண்டது போல ஆகி விடுமே! அதனால் ஆட்டோ வராது என்றே எண்ணுகிறேன். :)

//அதென்ன எனது கேள்விகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம்

ஏதேனும் உள்குத்தா //

அப்படி எல்லாம் ஒன்னுமில்லீங்கண்ணா. நான் பதில் சொல்லுற அளவுக்கு சுலபமான கேள்விகள் அதிகம் கேட்டது நீங்க தான் போல இருக்கு.

said...

good one !

said...

:):)

said...

//ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?
எனக்கு இந்த பழக்கத்தை கொண்டு வந்தது என் தந்தையார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.//

ஜட்டி விஷயத்தில் டோண்டு ஐய்யாவின் பதில் சூப்பர் என்றால்,உங்கள் பதிலில் இருந்த பன்ச் அற்புதம்!