Sunday, 13 April 2008

சுஜாதா சொன்னது சரியா?

குடும்ப அரசியல் பதிவில் நான் இப்படி எழுதி இருந்தேன்

"அவர் (விஜயகாந்த்) கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. "
இதற்கு ஒரு அனானி எழுதியிருந்த பின்னூட்டம்
"பாமக, கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாலும் பரவால்ல. லதிமுக ஜனதான்னு ஒரு ஆள் கட்சிக்க்கு எல்லாம் வரலாறு புவியியல் இருக்குன்னு சொல்லுர உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியல் பேசுறத நிறுத்தனும். அப்போ தான் நாடு உருப்படும்."
இதைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன் சுஜாதா ஒரு கட்டுரையில் (கற்றதும் பெற்றதுமா இல்லை கடைசி பக்கங்களா என்று சரியாக நினைவில்லை) எழுதியது தான் ஞாபகம் வந்தது.
"குமுதம் இதழ் தற்போது ஓட்டக்காரர்களாலும் ஆட்டக்காரர்களாலும் பாட்டுக்காரர்களாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டி.ராஜேந்தர் தயாரித்த குமுதம் இதழில் ஒரு பகுதியை கருத்து தெரிவிக்காமல் அப்படியே தருகிறேன்.

என் பையனைப் பொறுத்த வரைக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு. ஸ்கூல் ஒர்க் பண்ண , ஸ்டடி பண்ண ஒரு டியூஷன் , தமிழுக்கு ஒரு டியூஷன் , இப்படி மூணு டியூஷனுக்குப் பையன் போறான். இதைத் தவிர கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு , ஜிம்னாஸ்டிக் வகுப்பு , தலைகீழாய் பையன் நடப்பான் , ஸாமர்சால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். இதைத் தவிர சனி ஞாயிறில் சினிமா ஃபைட்டிங் , காலையிலே கத்துக்கறான். கம்புச் சண்டை , மான் கொம்புச் சண்டை , குத்துச் சண்டை இந்த மாதிரி அதுக்கான ஸ்டண்ட் மாஸ்டர் வச்சு கத்துத் தர்ரேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு...

மேற்கோளிட்ட இந்த வாக்கியங்களின் சமூகவியல் சார்ந்த அர்த்தம் தெரிய வேண்டுமெனில் எனக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பவும்."
அடுத்த வாரம் அவருக்கு விளக்கம் கேட்டு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர்கள் வந்ததாக எழுதி, வர வர வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து கொண்டே போகிறதோ என்று வருத்தப்பட்டிருந்தார் :(

Friday, 11 April 2008

குடும்ப அரசியல் (அ) வால்பையனுக்கு நன்றி

எனது முதல் அரசியல் சார்ந்த பதிவு. பிரச்சனை எதுவும் வராமல் இருக்க அந்த மகரநெடுங்குழைகாதனும் தகர நெடுங்குழைகாதனும் அருள் புரிய வேண்டும்!

டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி-பதில் பகுதியில் வால்பையன் கேட்டிருந்த ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்

குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))
அதே கேள்விக்கு என்னுடைய முந்தைய பதிவில் நான் அளித்த பதில்
குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?
அந்த பதிவில் வால்பையன் இட்டிருந்த பின்னூட்டம்
நகைசுவையான பதில், குடும்ப அரசியலை செய்யும் எல்லோருக்கும் இதே பதிலை எடுத்து கொள்ளலாமா(ஆட்டோ வரும் பரவாயில்லையா)
யோசித்துப் பார்த்தால் அதை வெறும் நகைச்சுவை என்று முற்றிலும் ஒதுக்கி விட முடியாது என்று நினைக்கிறேன். அதில் சிறிதளவு யதார்த்தமும் கலந்து இருப்பதாக இப்பொழுது தோன்றுகிறது. உதாரணத்திற்கு நான் ஒரு நிறுவனம் தொடங்கினால் (அட சும்மா ஒரு பேச்சுக்கு தான்) என்ன செய்வேன்? எனக்கு தனிப்பட்ட முறையில் பழக்கமான நபர்களில் யாரேனும் வேலைக்கு மாட்டுவார்களா என்று தேடுவேன். என்னுடன் படித்த மிகவும் திறமை உள்ளவர்கள் அனைவரும் ஏற்கனவே நல்ல வேலையில் பொட்டி பொட்டியாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகாது என்பதால் அவர்களை விட்டு விடுவேன். ஆனால் என்னுடன் படித்தவர்களில் சிலருக்கு ஓரளவிற்கு திறமை இருந்தும் சரியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நிறுவனத்தில் பொறியாளராக விருப்பமா என்று பார்ப்பேன். M.Com படித்த என் சித்தி பெண்ணுக்கு கணக்காளர் வேலை. அவள் எந்த அளவிற்கு வேலை தெரியும் என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் நம்பிக்கையான பெண். அது மட்டும் இல்லாமல் சிறிய நிறுவனம் தானே கணக்கு வழக்கு எல்லாம் எளிமையாகத் தான் இருக்கும். திறமையை விட நாணயம் தான் இங்கு முக்கியம்.

அதே போல் மனிதவளம் அந்தத் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ள என் தங்கைக்கு. அலுவலகத்தில் தேநீர் வழங்கும் பொறுப்பு என் சொந்த ஊரில் டீக்கடை நடத்தி கஷ்டப்படும் கோவாலு மாமாவுக்கு. என் தந்தையின் வாகன ஓட்டுனரின் வேலையில்லாத பையன் தான் என் அலுவலகத்தில் ஆஸ்தான டிரைவர். காவல்காரர் (சித்தப்பா - முன்னாள் இராணுவ வீரர்), வரவேற்பாளர் (அட்டகாசமாக ஆங்கிலம் பேசும் அக்கா மகள்), அந்தரங்க காரியதரிசி (**********) இப்படி யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வேலையிடங்களை எனக்கு தெரிந்தவர்களைக் கொண்டே நிரப்பி விடலாம். இது போக மீதம் இருக்கும் இடங்களை நிரப்ப மட்டுமே வெளியாட்கள் தேவைப்படுவார்கள். சிறிது காலம் கழித்து நிறுவனம் பெரியதாக வளரும் பொழுது மற்ற நிறுவனங்களில் இருக்கும் திறமைசாலிகளை இழுத்து முக்கிய பொறுப்புக்களை கொடுக்கலாம். நல்ல சம்பளமும் கொடுக்கலாம். எடுத்தவுடன் புதியவர்களை கொண்டு வருவதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று விலை கட்டுப்படியாகாது. இரண்டு அவர்கள் எந்த அளவிற்கு நம்பகமானவர்கள் என்று தெரியாது. நிறுவனம் வளர்ந்து நிர்வாகம் நன்றாக பிடிபடும் வரையில் இப்படியே தெரிந்தவர்களை வைத்து ஓட்ட வேண்டியது தான்.

சரி, இப்பொழுது விஜயகாந்த் பிரச்சனைக்கு வருவோம். அவர் கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. அவருக்கு வாக்களித்த பலர் அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது. அவரிடம் இப்பொழுது இருப்பதெல்லாம் குடும்பத்தினரும் பெரும்பாலும் விசிலடிச்சான் குஞ்சுகளான ரசிகர் பட்டாளமும் தான். அந்தக் கூட்டத்தில் அவர் கண்ணில் பட்ட வரையில் திறமையும் நேர்மையும் உடையவராக அவரின் மனைவியும் மச்சானும் இருந்தார்களோ என்னமோ. யார் கண்டது?
யாமறியோம் பராபரமே!

பின்குறிப்பு 1: இந்த லாஜிக் எல்லாம் வியாபாரம் செய்வதற்குத் தான் ஒத்து வரும் அரசியலுக்கு அல்ல என்று பின்னூட்டம் இடத் தயாராகும் பதிவர்களுக்கு: வியாபாரம் வேறு அரசியல் வேறு என்று நினைக்கும் அளவிற்கு இவ்வளவு அப்பாவியா நீங்கள்!?

பின்குறிப்பு 2: இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தான் சொல்லி இருக்கிறேன். இப்படி தான் நடக்க வேண்டும் என்றல்ல.

பின்குறிப்பு 3: இந்த கேள்வியைக் கேட்டு, தோதாக ஒரு பின்னூட்டமும் போட்டு இப்படி ஒரு பதிவெழுத என்னைத் தூண்டி விட்ட வால்பையனுக்கு நன்றி!

Thursday, 10 April 2008

டோண்டு ஐயா மற்றும் சம்பந்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க...

எதாவது எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் தாவு கழண்டு விடுகிறது. போதாக்குறைக்கு சோம்பல் வேறு. சுஜாதா மறைவுக்கு ஒருஅஞ்சலி பதிவு போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன். ஸ்டெல்லா புரூஸ், ரகுவரன் என்று காலம் ஓடி விட்டது. இன்னும் சுஜாதா பதிவு 4 வரி தாண்டவில்லை. அப்படியே அதை எழுதி முடித்தாலும், இப்பொழுது அதை வெளியிட்டால், 'என்ன எம்ஜிஆர் செத்துட்டாரா?' என்று நக்கல் வரும் என்பதால் அந்த பதிவை வெளியிடவும் முடியாது.

எனக்கென்று பெரிதாக ஒரு லட்சியம், கொள்கை, கருத்து, கத்திரிக்காய் என்று எதுவும் கிடையாது. நானெல்லாம் பதிவு எழுத வந்ததே தமிழ் எழுதிப் பழக வேண்டும் என்பதற்காகத் தான். அதுவும் நடக்கிற காரியமாக தெரியவில்லை. அதனால் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று கொஞ்சம் திருட்டு வேலை. டோண்டு ஐயாவிடம் பிறர் கேட்ட கேள்விகளில் சிலவற்றை எனக்கு வந்ததாக எடுத்துக் கொண்டு விட்டேன். டோண்டு மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற பதிவர்கள் மன்னிக்க. இதை நான் வெளியிடுவதில் உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இருந்தால், copyright ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். நீக்கி விடுகிறேன். கேள்விகளுக்கு போகலாமா?

உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா?
எனது பதிவுகளை உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களும் படிக்கிறார்கள் பின்னூட்டமும் இடுகிறார்கள். நான் தான் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்று சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனால் உண்மை என்னவென்றால், என் பதிவுகளை யாருமே படிப்பதில்லை, நான் உட்பட.

பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு மிக அதிகப் பொருத்தமாக இருப்பது யார்?
விஷால்!?

பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?
பதிவு போடவே வக்கில்லை இதில் எதிர் பதிவா? அட போங்கப்பா.

உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?
கல்லூரியில் படித்த காலத்தில் புதிய முகம் திரைப்படத்தில் வரும் 'நேற்று இல்லாத மாற்றம்' ஸ்டைலில் ஒரு கவிதை எழுதினேன்.

பல்பின் வெளிச்சம் எல்லாம் ப்யூஸ் போகும் வரை
சைக்கிள் பயணம் எல்லாம் பஞ்சர் ஆகும் வரை
என்று ஜெயமோகன் கட்டுரை போல நீளமாக போகும் அந்த கவிதையை படித்த என் தோழி அதன் கடைசி வரியாக உனது கிறுக்கல் எல்லாம் இங்க்கு தீரும் வரை என்று எழுதி முடித்தாள். அன்றைக்கு விட்டது தான். தமிழுலகம் தப்பியது.

உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?
என் மனதிற்கு பிடித்த பதிவை நான் இன்னும் எழுதவே இல்லை என்பது தான் உண்மை. அப்படி ஒரு பதிவை நான் எழுதி விட்டேன் என்று தோன்றி விட்டால், நான் இந்த வலையுலகில் சாதித்தது(!) போதும் என்று கிளம்பி விடுவேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)

நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
முடியாது. ஏனென்றால் நான் வசிப்பது சென்னையில் அல்ல.

குமுதத்தில் பாலகுமாரன் - எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம் என சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர் இதை ஒரு 10 வருடத்திற்க்கு முன்பே சொல்லி இருந்தால் அவரை தீர்க்கதரிசி என்று சொல்லி இருக்கலாம்.

குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?

அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?
நான் அம்பேல்

"Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பெரும்பான்மையினரின் நம்பிக்கைக்கு எதிராக ஒன்றை சொன்னால் விரைவில் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். அறியாமையின் காரணமாகவும் இருக்கலாம். மற்றபடி விநாயகரின் இருப்பையே நம்பாதவர்களுக்கு பாரதம் என்ற கதையை வியாசர் சொல்லி விநாயகர் எழுதியிருந்தால் என்ன? விநாயகர் சொல்லி வியாசர் எழுதியிருந்தால் என்ன?

2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?
வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் 12 வருடங்களுக்குள் வல்லரசு ஆக வேண்டும் என்றால் ஹிட்லர் காட்டிய வழி தான் சாத்தியம். தேவையா? நிற்க, இந்தியா வல்லரசு ஆவதினால் என்ன பிரயோஜனம்?

தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?
அழகிரியும் ஸ்டாலினும் கட்சி சாம்ராஜ்யத்தை ஆளுக்கு பாதியாக பிரித்து பரிபாலனம் செய்யலாம். ஆட்சிக்கு? என் சாய்ஸ் கனிமொழி!

ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?
சுத்தமாக கிடையாது. ஆனாலும் வீடு கட்டும் பொழுது கொஞ்சம் போல வாஸ்து பார்த்தது உண்மை. நாளை வீட்டை விற்கும் பொழுது இதை காரணமாக காட்டி சில ஆயிரங்கள் குறைத்துக் கேட்கக் கூடாதே என்ற வியாபார நோக்கம் தான்!

ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?
எனக்கு இந்த பழக்கத்தை கொண்டு வந்தது என் தந்தையார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.

இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?
ரொம்ப சுலபமான கேள்வி. ஒன்பது என்பதே சரியான பதில்.