Saturday, 10 November 2007

அளவில்லாத அபத்தங்கள்.

இன்று குமுதம் படிக்கும் போது தான் 'டோனி ராஜ்ஜியம்' என்று ஒரு தொடர் வருவதைக் கவனித்தேன். சில வாரங்களாக தொடர்ந்து வருகிறது போலும். இந்த வாரத்துடன் நிறைவு பெற்றது. நான் இது வரை இத்தொடரைப் படித்ததில்லை. இந்த வார பகுதியை மட்டுமே படித்தேன். படித்துப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ளாத குறை. பழைய பகுதிகளை பார்த்து வாசிக்க ஆர்வம் இல்லாததனால், இந்த வார பிழைகளை மட்டும் பார்ப்போம்.

முதல் நாலு போட்டிகளிலும் குறைந்த ரன்களில் சொதப்பினார் தோனி:
இது சரியான தகவல் அல்ல. அவர் விளையாடிய மூன்றாவது போட்டியில் இரண்டு ஸ்டம்பிங்கும் மூன்று காட்சும் பிடித்து ஐந்து விக்கெட்கள் விழக் காரணமாக இருந்தார். சரி, ஆசிரியர் சொல்வது போல பேட்டிங் பிடிக்கும் போது சொதப்பி இருப்பார் என்று நினைத்தால், அதுவும் இல்லை. அந்தப் போட்டியில் அவர் எதிர் கொண்டது கடைசி இரு பந்துகளை மட்டுமே. அதில் ஒரு சிக்ஸர் உட்பட ஏழு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து இருக்கிறார். இது எப்படி சொதப்பல் ஆகும் என்று தெரியவில்லை. இதுவாவது பரவாயில்லை, அடுத்து வருவது எல்லாம் அபத்தக் களஞ்சியம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்தார்:
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் சயீத் அன்வர் (இந்தியாவிற்கு எதிராக 194 ஓட்டங்கள்). தோனி அந்தப் போட்டியில் எடுத்தது 183 ஓட்டங்கள். ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் (10) அடித்த வீரர்:
இதுவும் தவறு. ஜெயசூரியாவும், அப்ரிதியும் ஒரே போட்டியில் 11 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்கள்.

சரி புள்ளிவிவரம் தான் சரியில்லை, மற்றதாவது ஒழுங்காக உள்ளதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

சச்சின் 10 வருடங்கள் போராடிப் பெற்ற ரசிகர்களை ஒரே வருடத்தில் வசமாக்கினார் டோனி:
இதை ஒரு அபிப்பிராயமாக சொல்லாமல், ஒரு ஆவணமாகவே கூறுகிறார் ஆசிரியர். எதுவும் கருத்துக் கணிப்பு எடுத்தாரா என்று தெரியவில்லை.

ஏற்கனவே நண்பர்களிடம் சபதமிட்டபடி, இந்திய அணியில் இடம்பிடித்தது மட்டுமின்றி உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த பின் தன் தலைமுடியை வெட்டினார் டோனி:
பழைய அத்தியாயங்களை படிக்காத காரணத்தினால் தோனி என்ன சபதம் போட்டார் என்று சரியாக தெரியவில்லை. இந்த வரியைப் படித்தால், முடி வெட்ட மாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார் போல. ஆனால் சென்ற ஆண்டில் ஒரு முறை, அவர் முடி வெட்ட போகும் பொழுது ரசிகர்கள் தொல்லை மிகுந்து போலீஸ் அடிதடி நடத்தியதாக செய்திகள் வெளிவந்ததாக ஞாபகம். அது உலகக் கோப்பையை வெல்வதற்க்கு முன்பா? இல்லை ஒருவேளை முடியை ஒட்ட நறுக்க மாட்டேன் என்று சபதம் போட்டிருந்தால், அது எல்லாம் ஒரு சபதமா? நானும் காவிரி பிரச்சனை ஓயும் வரையில் ஒரு வேளைக்கு 40 இட்லிக்கு மேல் சாப்பிட மாட்டேன் என்று சபதம் போடலாம்!

இந்த வாரத்தில் தான் தோனி முதல் முறையாக இந்திய அணிக்கு விளையாட ஆரம்பித்ததைப் பற்றி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அதாவது, பொதுவாக தோனியைப் பற்றி மக்களுக்கு சற்று தெரிந்த வரலாறு. இதை சொல்லும் பொழுதே ஏகப்பட்ட பிழைகள். தோனியைப் பற்றி பெரிதளவு தெரியாத பகுதிகளில் இன்னும் எவ்வளவு பிழைகளோ. அந்த ஆசிரியருக்குத் தான் வெளிச்சம்.

ஒருவர் பிரபலமானதும் அவரைப் பற்றி மற்ற பத்திரிக்கைகளில் செய்தி வருமுன் நம் பத்திரிக்கையில் தொடர் வெளியிட்டால் விற்பனை கூடும் என்று நம்புகிற பத்திரிக்கைகள், கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்ததும் சிறிது கூட ஆராய்ச்சி செய்யாமல் எதையாவது எழுதும் எழுத்தாளர், அதை சரி பார்க்காமல் வெளியிடும் ஆசிரியர் குழு இவர்கள் எல்லாம் சேர்ந்தால் இப்படித் தான் அபத்தமாக ஏதாவது வெளிவரும். இது இப்போதைக்கு ஒன்றும் பெரிய குற்றம் அல்ல. ஒரு வேளை இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அந்த ஆசிரியர் உற்சாக மிகுதியால் தோனியைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்து விடக் கூடாதே என்பது தான் என் கவலை எல்லாம்!


0 குட்டு: