Sunday, 30 November 2008

என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?

என் பதிவுலக நண்பர் ஒருவர் சமீபத்தில் நடந்த மும்பை பிரச்சனையைப் பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார். ஆனால் அதை யாரும் படிக்க முடியாது.

அவர் எழுதி ட்ராப்டில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவை படித்த நான் எப்பொழுது இதை வெளியிடப் போகிறீர்கள் என்று கேட்ட போது அவர் அந்தப் பதிவை வெளியிடப் போவதில்லை என்று கூறினார்.

"ஏன்?"

"தீவிரவாதத்தைக் கண்டிக்கும் இந்தப் பதிவை வெளியிட்டால் எனக்கு இந்துத்துவா முத்திரை குத்தப்படும். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என் மனதில் பட்டதை சொல்லியே தீருவேன் என்ற தைரியமும், பக்குவமும் எனக்கு இன்னும் வரவில்லை. எதற்கு வீண் வம்பு?"

"ஆனால் உங்கள் பதிவில் எந்த ஒரு மதத்தையும் குறை கூறவில்லையே? தீவிரவாதத்தை எதிர்த்துத் தானே எழுதியிருக்கிறீர்கள்?"

"அது எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பதிவுலகில் உலா வரும் போலி மதச்சார்பற்ற பதிவர்களுக்கு அது வேறு மாதிரியாகத் தான் படும்"

"இதைப் பதிப்பித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது?"

"இப்பொழுது மும்பை பற்றி எழுதும் நான் மாலேகான் குண்டு வெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதாது ஏன் என்று கேள்வி வரும். அதற்கு காரணம் என் மதவெறியும் சாதி புத்தியும் தான் என்று ஒரு பிரச்சாரம் நடக்கும். அப்படி ஒரு முறை முத்திரை குத்தப்பட்டு விட்டால் கடைசி வரைக்கும் அந்தக் கறை அழியாது. அவர்களுக்கு பதில் சொல்ல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. விடுங்க"

"மாலேகான் குண்டு வெடிப்பு நடந்தது 2006- இல். அப்பொழுது உங்களுக்கு வலைப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாது. நீங்கள் பதிவெழுத வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது என்று சொல்ல வேண்டியது தானே?"

"சொன்னால்? புரிந்து கொள்வார்களா? நான் அதைக் கண்டித்து ஒரு பதிவாவது எழுதாத வரையில் இரைச்சல் நிற்காது. அந்த சம்பவத்தை பற்றி கண்டித்து எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அப்படி எழுதினால் இன்னொரு கோஷ்டி 2002இல் நடந்ததை பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்பும். இதற்கு ஒரு முடிவே கிடையாது"

"இது விதண்டாவாதம்"

"நீங்களும் இந்த பதிவுலகில் சிறிது காலமாக இயங்கி வருகிறீர்கள். நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்"


யோசித்துப் பார்த்தால் அந்த நண்பர் சொன்னதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்தால் கீழ் வெண்மணியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது, கருணாநிதி ஆட்சியைக் குறை கூறினால் ஜெயலலிதா ஆட்சியை ஏன் குறை கூறவில்லை என்று கேள்வி எழுப்புவது, தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எழுதினால் சென்ற பா.ஜ.க ஆட்சியின் போது தூங்கிக் கொண்டிருந்தாயா என்று சாடுவது. இது போன்ற எல்லா விவாதத்துக்கும் சாதி/மதப் பூச்சு வேறு!

அரசியல் மட்டுமல்ல. அனைத்து தளத்திலும் இதே வாதம் தான். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் ஒரு பதிவில் ரஜினியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரியென்று ரஜினியையும் விமர்சனம் செய்தால் எம்.ஜி.ஆர் மட்டும் என்ன புனிதமா என்ற கேள்வி மற்றொரு பக்கமிருந்து. எம்.ஜி.ஆரை பற்றியும் எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது, எம்.ஆர்.இராதா பற்றியும் எழுதினாலே ஆயிற்று என்றொரு கூட்டம். ஆக ஒரு சினிமா விமர்சனத்தை அரசியலாக மாற்றியாகி விட்டது.

இன்று மும்பை பயங்கரவாதத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் மாலேகான் குண்டு வெடிப்பை கண்டித்து ஒரு வரியாவது எழுதி விட்டுத் தான் தொடங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்தாகி விட்டது. மாலேகான் பற்றி எழுதும் முன்னர் 2006இல் நடந்த மும்பை இரயில் குண்டு வெடிப்பைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் குஜராத் கலவரம் பற்றி ஒரு கண்டனம். அப்படியே நூல் பிடித்துப் போனால் இராம ஜென்ம பூமி, மகாத்மா காந்தி கொலை, முகமதியர் படையுடுப்பு, யூதர்கள் வரலாறு, ஆதாம் ஏவாள், குரங்கு, அமீபா....

இப்படி எந்த ஒரு வாதத்திற்கும் முன் வாதம் ஒன்று தேவை என்று கூறும் அறிவு ஜீவி நண்பர்களுக்கு ஒரு கேள்வி - ஒரு விசயத்தைப் பற்றி எழுதும் முன்னர் அது சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தைப் பற்றியும் எழுதி விட்டுத் தான் மெயின் மேட்டருக்கே வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி? இந்த அளவுகோலின் படி பார்த்தால் ஒவ்வொரு பதிவரும் உலக வரலாற்றை முழுதுமாக எழுதி விட்டுத்தான் பதிவெழுதவே உட்கார வேண்டும். ஒரு சம்பவத்தை ஒருவர் கண்டித்து எழுதவில்லை என்பதினால் மட்டுமே அவர் அந்த சம்பவத்தை ஆதரிக்கிறார் என்ற முடிவுக்கு எப்படி வர முடிகிறது உங்களால்?

அதுவும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொதுப்படையாகவே இருக்கிறது - "இன்று இப்படி எழுதும் எல்லோரும் அன்று குப்பறப்படுத்து குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்களா?" என்ற ரீதியில். இன்று இந்த நபர் இப்படி கூறுகிறார் ஆனால் அன்று அப்படிக் கூறினார் என்று ஆதாரத்தோடு எல்லாம் சொல்வதில்லை. போகிற போக்கில் புழுதி வாரி விடுவதோடு சரி. அவர் அந்த விசயத்தை ஆதரிப்பதாக கூறியதே இல்லையே என்று கேட்டால், அவர் அந்த விசயத்தை எதிர்ப்பதாக என்றுமே எழுதியது இல்லையே, அது ஒன்றே சாட்சி அவர் அந்த சம்பவத்தை ஆதரிப்பதற்கு என்று நியாயப்படுத்துகிறார்கள்.

வடிவேலு பாசையில் சொன்னால் "சுத்த சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு?" சந்திரமுகி பிரபு ஸ்டைலில் (!?) சொன்னால் "என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?


பின் குறிப்பு: பொதுவாக நான் இந்த மாதிரி விசயத்தை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. இந்த மாதிரி விதண்டாவாதங்களை நிறைய பார்த்திருந்தாலும் படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததே கிடையாது; இன்று மதியம் வரை.

இன்று மதிய உணவின் போது மனைவியிடம் "குழம்பில் கொஞ்சம் உப்பு கம்மி" என்று சொன்னதற்கு மனைவியின் பதில்...

"போன வருசம் கோயம்புத்தூர் ஓட்டல் அன்னபூரணால லஞ்ச் சாப்பிடும் போது சாம்பார்ல உப்பு ஜாஸ்தியா இருந்ததே அதப் பத்தி நீங்க இதுவரைக்கும் ஒரு தடவ கூட வாயத் திறந்ததில்ல, இப்போ என் சமையல பத்தி மட்டும் என்ன கமெண்ட் வேண்டிக்கிடக்கு?"

பிற்சேர்க்கை (02/12/2008): இந்தப் பதிவைப் படித்த சில நண்பர்கள் நான் எழுதியது ஒரு சாராரை மட்டும் குற்றம் சாட்டுவது போல தென்படுகிறது என்று கூறினார்கள். என் நோக்கம் அதுவல்ல. ஒரு வேளை அப்படி தோன்றியிருந்தால் மன்னிக்கவும். நான் சொன்னது இது மாதிரியான வாதத்தை முன்வைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். இந்த பதிவுலகத்தில் நான் பார்த்த உதாரணங்களில் சில:

1. ஒர் பதிவர் போலிச் சாமியார் பற்றி ஒரு பதிவெழுதினார். அதற்கு வந்த பின்னூட்டம் - "இந்து சாமியாரை பற்றி எழுதும் நீங்கள் தீவிரவாதம் வளர்க்கும் இஸ்லாமிய மதராஸாக்களை பற்றி ஏன் எழுதவில்லை?". இத்தனைக்கும் அந்தப் பதிவை எழுதியவர் இந்து மதத்தை தாக்கி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அந்த சாமியார் அடித்த கூத்தைப் பற்றி மட்டுமே எழுதியிருந்தார்.

2. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதின் வன்முறையை பற்றி அரசியல் கலப்பில்லாமல்
கண்டித்து எழுதிய ஒரு பதிவருக்கு வந்த பின்னூட்டம் - "தர்மபுரியில் பஸ் எரிந்த போது எங்கே போயிருந்தீர்கள்?". அது வரை அந்தப் பதிவர் எழுதிய பதிவுகளே 10 கூட இருக்காது. அதிலும் மொக்கை இல்லாத முதல் பதிவு அது தான். அதற்குள் இப்படி ஒரு கேள்வி.

இது மாதிரி ஆயிரம் எழுதலாம். இப்பதிவின் தலைப்பை மறுபடியும் படிக்கவும்!

And now we're even!

Wednesday, 15 October 2008

சினிமா - சர்வே, கேள்வி பதில், மலரும் நினைவுகள்.


நாகார்ஜுனன் ஆரம்பித்து பிரகாஷினால் மீம் ஆக்கப்பட்ட தமிழ் திரைப்பட சர்வே பதிவுகள் தமிழ் பதிவுலகில் ஆக்டோபஸ் போல கை, கால், வால் என அனைத்தையும் பரப்பி வருகிறது. யார் யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை விட இன்னும் யார் யார் எழுதவில்லை என்பதைக் கணக்கெடுப்பது சுலபம் என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கு யாரும் என்னை கூப்பிடவில்லை (நான் ஒருவன் இங்கே இருப்பது தெரிந்தால் தானே கூப்பிடுவதற்கு?). சிறு வயதில் இருந்தே என் ராசி அப்படி. கிரிக்கெட், கால்பந்து என்று எந்த ஆட்டையிலும் சேர்க்க மாட்டார்கள். என்ன போச்சு என்று நானும் தனியாக விளையாடுவேன். அதே கொள்கையை பின்பற்றி, இதோ...


1-அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?


எந்த வயது என்பது சரியாக நினைவில்லை. மதுரையில் முரட்டுக்காளை படம் பார்க்க சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்றதும், டிக்கெட் கிடைக்காமல் வேறு ஏதோ ஒரு படத்துக்கு சென்றதும் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஐந்து வயது இருக்கலாம்.
விடியும் வரை காத்திரு, தண்ணீர் தண்ணீர், தியாகி, Jaws, Moonraker, Genghis Khan, The Gods must be crazy போன்ற படங்களை அரங்கில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. பார்த்த வயதும் காலமும் குழப்பமாக இருக்கிறது.

1-ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நன்றாக நினைவு தெரிந்த பின் பார்த்த படம் சென்னை நாகேஷ் தியேட்டரில் 'பாடும் வானம்பாடி'.

1-இ. என்ன உணர்ந்தீர்கள்?

கூட்டம் அதிகம் இருந்ததால் சிறுவனான என்னை பெண்கள் வரிசையில் நிறுத்தி டிக்கெட் வாங்க வைத்தார்கள். மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

சிவாஜி (லண்டனில்). நான் சென்ற பொழுது அதே வளாகத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான Shrek 3, Rise of the Silver Surfer போன்ற படங்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்த போது, பல நாட்களாக ஓடிக் கொண்டிருந்த சிவாஜி மட்டும் ஹவுஸ் புல்!

இந்த பதிவை படித்த என் மனைவி சொன்னது "குசேலன் படம் தானே அரங்கில் கடைசியாக பார்த்தது?" அப்படி ஒரு படம் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டேன் போல!

3-அ. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது

பெரியார்

3-ஆ. எங்கே

வீட்டில் (டி.வி.டி).

3- இ. என்ன உணர்ந்தீர்கள்?

சிறு வயதில் பள்ளியில் "ஆமைக்கும் முயலுக்கும் ரேஸு" நாடகம் நடத்தினோம் (நான் ஆமை). காட்டில் நடக்கும் கதை என்பதால் நாடக அரங்கில் நாலைந்து வேப்ப மர குச்சிகளை நட்டு வைத்து பில்ட்-அப் கொடுத்தோம்.
பெரியார் படத்தின் தரத்தை பார்த்த போது அந்த நாடகம் தான் நினைவுக்கு வந்தது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ஒவ்வொரு கால கட்டத்திலும் வேறு வேறு படங்களின் தாக்கம் இருந்திருக்கிறது. எதன் தாக்கம் அதிகம் என்று சொல்வது கடினம். முள்ளும் மலரும், நாயகன், சத்யா, மகாநதி, குருதிப்புனல், இருவர், ஹேராம், பிதாமகன், புதுப்பேட்டை, பருத்தி வீரன், அஞ்சாதே, சுப்ரமணியபுரம் என்று பல படங்கள்.
நடுவே தில்லுமுல்லு, சென்னை-600028, ஓரம் போ என்று லைட் வெயிட் படங்களும் உண்டு.

ஏதாவது ஒரு படத்தை தான் சொல்ல வேண்டும் என்றால் அது 'ஒன்ஸ் மோர்'. அந்தப் படத்தில் தான் நான் சிம்ரனை முதலில் பார்த்தேன். பார்த்ததும் தாக்கப்பட்டேன். அந்த தாக்குதலில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆனது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

மதுரையில் நடந்த முதல்வன் திரைப்பட விவகாரம். என் சகோதரர் கேபிள் டீ.வி தொழில் நடத்தி வந்ததால் எனக்கு இவ்விசயத்தில் நேரடி அனுபவம் உண்டு. அரசியல்வாதிகள் சின்ன சின்ன சில்லறை விசயங்களுக்கு கூட எவ்வளவு சீரியசாகவும் சின்ஸியராகவும் வேலை செய்வார்கள் என்பதை உணர வைத்த நிகழ்ச்சி அது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

விக்ரம். இந்தப் படத்திற்கு இளையராஜா கம்ப்யூட்டர் கொண்டு இசையமைப்பதாக செய்தி வந்தது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று சரியாக தெரியாத காலம் அது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகிய ஒரு நன்பனிடம் கேட்ட போது "கம்ப்யூட்டர் என்றால் கை கால் எல்லாம் இருக்கும் (ரோபோ என்று கொள்க). ஸ்விட்ச் போட்டால் அதுவாகவே கீ-போர்ட், ஆர்மோனியம் எல்லாம் வாசிக்கும். இனி மேல் இளையராஜா செய்ய வேண்டியது எல்லாம் ஸ்விட்ச் போட வேண்டியது மட்டுமே" என்றான். நம்பினேன் :(

அபூர்வ சகோதரர்கள் பார்த்து விட்டு ஷூவின் அடிப்பாகத்தை கிழித்து முட்டி வரை இழுத்து விட்டு, ஒரு மேஜையின் பின்னால் நின்று குள்ள அப்புவாக 'புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பர' பாடினேன். நிறைய பேர் கை தட்டினார்கள். அப்பா முதுகில் தட்டினார், ஒரு ஜோடி ஷூவை பாழாக்கியதற்காக.

ஓரளவு விஷயம் தெரிந்ததும் தாக்கப்பட்டது இருவர் படத்தினால். தொழில்நுட்பத்தில் பல சிகரங்களை தொட்ட இந்தப் படம் வேறு பல காரணங்களுக்காக தோல்வி அடைந்தது சோகமே.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

முன்பு குமுதத்தில் வந்த லைட்ஸ்-ஆன் பகுதி பிடிக்கும். என் மாமா சேர்த்து வைத்திருந்த பழைய பேசும் படம் பத்திரிக்கைகளை நிறைய தரம் படித்திருக்கிறேன். தங்களுக்கு பிடித்த திரைப்படப் பாடல்களைப் பற்றி வாசகர் எழுதும் ஒரு பகுதி அருமையாக இருக்கும். இன்றைய பல திரைப்பட பாடல் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு அதுவே முன்னோடி. அதே போல ஒரு திரைப்படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் ஒரு பகுதியும் ரொம்பப் பிடிக்கும் (பெரும்பாலும் continuity பிழைகள்).

சலூனில் காத்திருக்கும் சமயங்களில் வாரமலரின் 'துணுக்கு மூட்டை', தினத்தந்தியின் 'அல்லி பதில்கள்' படித்தது ஒரு வித 'சுய துன்புறுத்தலில் மகிழ்வடையும்' (masochism) முயற்சியாக இப்பொழுது தோன்றுகிறது.

அயல்நாடு வந்ததில் இருந்து தமிழ் வாசிப்பு என்றாலே பதிவுகளின் மூலம் தான் என்றாகிவிட்டது. தமிழ் சினிமா என்று தேடிப் பிடித்து வாசிப்பதில்லை. தற்சமயம் R P ராஜநாயஹத்தின் திரைப்படம் சார்ந்த Carnal thoughts பதிவுகள் அபாரமாக இருக்கிறது. லக்கிலுக், மோகன்தாஸ் ஆகியோர் எழுதும் சினிமா விமர்சனங்களை விரும்பிப் படிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

இசையைப் பொறுத்தவரை நான் ஒரு ஞானசூன்யம். ஒரு பாடலைப் பாடியது எஸ்.பி.பியா ஜேசுதாஸா என்று கூட கண்டுபிடிக்க தெரியாது. இருந்தாலும் ஒரு காலத்தில் பாடல்களை கேட்பதை ஒரு வேலையாகவே செய்து வந்தேன்.

இப்பொழுது எல்லாம் அயர்ன் செய்யும் பொழுதும் ஷேவ் செய்யும் பொழுதும் பின்னணியில் பாடலை ஓட விடுவதுடன் சரி. சிறு வயதில் குத்து பாடல்கள் பிடித்தது. பின்னர் காதல் பாடல்கள், சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பழைய பாடல்கள் என்று ரசனை மாறி இப்பொழுது மறுபடியும் குத்து பாடலில் வந்து நிற்கிறது (நாக்க முக்க - காதலில் விழுந்தேன், கத்தாழ கண்ணால - அஞ்சாதே, கன் கணபதி தான் - ஓரம் போ, மதுர குலுங்க - சுப்ரமணியபுரம், ஊரோரம் புளியமரம் - பருத்திவீரன்).

பாடல்களைத் தவிர்த்து பின்னணி இசை என்று பார்த்தால் யுவன் சங்கர் ராஜாவின் புதுப்பேட்டை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அவ்வப்போது இந்திப் படங்கள் பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிப் படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை. மொழி தெரியாதது ஒரு முக்கிய காரணம். ஜெர்மனி, ஸ்பானிஷ், ப்ரஞ்சு பொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் போது ஏற்படாத நெருடல் இந்திய மொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதே பிரச்சனை சீன, ஜப்பானிய மொழிப் படங்கள் பார்க்கும் பொழுதும் உண்டு!

தற்போது நான் தமிழை விட அதிகம் பார்ப்பது வேற்று நாட்டுப் படங்களே. பலர் ஹாலிவுட் படங்கள் எல்லாம் குப்பை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹாலிவுட் படங்களில் குப்பை அதிகம் வரக் காரணம் ஹாலிவுட் படங்கள் அதிகம் வருவதே. அனிமேஷன் (Wall-E), ஃபாண்டஸி (Lord of the Rings) போன்ற வகைப் படங்கள் எடுப்பதில் ஹாலிவுட்டை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.

பாதித்த படங்கள் அனைத்தையும் பட்டியலிட்டால் இந்த பதிவு கொள்ளாது என்பதால் சில மட்டும் - Amores perros, The Motorcycle Diaries (ஸ்பானிஷ்), Das Boot, Run Lola Run (ஜெர்மனி), Irreversible (பிரான்ஸ்), Seven Samurai, Ran (ஜப்பான்), Hero (சீனம்), Oldboy (கொரியா), The Shawshank Redemption, Amadeus, Pulp Fiction, Saving Private Ryan (ஆங்கிலம்)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அடுத்த கேள்விக்குச் செல்லவும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

முந்தைய கேள்விக்குச் செல்லவும்.
-------------------------------------------------

இந்த விளையாட்டைத் தொடர ஐந்து பேரை அழைக்க வேண்டுமாம். அழையா விருந்தாளியான நான் இன்னும் சிலரை கூட்டு சேர்ப்பது நியாயமில்லை என்பதினால் நானாக யாரையும் அழைக்கப் போவதில்லை. இதைப் படிக்கும் யாராவது ஐந்து பேர் என்ன வேண்டுமோ எழுதிக் கொள்ளுங்கள் (ஐந்து பேராவது இந்தப் பதிவைப் படித்தால்)

Friday, 10 October 2008

மகன் கற்றுக் கொடுத்த (ஜென்) பாடம்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என் மூன்று வயது மகன் திடீரென எழுந்து "வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்றான்.

"என்ன வேண்டும்" என்று கேட்டேன்.

"எதுவும் வேண்டாம்" என்று கூறி விட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.

அந்த தருணத்தில் நான் என் அறியாமை நீங்கி தன்னொளி பெற்றேன்.

மேலும் அறிய: ஜென், கோயன்

Wednesday, 3 September 2008

கூகிள் க்ரோம் - இரண்டாம் பார்வை

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் இணையத்தில் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது இம்சையான விசயம். மேனேஜருக்கு தெரியாமல் ஒளிந்து மறைந்து பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் எனக்கு அடைக்கலம் அளித்து காத்தது தான் Lynx எனப்படும் உலாவி. அதில் படம் எதுவும் தெரியாது எழுத்து மட்டும் தான் என்பதால் அதை மேலோட்டமாகப் பார்த்தால் நாம் இணையத்தில் இருப்பது போலவே தெரியாது. மேனேஜரும் நாம் ஏதோ முக்கிய வேலையில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்.

LYNX

இந்த சம்பவம் தான் எனக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர உலகில் வேறு சில உலாவிகளும் உண்டு என்பதையும் அதனாலும் சில பயன்கள் உண்டு என்பதையும் புரிய வைத்தது. இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு சரியான மாற்று எதுவும் இல்லாத காலம் அது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் மரணப்படுக்கையில் கிடந்தது.
சஃபாரி விண்டோஸில் வேலை செய்யாது. பீனிக்ஸ், ஓபெரா எல்லாம் பெரும்பாலானோர் (முக்கியமாக இந்தியாவில்) கேள்விப்படாத பெயர். எனவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற கதையாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் ஆட்சி செய்து வந்தது.சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய நண்பர்கள் மூலம் ஃபயர்பாக்ஸ் அறிமுகமானது. ஃபயர்பாக்ஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட எந்த விசயத்தில் உசத்தி என்று அப்பொழுது புரியவில்லை என்றாலும் நண்பர்கள் (அதுவும் அறிவுஜீவி நண்பர்கள்) சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி ஃபயர்பாக்ஸை சரணடைந்தேன். பின்னர் ஃபயர்பாக்ஸின் Add-ons பற்றித் தெரிய வந்ததும், மொத்தமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மறந்தேன்.

பின்னர் சஃபாரி, ஓபெரா என்று அனைத்தையும் முயற்சித்து ஒவ்வொன்றிலும் ஒரு விசயம் பிடித்துப் போக அனைத்தையும் கலந்து கட்டி உபயோகிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்றால் லின்க்ஸ் (Lynx) தான். தொட்டில் பழக்கம்! அனைத்து உலாவிகளையும் உபயோகித்தாலும் ஃபயர்பாக்ஸ் தான் செல்லக் குழந்தை.

இந்த நிலையில் கூகிள் ஒரு உலாவியை உருவாக்கி வருவதாக பேச்சு எழும்பியதும் அதை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கிய காரணம் கூகிளின் எளிமை. முதன்முதலில் ஜி-மெயில் பார்த்ததும் அதன் வெறுமையைக் கண்டு கொஞ்சம் அரண்டு தான் போனேன். மெயில்களை பகுத்து வைக்க ஃபோல்டர் (folder) கூட இல்லாமல் அலங்காரமற்று மொக்கையாக இருந்தது. பிறகு பழகப் பழக ஜி-மெயிலின் சக்தி புரிய ஆரம்பித்தது. இது கூகிளின் பிற வெளியீடுகளுக்கும் பொருந்தும்.

நேற்று கூகிள் க்ரோம் வெளியிடப்பட்ட இரண்டாவது நிமிடம் அதை தரவிரக்கி உபயோகிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றிய சில குறிப்புக்கள் (அப்பாடி ஒரு வழியாக விசயத்துக்கு வந்தாச்சு!)

*எதிர்பார்த்த மாதிரியே பார்க்க வெகு எளிமையாக இருக்கிறது. உலாவி என்ற மென்பொருள் ஒன்று இருப்பது போலவே தோன்றவில்லை.

* மற்ற உலாவிகளுடன் ஒப்பிடும் போது க்ரோம் வேகமாகவே உள்ளது. உலாவியில் இயங்கும் ஜாவாஸ்கிரிப்ட் மொழியின் வேகத்தைப் பரிசோதிக்க கூகிள் சிபாரிசு செய்யும் தளம் இது: http://code.google.com/apis/v8/run.html. கூகிளின் தயாரிப்பை கூகிள் தளத்திலேயே போய் சோதிப்பதா என்று நினைப்பவர்கள் இங்கே செல்லலாம். இரண்டிலும் சோதனை செய்து பார்த்ததில் ஃபயர்பாக்ஸ், சபாரி மற்றும் ஓபெராவை விட க்ரோம் பல மடங்கு வேகமாக இருக்கிறது. (IE பற்றிக் கேட்கவே வேண்டாம். மொத்தமாக படுத்து விட்டது).

*ஒரு கோப்பை தரவிரக்க க்ரோம் எடுத்துக் கொள்ளும் நேரமும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் ஓபெரா அளவுக்கு வேகமாக இருக்காது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு துல்லியமாக அளந்து பார்க்க என்னிடம் வசதி கிடையாது.

* Web standard எனப்படும் இணைய தரத்திலும் க்ரோம் முந்துகிறது. http://acid3.acidtests.org/ தளத்தில் சோதித்துப் பார்த்த பொழுது க்ரோம் நூற்றுக்கு 78 மதிப்பெண்கள் எடுத்து ஓபெராவிற்கு அடுத்த நிலையில் இருக்கிறது (ஓபெரா = 83/100, ஃபயர்பாக்ஸ் = 70/100, சஃபாரி = 75 / 100, IE6 = 11 / 100).

*பிற உலாவிகளில் இருப்பது போல இணைய தள முகவரி அடிப்பதற்கு ஒரு டப்பா (text box), தேடுவதற்கு ஒரு டப்பா என்றில்லாமல் க்ரோமில் ஒரே டப்பா தான். எனக்கு இது வசதியாகவே இருக்கிறது.

*புதிதாக ஒரு பக்கத்தை திறந்தால் நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை எல்லாம் காட்டுகிறது. அதில் இருந்து நீங்கள் விரும்பும் தளத்துக்கு செல்லலாம். இது வசதியா இல்லை தொல்லையா என்பது நீங்கள் எந்த மாதிரி தளங்களுக்கு அடிக்கடி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது! :) இது எறக்குறைய ஓபெராவில் இருக்கும் 'Speed Dial' போலத் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஓபெராவில் நீங்கள் விரும்பும் தளங்களை காட்டும் மாதிரி செய்யலாம். க்ரோமில் அது முடியாது.

*நான் ஒரு முறை என் மனைவிக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அமேசானில் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் என் மனைவி உலாவியைப் பயன்படுத்தும் போது நான் முன்னமே தேடிய பக்கங்களை பார்த்து விட்டதால் என் திட்டம் தெரிந்து எல்லாம் புஸ்ஸானது! க்ரோமில் இப்பிரச்சனையை தடுக்க வசதி உண்டு. நீங்கள் விரும்பினால் இதற்கான சிறப்பு பக்கத்தில் உலாவுங்கள். நீங்கள் பார்த்த எந்த விபரமும் கணினியில் பதிவாகாது, பிறரும் நீங்கள் எந்த எந்த பக்கங்களை பார்த்தீர்கள் என கண்டுபிடிக்க முடியாது. பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்களில் உலாவும் போது இது மிக வசதியாக இருக்கும். பலான தளங்களை பார்க்கவும் தான். (இதே வசதி சஃபாரியில் 'Private Browsing' என்று உள்ளது).

*விண்டோஸில் உள்ள 'Task Manager' பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். உங்கள் கணினியில் என்ன என்ன மென்பொருட்கள் ஓடுகின்றன, ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு மெமரி மற்றும் ப்ராசசர் பயன்படுத்துகிறது போன்ற தகவல்களைத் Task Managerஐப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதே போன்ற ஒரு Task Manager க்ரோமிலும் உண்டு. நீங்கள் பல தளங்களைப் திறந்து வைத்திருந்தால், எது உங்கள் கணினியை அதிகம் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். உங்கள் உலாவி வேகமாக இல்லை என்று தோன்றினால், எந்த தளத்தில் கோளாறு என்று தெரிந்து கொண்டு அதை மட்டும் மூடி விடலாம்.

*பக்கங்களில் தேடும் வசதியும் நன்றாக உள்ளது. இன்டெர்நெட் எக்ஸ்புளோரரில் உலாவும் போது நீங்கள் ஒரு வார்த்தையை அந்தப் பக்கத்தில் தேட வேண்டும் என்றால், அந்த வார்த்தையை முழுவதுமாக தட்டச்சு செய்து Enter அடித்தால் தான் தேடல் ஆரம்பிக்கும். க்ரோமில் நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அடிக்க அடிக்க பொருத்தமான வார்த்தைகள் வேறு வண்ணத்தில் தெரிய ஆரம்பித்து விடுகிறது (சஃபாரி போலவே).

*நீங்கள் மற்ற உலவிகளில் 'Tabbed Browsing' மூலம் பல தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒரே ஒரு தளம் தவறாக இயங்கினாலும் மொத்த உலாவியும் திணறும் அல்லது மொத்தமாக நொறுங்கி (க்ராஷ் ஆகி) விடும். க்ரோமில் அந்தப் பிரச்சனை இருக்காது என்று கூகிள் கூறியிருக்கிறது. பிரச்சனைக்குரிய தளம் மட்டுமே க்ராஷ் ஆகும் மற்ற தளங்கள் எல்லாம் உறுதியாக நிற்கும் என்பது கூகிளின் உறுதிமொழி. ஆனால் உலாவியை மொத்தமாக க்ராஷ் ஆகும் வழியை இப்பொழுதே கண்டுபிடித்து விட்டார்கள் (பார்க்க http://evilfingers.com/advisory/google_chrome_poc.php). பீட்டா வெர்ஷன் என்பதால் மன்னித்து பொறுத்தருள்வோம்.

*க்ரோம் பயன்படுத்துவதின் உங்கள் கணினியில் ஆபத்தான மென்பொருளை நிருவி அழிச்சாட்டியம் செய்யும் malware தளங்கள் மற்றும் உண்மையான தளம் போல நடித்து உங்களிடமிருந்து தகவல்களை திருடும் போலியான phishing தளங்களின் தொல்லை பெருமளவு குறையும் என நம்பலாம்.

உபயோகித்த வரையிலும் நான் கண்ட பிரச்சனைகள்

-சில தளங்களில் scrolling செய்தால் மூன்றாவது கியரில் வண்டி ஸ்டார்ட் செய்வது போல ஜெர்க் அடிக்கிறது.

-சில தளங்களில் இருந்து வார்த்தைகளை காப்பி செய்ய முடிவதில்லை (உதாரணம்: தினமலர்)

-குமுதம், விகடன், தினமலர் போன்ற தளங்கள் திணறுகின்றன. அதிகப்படியான flash plug-in இருப்பதினால் என்று நினைக்கிறேன்.

-ஒரு பக்கத்தை புக்மார்க் செய்வது எளிதாக இருந்தாலும், புக்மார்க் செய்த பக்கத்தை திறக்க தலையை சுத்தி மூக்கைத் தொடுவதை போல உள்ளது.

-இப்போதைக்கு க்ரோம் விண்டோஸில் மட்டுமே வேலை செய்யும். லினக்ஸ் மற்றும் மேக் மக்கள் பொறுத்திருக்க வேண்டியது தான்.

-க்ரோம் வந்ததில் இருந்து என்னுடைய ஃபயர்பாக்ஸுக்கு காய்ச்சல். ரொம்பவே தூங்கி வழிகிறது. க்ரோமை நிறுத்தினால் ஃபயர்பாக்ஸ் சுறுசுறுப்பாக எழுந்து விடுகிறது. இது குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா இல்லை க்ரோம் தான் ஃபயர்பாக்ஸுடன் மல்லுக்கட்டுகிறதா என்று தெரியவில்லை. உறுதியாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

முடிவாக,
பீட்டா வெர்சன் மட்டுமே என்றாலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. கூகிள் தளங்கள் க்ரோமில் நன்றாக இயங்கும் என்று எனக்குப் படுவதால், தற்போதைக்கு கூகிள் தளங்களை (ஜி-மெயில், ரீடர், மேப்ஸ், டாக்குமெண்ட்ஸ் போன்றவை) க்ரோமிலும், மற்றதை ஃபயர்பாக்ஸிலும் உலாவலாம் என்று இருக்கிறேன்.

க்ரோமின் ஆணை மூலம் ஓப்பன் சோர்ஸாக உள்ளதால், ஃபயர்பாக்ஸ் போல விரைவாக வளர்ச்சி அடையும் என நம்பலாம். மக்கள் extension எழுத ஆரம்பித்து விட்டால் நமக்கு கொண்டாட்டம் தான். விஜயகாந்த் வருகையால் பாதிப்படைந்தது தி.மு.கவா இல்லை அ.தி.மு.கவா என்று ஆராய்வது போல, க்ரோமினால் பாதிப்பு இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கா இல்லை ஃபயர்பாக்ஸுக்கா என்று சுவாரஸ்யமான பட்டிமன்றங்களும் ஆராய்ச்சிகளும் நடக்கும்.

க்ரோமின் பயன்பாட்டு விதிமுறைகள் (Terms of Service) பலரையும் திகிலடைய வைத்திருக்கிறது (http://yro.slashdot.org/article.pl?sid=08/09/03/0247205 , http://news.cnet.com/8301-17939_109-10030522-2.html). எனக்கென்னவோ இதை கூகிள் மாற்றி விடும் என்று தோன்றுகிறது.

பிற்சேர்க்கை (செப் 7, 2008): எதிர்பார்த்த மாதிரியே கூகிள் இதை மாற்றி விட்டது. பார்க்க - இங்கே மற்றும் இங்கே.

Adblock என்பது ஃபயர்பாக்ஸ் அன்பர்கள் பலரும் விரும்பி உபயோகிக்கும் ஒரு Add-on ஆகும். இது தளங்களில் வரும் தேவையற்ற விளம்பரங்களை வடிகட்டி நமது பார்வைக்கே வராமல் செய்து விடும். விளம்பரங்களின் மூலம் பணம் அள்ளும் கூகிள், இப்படிப்பட்ட ஒரு விசயத்தை க்ரோமில் அனுமதிக்குமா? இதை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் கூகிள் அதை எப்படி எதிர் கொள்ளும் என்பது எல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகளே.

நீங்கள் அணிந்திருக்கும் அண்டர்வேரின் நிறம் என்னவென்று சொல்லக் கூடிய சக்தியினை இப்பொழுதே கொண்டுள்ள கூகிளாண்டவர், க்ரோமின் துணையுடன் அந்த அண்டர்வேரை நீங்கள் எங்கிருந்து திருடினீர்கள் என்றும் அதை துவைத்து எத்தனை நாள் ஆயிற்று என்றும் ஊருக்கெல்லாம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கும் அபாயமும் இருக்கிறது.

உலாவி என்பது இணையத்தில் படிக்கவும் பார்க்கவும் மட்டுமே என்று இருந்தது ஒரு காலம். இப்பொழுது உலாவியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் முக்கால்வாசி வேலையை இணையத்தில் வைத்தே முடித்து விடலாம். மீதி கால்வாசி வேலைக்குத் தான் நமக்கு கணினி, ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் ஆபீஸ், போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் எல்லாம் தேவை. அந்த கால்வாசி சுமையையும் இறக்கி 'சர்வம் இணைய மயம்' என்று செய்வதே கூகிளின் குறிக்கோள். அதில் கூகிள் க்ரோம் ஒரு முக்கிய படி.

ஒரு கேள்வி: Chrome என்பதை எப்படி தமிழில் எழுதுவது? சிலர் குரோம் என்று எழுதுகிறார்கள். சிலர் வம்பே வேண்டாம் என்று Chrome என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். எனக்கு என்னமோ உச்சரிப்பின் படி பார்த்தால் க்ரோம் என்பது தான் Chrome-இன் சரியான் தமிழாக்கமாக படுகிறது. இந்த மாதிரி விசயத்தில் எல்லாம் இலக்கணம் பார்க்கத் தான் வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
====================================
முதல் பார்வை இங்கே.

Tuesday, 2 September 2008

கூகிள் குரோமில் தமிழ்மணம்

கூகிள் நிறுவனம் சிறிது நேரத்துக்கு முன்னர் க்ரோம் (Chrome) என்னும் இணைய உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது. தரவிரக்க இங்கே செல்லவும்.

க்ரோமில் தமிழ்மணம் நன்றாகவே தெரிகிறது :)

(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்)


விரிவான விமர்சனம் விரைவில்...

Thursday, 31 July 2008

குசேலன் படம் எப்படியிருக்கும்?

கேள்வி: கீழ் கண்ட திரைப்படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?

1. ஐ லவ் இந்தியா
2. மீரா
3. நாட்டுக்கு ஒரு நல்லவன்
4. ஆளவந்தான்
5. பாபா
பதில்: நான் என் வாழ்க்கையில இது வரை ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த படங்கள் இந்த ஐந்து தான்.

குசேலனுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்தாச்சு!

Tuesday, 29 July 2008

யெஸ். பாலபாரதியும் பாகச உறுப்பினர்களும்
இந்த 7 பேரு யாருன்னு தெரியுதா?

Wednesday, 9 July 2008

தசாவதாரம் - ஒரு கட்டாயப் பதிவு மற்றும் இளைய தளபதியின் சபதம்.

அன்புடையீர்,
தங்களது பதிவில் இதுவரை தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை என்பதை அறிந்தோம். இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான தமிழ் பதிவர் கிடையாது என்பது ஐயமின்றி நிரூபணமாகியுள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10:00 மணி முதல் உங்கள் பதிவுகள் திரட்டப்படுவது நிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நேர்மையான தமிழ் பதிவர் எனும் பட்சத்தில் நாளை காலை இந்திய நேரம் 10:00 மணிக்குள் தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி ஒரு பதிவேனும் வெளியிட வேண்டும் என்றும் அப்படி இல்லாது போனால் முன்னர் சொன்னபடி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
நிர்வாகி
**********

பிகு: இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்பது போன்ற சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இதுவரை பதிவெழுதியவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு தான் விமர்சித்தார்கள் என்று நினைக்கும் அளவிற்கு நீங்கள் அறிவிலி அல்ல என்று நம்புகிறோம்.
----------------------------------------------

இப்படி ஒரு மின்னஞ்சல் இன்று எனக்கு ஒரு பிரபல தமிழ் பதிவுகள் திரட்டியின் நிர்வாகியிடம் இருந்து வந்தது. சிவாஜிக்கு பதிவெழுதாத நான் தசாவதாரத்திற்கு மட்டும் ஏன் எழுத வேண்டும் என்று ஒரு கணம் தோன்றியது. இருந்தாலும் எதற்கு வம்பு? இதோ...

படம் ரொம்ப குப்பை என்று சொல்ல முடியாது. நான் இதற்கு முன் கடைசியாக பார்த்த "யாரடி நீ மோகினி" படத்துடன் ஒப்பிட்டால் இது கொஞ்சம் தான் குப்பை. கதைக்கு ஏற்ற வேஷம் கட்டுவது காலுக்கு செருப்பு வாங்குவது என்றால் வேஷத்துக்கு கதை என்பது செருப்புக்கு ஏற்றபடி காலைச் செதுக்குவது. தசாவதாரம் இரண்டாவது வகை. அட நல்ல செருப்புக்காக காலை வெட்டுவதை கூட ஒரு வகையில் ஒப்புக் கொள்ளலாம். போயும் போயும் இப்படி ஒரு அடாசு பிஞ்ச செருப்புக்காகவா கதை என்னும் காலை வெட்ட வேண்டும்?

இந்த படத்தை மைக்கேல் மதன காம ராஜன், பஞ்சதந்திரம் போல முழு நீள நகைச்சுவைப் படமாக எடுத்திருந்தால் ரசித்திருப்பேனோ என்னவோ? ஆனால் இந்தக் குறையை ஓரளவிற்கு போக்கியது இப்படத்தின் நுண்ணரசியலைப் பற்றிய பதிவுகள் தான். உதாரணம் பூவராகனின் 'தியாகம்' பற்றி பைத்தியக்காரன் எழுதியிருந்தது. ஒரு வேளை படத்தில் பூவராகவனை ஒரு ஆதிக்க சாதி கதாபாத்திரம் காப்பாற்றுவது போல வந்திருந்தால் பைத்தியக்காரரின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரும் சிரிப்பு ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.

நிற்க. ஒரு விசயம் கேள்விப்பட்டேன். விக்ரம், அஜீத், சூர்யா போன்றவர்கள் படத்துக்கு படம் வேறுபாடு காட்டும் பொழுது இளைய தளபதி டாக்டர். விஜய் மட்டும் ஒரே மாதிரியாக நடிப்பது குறித்து அவர் ரசிகர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே படத்தில் பதில் சொல்ல கமலின் பத்து வேட சாதனையை முறியடித்து 12 வேடங்களில் நடித்து போட்டி நடிகர்களுக்கு பதிலளிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். தனது 12 வேடங்களும் மிக வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக உலக அளவில் புகழ் பெற்ற ஒப்பனை கலைஞர்களோடு ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனையின் முடிவில் விஜய் ஓ.கே செய்த 12 வேடங்கள் தான் நீங்கள் கீழே பார்ப்பது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வடிவமைக்க கமலை அணுகப் போவதாக விஜயின் தந்தை திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.


Wednesday, 25 June 2008

காமக் கதை 1 (1)

,,, ,,,, ,,,, ,,, ,,,,,,, ,,,, ,, ,,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,

,,,,,,,, ,,, ,,,,,,,,,,, ,,,, ,,,, ,, ,,,, ,,, ,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,, ,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,, ,,,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,,, ,,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,, ,, ,,,,,,,,,,

,,,,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,,,,

,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,, ,,, ,,,,,,, ,,,, ,,,

,,,,, ,,,,,,, ,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,, ,,,, ,,, ,,,, ,,,, ,,, ,,, ,,,,,, ,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,, ,, ,,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,, ,,,,,, , ,,,,, , ,,,,,,,, ,,,, ,,,, ,,, ,,,,,,, ,,,,,,,,,

,,,,, ,,,,,,,,,,, ,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,,, ,,,,,,,,, ,,,, ,,,,,, ,,,,,,,, ,,,, ,,,,,, ,,,,, ,

,,,,,,, ,,,,,,,,,, ,,,,,, ,,, ,,,, ,,,,,,,,,,,, ,,,, ,,,,,,, ,,,, ,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,,,,,, ,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,, ,,,,,,, ,,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,, ,,,, ,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,

,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,, ,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,, ,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, ,,,,, ,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,,,,,,,, ,,,,,, ,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,, ,,,,, ,,,,,

,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,, ,,, ,,,,, ,,,,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,

,,,,,, ,,, ,,,,, ,,,,,,,,, ,,, ,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,
----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: இப்பதிவின் தலைப்பில் உள்ள எழுத்துப் பிழையை மன்னித்தருள்க.

Thursday, 29 May 2008

எச்சில் இலையும் யூஸ்ட் ப்ளேட்டும்

"தமிழ்நாட்டுல தான் இந்த மாதிரி அநியாயம் எல்லாம் நடக்கும்" என்றான் பிரசாத். கொஞ்சம் முன்னர் சொன்ன போது 'உங்க ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம்' என்றான். இப்பொழுது கொஞ்சம் பெரிய மனதுடன் 'தமிழ்நாட்டுல தான் இந்த மாதிரி அநியாயம்'.

விஷயம் இது தான். ஒரு சொந்த விஷயமாக நானும் என்னுடன் பணிபுரியும் பிரசாத்தும் மதுரை சென்று விட்டு காரில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தோம். மதுரையில் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று நான் சொன்ன போது பசிக்கவில்லை என்றவன் திண்டுக்கல் தாண்டியதும் பசிக்கிறது என்றான். தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் முன் காரை நிறுத்தினேன். மர பெஞ்சு போட்டு வாழை இலையில் சாதம் சாம்பார் ரசம் மோர் பொரியல் அப்பளம் என்று நிறைவான சாப்பாடு. சாப்பிட்டு முடித்ததும் கை கழுவ செல்லும் போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.

"தம்பி. இலையை தொட்டியில போட்டுடுங்க" என்றார் உணவு பரிமாறியவர்.

நான் என் இலையை எடுத்தேன்.

பிரசாத் இலையை எடுக்காமல் "என்ன சொன்னீங்க?" என்றான் அவரிடம்.

"நீங்க சாப்பிட்ட இலையை எடுத்து அதோ அங்க இருக்கிற தொட்டிக்குள்ள போட்டுடுங்க"

"எதுக்கு?"

"இது என்ன தம்பி கேள்வி? நீங்க சாப்பிட்ட இலையை நீங்க தான் எடுக்கனும்"

"எடுக்க முடியாது. என்ன பண்ணுவீங்க?"

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் யாரும் அவரிடம் இப்படி சொன்னதில்லை போல. "எடுத்து போடுங்க தம்பி" என்று சொல்லி விட்டு கல்லாவில் அமர்ந்திருந்தவரை ஒரு வித இயலாமையுடன் பார்த்தார்.

"என்னால் எடுக்க முடியாது. வேணும்னா நீங்க எடுத்து போடுங்க. இல்லை அது அங்கேயே கிடக்கட்டும். எனக்கென்ன வந்தது?"

"நம்ம கடையில இது தான் சார் சிஸ்டம். அவங்கவங்க சாப்பிட்ட இலையை அவங்களே எடுத்து போடணும். அதோ போர்டு மாட்டியிருக்கு பாருங்க" என்றார் கல்லாகாரர்.

'சாப்பிட்ட பின் இலையை தெட்டியில் போடவும்' என்று தப்பாக சொன்னது ஓரமாக இருந்த பலகை ஒன்று.

"இப்படி ஓரமா எழுதி வச்சா யாருக்கு தெரியும். அதுவும் தமிழ்ல. உள்ளே வரும் போதே உங்க சிஸ்டம் இது தான்னு சொல்லி இருக்கணும். என்ன ஆனாலும் சரி நான் எச்சில் இலையை எடுக்க மாட்டேன்" என்றான் பிரசாத் தீர்மானமாக.

பிரசாத் வேறு மாநிலத்தவன். சென்னையில் சில வருடங்கள் இருந்ததால் தமிழ் நன்றாக பேச வரும். ஆனால் வாசிக்கத் தெரியாது.

"எடுத்துடுங்களேன் பிரசாத். உங்க வீட்ல நீங்க எடுத்து போடுறது இல்லையா? அந்த மாதிரி" என்றேன் நான்.

"எங்க வீட்ல நான் எடுப்பேன். இங்கே எதுக்கு? இதுக்கும் சேர்த்து தானே காசு வாங்குறாங்க?"

"ஊருக்கு புதுசா தம்பி? இந்த பக்கம் எல்லாம் இது சகஜம். எல்லா கடையிலையும் இப்படித் தான்" என்றார் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர். அறுபது வயது இருக்கும். சட்டை இல்லை. மேலுக்கு துண்டு மட்டும் போட்டிருந்தார்.

"இங்க சகஜமா இருக்கலாம். எனக்கு இது எல்லாம் அசிங்கம். முதல்ல இலையை எடுக்க சொல்லுவீங்க. அடுத்தது டேபிள் துடைக்க சொல்லுவீங்க. அதுக்கு வேற ஆளை பாருங்க. என்னால முடியாது. நீங்க வாங்க மணி. நேரம் ஆச்சு. காசு கொடுத்துட்டீங்க இல்ல? கிளம்பிக்கிட்டே இருப்போம். என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்க. Country brutes"

இதற்குள் இந்த கூத்தை வேடிக்கை பார்க்க கடைக்கு வெளியே பத்து பேர் கூடியிருந்தனர்.

"பேசுறத பார்த்தாலே தெரியலையா. இவன் அந்த ஸ்டேட்காரன் தான். திமிர் பிடிச்சவங்க. அவன் மட்டும் இலையை எடுத்துப் போடாம வெளியே வரட்டும். மண்டையையும் வண்டியையும் உடைக்கிறேன்" என்றது அந்த பத்தில் ஒரு இள ரத்தம்.

"பிரச்சனை வேண்டாமே பிரசாத். எடுத்துடுங்க ப்ளீஸ்" என்றேன் நான். வண்டி என்னுடையது.

"என்ன பேசுறீங்க? நாம யாரு. பாக்குற வேலை என்ன. என்ன சம்பளம் வாங்குறோம். உங்களுக்கு வேணும்ன்னா இது பெரிய விசயமா இல்லாம இருக்கலாம். என் ஸ்டேட்டஸ்க்கு இது எல்லாம் ரொம்ப கேவலம். எங்க ஊருல வந்து கேட்டுப் பாருங்க எங்க ஃபேமிலிய பத்தி. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. வாங்க கிளம்பலாம்" என்றான் பிரசாத். கொஞ்சம் பயந்திருந்தான் என்பது அவன் குரலில் தெரிந்தது.

அந்த துண்டுப் பெரியவர் சாப்பிட்டுவிட்டு இலையுடன் எழுந்தார். "சரி விடுங்க தம்பி. உங்க இலையையும் நானே எடுத்துடுறேன்" என்றவாறே பிரசாத்தின் இலையை எடுத்தார்.

"ஏ பெரிசு. அவங்க இலையை நீ ஏன் எடுக்கிற? தலையெழுத்தா?" என்றார் கல்லாக்காரர்.

"அட விடுப்பா. படிச்ச பசங்க. பெரிய இடத்து பிள்ளை போல இருக்கு. அதான் கூச்சப்படுது. அந்த தம்பி இலையை எடுத்தா நான் என்ன குறைஞ்சா போயிடப்போறேன்" என்று இரண்டு இலையையும் தொட்டியில் போட்டார்.

"நன்றி" என்றேன் கொஞ்சம் சங்கடத்துடன்.

"அது கிடக்கட்டும் விடுங்க. நீங்க பத்திரமா ஊரு போய் சேருங்க. ஏய் என்ன வேடிக்கை இங்க. எல்லாரும் போய் சோலிய பாருங்க போங்க" என்று கூட்டத்தை விலக்கினார்.

பிரசாத்தை விரோதத்துடன் பார்த்த கூட்டத்தை தாண்டி வந்து காரில் ஏறிக் கிளம்பினோம்.

கொஞ்சம் தூரம் போனதும் "உங்க ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் நடக்கும்" என்றான் என்னிடம். பெங்களூரு சேரும் வரை இதையே வேறு வேறு விதமாக சொல்லியபடியே வந்தான்.

இது நடந்து ஆறு மாசம் இருக்கும். எப்பொழுது எந்த உணவகம் சென்றாலும் இந்தப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டான். "நல்ல வேளை. இங்கே எல்லாம் டீசண்ட். இலையை எடுக்கத் தேவை இல்லை" என்பான் நக்கலோடு. அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுடன் உணவருந்தும் போது தான் உறுதியாக நின்று தன் கொள்கையில் வெற்றி பெற்றதை விதவிதமாக சொல்லி பெருமகிழ்ச்சி அடைவான்.

போன வாரம் நாங்கள் இருவரும் அலுவலக வேளையாக இங்கிலாந்து வந்து சேர்ந்தோம். எங்கள் இருவருக்கும் முதல் அயல்நாட்டுப் பயணம். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு சென்று குளித்து விட்டு நேராக அலுவலகம். அங்கே கொஞ்சம் வேலை முடித்து விட்டு மதிய உணவிற்காக அலுவலகத்தில் இருந்த ரெஸ்ட்டாரண்ட் சென்றோம். யானை விலை கொடுத்து உப்புச்சப்பில்லாத பாஸ்தா பீட்சா வாங்கி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது "எக்ஸ்க்யூஸ் மீ" என்ற குரல்.

திரும்பிப் பார்த்தோம். ரெஸ்ட்டாரண்டில் பணிபுரிபவர் என்பது சீருடையைப் பார்த்ததும் தெரிந்தது.

"எஸ்"

"அந்த டேபிளில் சாப்பிட்டது நீங்களா?" என்றார் புரிந்தும் புரியாத ஆங்கிலத்தில்.

"ஆம்"

"நீங்கள் உபயோகப்படுத்திய தட்டை எடுத்து அங்கே வைக்க வேண்டும்"

'Please place the used plates and cutlerys on the conveyer belt' என்று எழுதி இருந்த போர்டை அப்பொழுது தான் பார்த்தோம்.

"மன்னிக்கவும். நாங்கள் கவனிக்கவில்லை. இதோ வைத்து விடுகிறோம்" என்று சொல்லி விட்டு ப்ளேட்டை எடுக்க டேபிளை பார்த்து நடந்தான் பிரசாத். நானும் தான்.

இது நடந்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் பிரசாத் என்னிடம் ஏதேதோ பேசினான். ஆனால் இதுவரை "இந்த ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் நடக்கும்" என்று மட்டும் சொல்லவே இல்லை.

புது மாப்பிள்ளைக்கு ஒரு அறிவுரை

நம்ம லதானந்த் சார் 'புது மாப்பிள்ளைக்கு ஓர் அறிவுரை'ன்னு ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ பத்தி கேக்கணுமா? வழக்கம் போல அசத்தல் தான். ஆனா இந்த முறை அவர் பதிவுல ஒரு பொருட்குற்றம் இருக்கு (சொற்குற்றம்? அத பத்தி நான் பேசக் கூடாது). அவர் சொல்லுறதோட சாராம்சம் என்னன்னு பார்த்தீங்கன்னா, "எல்லா விஷயத்துக்கும் மனைவியிடம் ஆலோசனை கேளுங்க ஆனா முடிவு எடுக்கிறது கணவன் கைல தான் இருக்கனும்".

மேலுக்கு பார்த்தா இது நல்ல ஆலோசனை மாதிரி தெரியும். ஆனா இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்ன்னு சந்தேகம் தான். சிலரிடம் பல நாள் ஒர்க் அவுட் ஆகலாம் பலரிடம் சில நாள் ஒர்க் அவுட் ஆகலாம். ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஃபெயில் ஆகி பூமராங் மாதிரி ரிடர்ன் ஆகும். அப்போ கணவனோட கதை அம்பேல் தான்.

இத விட பெட்டரா, எப்பவுமே வொர்க் அவுட் ஆகுற ஐடியா ஒன்னு இருக்கு. சொல்றேன் கேட்டுகோங்க.

எந்த மாதிரி பிரச்சனைக்கு யார் யார் முடிவு எடுக்கனும்ன்னு தெளிவா ஒரு கோடு வரைஞ்சிக்கோங்க. மனைவி முடிவெடுக்க வேண்டிய விசயத்துல கணவன் மூக்கை நுழைக்க கூடாது. அதே மாதிரி நாம முடிவெடுக்க வேண்டிய விசயத்துல மனைவிய கேக்க கூடாது. இது முதல்ல பாக்குறதுக்கு நடக்க சாத்தியமில்லாத விசயம் மாதிரி தெரியும். ஆனா நடக்க கூடிய விசயம் தான்.

உதாரணம் பாருங்க. உங்களுக்கே புரியும்.

இப்ப எங்க வீட்ல பார்த்தீங்கன்னா, 'வீடு வாங்குறதா இல்ல நிலம் வாங்குறதா?', 'லீவுக்கு கேரளா போறதா இல்ல அந்தமான் போறதா?' 'அக்ஷய த்ரிதைக்கு கம்மலா? வளையலா?', 'இன்னைக்கு டிபனுக்கு இட்லியா தோசையா?', 'பணத்த பாங்க்ல போடலாமா இல்ல ஷேர் வாங்கலாமா?' - இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்துல எல்லாம் முடிவெடுக்குறது என் மனைவி தான். நான் இதுல எல்லாம் தலையிடுறதே இல்லை.

அப்ப நானு?

'அமெரிக்காவில ஹிலாரி ஜெயிக்கணுமா இல்ல ஒபாமாவா?', 'ஐ.பி.எல் கிரிக்கெட் வேணுமா வேஸ்ட்டா?', 'ஓசோன் ஓட்டைக்கு காரணம் யாரு?', '2011ல தமிழக முதல்வர் யார்' - இந்த மாதிரி பெரிய பெரிய விசயம் எல்லாம் என் கண்ட்ரோல். இதுல எங்க அம்மிணிய ஆட்டைக்கு சேர்க்க மாட்டேன்.

இதுவரைக்கும் நம்ம வாழ்க்கை ஸ்மூத்தா போயிக்கிட்டு இருக்கு. நீங்களும் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

Wednesday, 14 May 2008

PIT - மே 2008: ஜோடி

ஹ்ம்ம். கேமராவக் கண்டா ஜோடியக் காணோம். ஜோடியக் கண்டா கேமராவக் காணோம்.
தன் காலே தனக்குதவின்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?இலவச இணைப்பா இன்னோரு ஜோடி கீழே.

Sunday, 13 April 2008

சுஜாதா சொன்னது சரியா?

குடும்ப அரசியல் பதிவில் நான் இப்படி எழுதி இருந்தேன்

"அவர் (விஜயகாந்த்) கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. "
இதற்கு ஒரு அனானி எழுதியிருந்த பின்னூட்டம்
"பாமக, கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாலும் பரவால்ல. லதிமுக ஜனதான்னு ஒரு ஆள் கட்சிக்க்கு எல்லாம் வரலாறு புவியியல் இருக்குன்னு சொல்லுர உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியல் பேசுறத நிறுத்தனும். அப்போ தான் நாடு உருப்படும்."
இதைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன் சுஜாதா ஒரு கட்டுரையில் (கற்றதும் பெற்றதுமா இல்லை கடைசி பக்கங்களா என்று சரியாக நினைவில்லை) எழுதியது தான் ஞாபகம் வந்தது.
"குமுதம் இதழ் தற்போது ஓட்டக்காரர்களாலும் ஆட்டக்காரர்களாலும் பாட்டுக்காரர்களாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டி.ராஜேந்தர் தயாரித்த குமுதம் இதழில் ஒரு பகுதியை கருத்து தெரிவிக்காமல் அப்படியே தருகிறேன்.

என் பையனைப் பொறுத்த வரைக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு. ஸ்கூல் ஒர்க் பண்ண , ஸ்டடி பண்ண ஒரு டியூஷன் , தமிழுக்கு ஒரு டியூஷன் , இப்படி மூணு டியூஷனுக்குப் பையன் போறான். இதைத் தவிர கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு , ஜிம்னாஸ்டிக் வகுப்பு , தலைகீழாய் பையன் நடப்பான் , ஸாமர்சால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். இதைத் தவிர சனி ஞாயிறில் சினிமா ஃபைட்டிங் , காலையிலே கத்துக்கறான். கம்புச் சண்டை , மான் கொம்புச் சண்டை , குத்துச் சண்டை இந்த மாதிரி அதுக்கான ஸ்டண்ட் மாஸ்டர் வச்சு கத்துத் தர்ரேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு...

மேற்கோளிட்ட இந்த வாக்கியங்களின் சமூகவியல் சார்ந்த அர்த்தம் தெரிய வேண்டுமெனில் எனக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பவும்."
அடுத்த வாரம் அவருக்கு விளக்கம் கேட்டு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர்கள் வந்ததாக எழுதி, வர வர வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து கொண்டே போகிறதோ என்று வருத்தப்பட்டிருந்தார் :(

Friday, 11 April 2008

குடும்ப அரசியல் (அ) வால்பையனுக்கு நன்றி

எனது முதல் அரசியல் சார்ந்த பதிவு. பிரச்சனை எதுவும் வராமல் இருக்க அந்த மகரநெடுங்குழைகாதனும் தகர நெடுங்குழைகாதனும் அருள் புரிய வேண்டும்!

டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி-பதில் பகுதியில் வால்பையன் கேட்டிருந்த ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்

குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))
அதே கேள்விக்கு என்னுடைய முந்தைய பதிவில் நான் அளித்த பதில்
குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?
அந்த பதிவில் வால்பையன் இட்டிருந்த பின்னூட்டம்
நகைசுவையான பதில், குடும்ப அரசியலை செய்யும் எல்லோருக்கும் இதே பதிலை எடுத்து கொள்ளலாமா(ஆட்டோ வரும் பரவாயில்லையா)
யோசித்துப் பார்த்தால் அதை வெறும் நகைச்சுவை என்று முற்றிலும் ஒதுக்கி விட முடியாது என்று நினைக்கிறேன். அதில் சிறிதளவு யதார்த்தமும் கலந்து இருப்பதாக இப்பொழுது தோன்றுகிறது. உதாரணத்திற்கு நான் ஒரு நிறுவனம் தொடங்கினால் (அட சும்மா ஒரு பேச்சுக்கு தான்) என்ன செய்வேன்? எனக்கு தனிப்பட்ட முறையில் பழக்கமான நபர்களில் யாரேனும் வேலைக்கு மாட்டுவார்களா என்று தேடுவேன். என்னுடன் படித்த மிகவும் திறமை உள்ளவர்கள் அனைவரும் ஏற்கனவே நல்ல வேலையில் பொட்டி பொட்டியாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகாது என்பதால் அவர்களை விட்டு விடுவேன். ஆனால் என்னுடன் படித்தவர்களில் சிலருக்கு ஓரளவிற்கு திறமை இருந்தும் சரியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நிறுவனத்தில் பொறியாளராக விருப்பமா என்று பார்ப்பேன். M.Com படித்த என் சித்தி பெண்ணுக்கு கணக்காளர் வேலை. அவள் எந்த அளவிற்கு வேலை தெரியும் என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் நம்பிக்கையான பெண். அது மட்டும் இல்லாமல் சிறிய நிறுவனம் தானே கணக்கு வழக்கு எல்லாம் எளிமையாகத் தான் இருக்கும். திறமையை விட நாணயம் தான் இங்கு முக்கியம்.

அதே போல் மனிதவளம் அந்தத் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ள என் தங்கைக்கு. அலுவலகத்தில் தேநீர் வழங்கும் பொறுப்பு என் சொந்த ஊரில் டீக்கடை நடத்தி கஷ்டப்படும் கோவாலு மாமாவுக்கு. என் தந்தையின் வாகன ஓட்டுனரின் வேலையில்லாத பையன் தான் என் அலுவலகத்தில் ஆஸ்தான டிரைவர். காவல்காரர் (சித்தப்பா - முன்னாள் இராணுவ வீரர்), வரவேற்பாளர் (அட்டகாசமாக ஆங்கிலம் பேசும் அக்கா மகள்), அந்தரங்க காரியதரிசி (**********) இப்படி யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வேலையிடங்களை எனக்கு தெரிந்தவர்களைக் கொண்டே நிரப்பி விடலாம். இது போக மீதம் இருக்கும் இடங்களை நிரப்ப மட்டுமே வெளியாட்கள் தேவைப்படுவார்கள். சிறிது காலம் கழித்து நிறுவனம் பெரியதாக வளரும் பொழுது மற்ற நிறுவனங்களில் இருக்கும் திறமைசாலிகளை இழுத்து முக்கிய பொறுப்புக்களை கொடுக்கலாம். நல்ல சம்பளமும் கொடுக்கலாம். எடுத்தவுடன் புதியவர்களை கொண்டு வருவதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று விலை கட்டுப்படியாகாது. இரண்டு அவர்கள் எந்த அளவிற்கு நம்பகமானவர்கள் என்று தெரியாது. நிறுவனம் வளர்ந்து நிர்வாகம் நன்றாக பிடிபடும் வரையில் இப்படியே தெரிந்தவர்களை வைத்து ஓட்ட வேண்டியது தான்.

சரி, இப்பொழுது விஜயகாந்த் பிரச்சனைக்கு வருவோம். அவர் கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. அவருக்கு வாக்களித்த பலர் அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது. அவரிடம் இப்பொழுது இருப்பதெல்லாம் குடும்பத்தினரும் பெரும்பாலும் விசிலடிச்சான் குஞ்சுகளான ரசிகர் பட்டாளமும் தான். அந்தக் கூட்டத்தில் அவர் கண்ணில் பட்ட வரையில் திறமையும் நேர்மையும் உடையவராக அவரின் மனைவியும் மச்சானும் இருந்தார்களோ என்னமோ. யார் கண்டது?
யாமறியோம் பராபரமே!

பின்குறிப்பு 1: இந்த லாஜிக் எல்லாம் வியாபாரம் செய்வதற்குத் தான் ஒத்து வரும் அரசியலுக்கு அல்ல என்று பின்னூட்டம் இடத் தயாராகும் பதிவர்களுக்கு: வியாபாரம் வேறு அரசியல் வேறு என்று நினைக்கும் அளவிற்கு இவ்வளவு அப்பாவியா நீங்கள்!?

பின்குறிப்பு 2: இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தான் சொல்லி இருக்கிறேன். இப்படி தான் நடக்க வேண்டும் என்றல்ல.

பின்குறிப்பு 3: இந்த கேள்வியைக் கேட்டு, தோதாக ஒரு பின்னூட்டமும் போட்டு இப்படி ஒரு பதிவெழுத என்னைத் தூண்டி விட்ட வால்பையனுக்கு நன்றி!

Thursday, 10 April 2008

டோண்டு ஐயா மற்றும் சம்பந்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க...

எதாவது எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் தாவு கழண்டு விடுகிறது. போதாக்குறைக்கு சோம்பல் வேறு. சுஜாதா மறைவுக்கு ஒருஅஞ்சலி பதிவு போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன். ஸ்டெல்லா புரூஸ், ரகுவரன் என்று காலம் ஓடி விட்டது. இன்னும் சுஜாதா பதிவு 4 வரி தாண்டவில்லை. அப்படியே அதை எழுதி முடித்தாலும், இப்பொழுது அதை வெளியிட்டால், 'என்ன எம்ஜிஆர் செத்துட்டாரா?' என்று நக்கல் வரும் என்பதால் அந்த பதிவை வெளியிடவும் முடியாது.

எனக்கென்று பெரிதாக ஒரு லட்சியம், கொள்கை, கருத்து, கத்திரிக்காய் என்று எதுவும் கிடையாது. நானெல்லாம் பதிவு எழுத வந்ததே தமிழ் எழுதிப் பழக வேண்டும் என்பதற்காகத் தான். அதுவும் நடக்கிற காரியமாக தெரியவில்லை. அதனால் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று கொஞ்சம் திருட்டு வேலை. டோண்டு ஐயாவிடம் பிறர் கேட்ட கேள்விகளில் சிலவற்றை எனக்கு வந்ததாக எடுத்துக் கொண்டு விட்டேன். டோண்டு மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற பதிவர்கள் மன்னிக்க. இதை நான் வெளியிடுவதில் உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இருந்தால், copyright ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். நீக்கி விடுகிறேன். கேள்விகளுக்கு போகலாமா?

உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா?
எனது பதிவுகளை உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களும் படிக்கிறார்கள் பின்னூட்டமும் இடுகிறார்கள். நான் தான் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்று சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனால் உண்மை என்னவென்றால், என் பதிவுகளை யாருமே படிப்பதில்லை, நான் உட்பட.

பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு மிக அதிகப் பொருத்தமாக இருப்பது யார்?
விஷால்!?

பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?
பதிவு போடவே வக்கில்லை இதில் எதிர் பதிவா? அட போங்கப்பா.

உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?
கல்லூரியில் படித்த காலத்தில் புதிய முகம் திரைப்படத்தில் வரும் 'நேற்று இல்லாத மாற்றம்' ஸ்டைலில் ஒரு கவிதை எழுதினேன்.

பல்பின் வெளிச்சம் எல்லாம் ப்யூஸ் போகும் வரை
சைக்கிள் பயணம் எல்லாம் பஞ்சர் ஆகும் வரை
என்று ஜெயமோகன் கட்டுரை போல நீளமாக போகும் அந்த கவிதையை படித்த என் தோழி அதன் கடைசி வரியாக உனது கிறுக்கல் எல்லாம் இங்க்கு தீரும் வரை என்று எழுதி முடித்தாள். அன்றைக்கு விட்டது தான். தமிழுலகம் தப்பியது.

உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?
என் மனதிற்கு பிடித்த பதிவை நான் இன்னும் எழுதவே இல்லை என்பது தான் உண்மை. அப்படி ஒரு பதிவை நான் எழுதி விட்டேன் என்று தோன்றி விட்டால், நான் இந்த வலையுலகில் சாதித்தது(!) போதும் என்று கிளம்பி விடுவேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)

நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
முடியாது. ஏனென்றால் நான் வசிப்பது சென்னையில் அல்ல.

குமுதத்தில் பாலகுமாரன் - எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம் என சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர் இதை ஒரு 10 வருடத்திற்க்கு முன்பே சொல்லி இருந்தால் அவரை தீர்க்கதரிசி என்று சொல்லி இருக்கலாம்.

குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?

அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?
நான் அம்பேல்

"Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பெரும்பான்மையினரின் நம்பிக்கைக்கு எதிராக ஒன்றை சொன்னால் விரைவில் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். அறியாமையின் காரணமாகவும் இருக்கலாம். மற்றபடி விநாயகரின் இருப்பையே நம்பாதவர்களுக்கு பாரதம் என்ற கதையை வியாசர் சொல்லி விநாயகர் எழுதியிருந்தால் என்ன? விநாயகர் சொல்லி வியாசர் எழுதியிருந்தால் என்ன?

2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?
வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் 12 வருடங்களுக்குள் வல்லரசு ஆக வேண்டும் என்றால் ஹிட்லர் காட்டிய வழி தான் சாத்தியம். தேவையா? நிற்க, இந்தியா வல்லரசு ஆவதினால் என்ன பிரயோஜனம்?

தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?
அழகிரியும் ஸ்டாலினும் கட்சி சாம்ராஜ்யத்தை ஆளுக்கு பாதியாக பிரித்து பரிபாலனம் செய்யலாம். ஆட்சிக்கு? என் சாய்ஸ் கனிமொழி!

ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?
சுத்தமாக கிடையாது. ஆனாலும் வீடு கட்டும் பொழுது கொஞ்சம் போல வாஸ்து பார்த்தது உண்மை. நாளை வீட்டை விற்கும் பொழுது இதை காரணமாக காட்டி சில ஆயிரங்கள் குறைத்துக் கேட்கக் கூடாதே என்ற வியாபார நோக்கம் தான்!

ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?
எனக்கு இந்த பழக்கத்தை கொண்டு வந்தது என் தந்தையார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.

இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?
ரொம்ப சுலபமான கேள்வி. ஒன்பது என்பதே சரியான பதில்.

Tuesday, 19 February 2008

தென்னாப்பிரிக்கா - பெர்முடா கிரிக்கெட்: பெர்முடா போராடி தோல்வி

தென்னாப்பிரிக்கா பெர்முடா அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பெர்முடா அணியை போராடி வென்றது.

பெர்முடா அசத்தல்:
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது.
ஒரு புறம் பெர்முடாவின் துவக்க ஆட்டக்காரர் மெய்ன்ஸர் (48 பந்துகளில் 1 ஓட்டம்) பொறுமையாக ஆட, மற்றொரு முனையில் ஜாக்ஸன் (7 பந்துகளில் 1 ஓட்டம்) மற்றும் ஸ்மித் (5 பந்துகளில் 1 ஓட்டம்) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பெர்முடா 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

தென்னாப்பிரிக்கா திணறல்: நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. நேற்று தென்னாப்பிரிக்கா அணி விட்டுத் தந்த உதிரிகளின் எண்ணிக்கை மட்டும் 10 ஓட்டங்கள். இது பெர்முடா அணியின் ஆட்டக்காரர்கள் எடுத்த மொத்த ஓட்டங்களை விட 3 மடங்கிற்கும் அதிகம் என குறிப்பிடத்தக்கது.

பின்னர் பேட் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணி பெர்முடா அணியின் பெயிண்டரின் துல்லியமான பந்து வீச்சில் திணறியது. இவரின் பந்துகளை தென்னாப்பிரிக்க அணியினரால் தொடக்கூட முடியவில்லை.

போராடி தோல்வி:
பெயிண்டர் அருமையாக பந்து வீசினாலும், மற்ற பவுலர்கள் இவருக்கு இணையாக பந்து வீசவில்லை. இறுதியில் தென்னாப்பிரிககா கடுமையாக போராடி 4 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Full scorecard