Thursday, 8 November 2007

இரு படங்கள். ஒரு பார்வை. ஒரு பதிவு.

இது ரெண்டு திரைப்படங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சி இங்கே வந்திருக்கிற எல்லோருக்கும் என்னைய மன்னிச்சிடுங்க. இது நான் வெளியிட்டு இருக்கிற ரெண்டு புகைப்படங்களைப் பற்றிய பதிவு.

மணிரத்னம், ஷங்கர், அமீர், பாலா இவங்க எல்லாம் ஒரு படம் ரிலீஸ் பண்ணா, அந்த படத்த பத்தி கேள்வி கேக்கணும், பேட்டி எடுக்கணும்னு 100 பேர் சுத்தி வருவாங்க. நானும் தான் ஒன்னுக்கு ரெண்டு படம் ரிலீஸ் பண்ணினேன். ஹூம், ஒன்னும் நடக்கல. அதுக்காக பேசாம இருக்க முடியுமா? இந்தியன் பேசாம இருந்தா செத்து போயிடுவான்னு நம்ம பாட்ஷாவே சொல்லி இருக்கார்! நான் இந்தியன் (அப்போ நீ தமிழன் இல்லையான்னு யாரும் கேக்கக் கூடாது சொல்லிட்டேன்).

நான் எடுத்து ரிலீஸ் பண்ண ரெண்டாவது படத்த பத்தி அதிகமா சொல்ல ஒன்னும் இல்ல. அது இன்னும் கொஞ்சம் கூர்மையா (sharpness) இருந்தா நல்ல இருக்கும்னு ஊருக்குள்ள பேசிக்கிறதா கேள்வி. உண்மை என்னன்னா, அது கூர்மையா இருந்த படம் தான். நான் தான் அத கொஞ்சம் மொக்கையாக்கி (smoothened) ரிலீஸ் பண்ணி இருக்கேன். பொதுவாவே வறட்சியான காட்சிகள் இருக்கிற புகைப்படங்கள் கூர்மையா இருந்தா, அது அந்த வறட்சிய கொஞ்சம் தூக்கலா காட்டும். அதே மாதிரி, குளுமையான காட்சிகள் இருக்கிற புகைப்படங்கள் கொஞ்சம் மழுங்கி இருந்தா அது இன்னும் கொஞ்சம் அதிகம் குளுமையா தெரியும் (அப்படிங்கறது என் கருத்து). இந்த படம் ஒரு குளிர் காலத்தில் எடுக்கப்பட்டது. ஆனா, அந்த குளுமை படத்துல அவ்வளவா தெரியல. அதான் கொஞ்சம் 'பின் தயாரிப்பு' (post production) வேளை பார்த்தேன்.

முதல் படம் கொஞ்சம் சிக்கலானது. ஒரு வேனில் பயணம் செய்யும் பொழுது எடுத்தது. சில விநாடிகளே இப்படி ஒரு பார்வைக் கோணம் (view point) கிடைக்கும். அந்த சில விநாடிகளில் சரியான aperture, shutter speed, focus எல்லாம் செட் செய்து புகைப்படம் எடுப்பதற்க்கு மிகவும் அநுபவம் வேண்டும். நம்ம கிட்ட தான் அதெல்லாம் இல்லையே! முடிஞ்ச வரைக்கும் ஒரு படம் எடுத்து வீட்டுல வந்து பார்த்தா, ரொம்ப கேவலமா இருந்த்து. நீங்களே பாருங்க அந்த கொடுமைய! (பார்க்க மூன்றாவது படம்)

முக்கியமான குறைகள்:
#1: அளவுக்கதிகமான வெண்மையான வானம்: பொதுவா ஒரு படத்துல வானம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கக் கூடாது. நல்ல நீல (அல்லது சிவப்பு) நிற வானம் இருந்து அது படத்தின் அலைவரிசைக்கு ஒத்து வந்தால் ஓகே. அல்லது மேகங்கள் நல்ல எடுப்பாக தெரிந்தாலும் ஓகே. மத்தபடி, வெறும் வெண்மையான வானம் பெரும்பாலும் எந்த வித சுவாரஸ்யமும் தராது. இந்தப் படத்தில் இரண்டு மலைகளையும் அந்தப் பள்ளத்தாக்கினையும் தெளிவாக காண்பிப்பதில் வானம் பெரும் பங்கு வகித்தாலும், இந்தப் படத்தின் ஹீரோவான அந்த நெளிந்த சாலையை காண்பிக்க அந்த வானம் சுத்தமாக உதவவில்லை.
#2: சூரிய வெளிச்சம் மற்றும் கோணம்: இந்தப் படம் எடுக்கும் பொழுது மணி சுமார் காலை 11 இருக்கும். இதே படத்தை சூரியன் இன்னும் கொஞ்சம் மேலே வரும் முந்தி எடுத்திருந்தால், அருமையாக வந்திருக்கும். படத்தின் கீழ் பகுதியில் இடது பக்கமாக பாருங்கள். அந்த வண்ணம் நல்ல அடர்த்தியாக இருக்கும் (dark tone). இதே படத்தின் மேல் வலது பக்கம் பார்த்தால், வெளீர் என இருக்கும். இதற்குக் காரணம், அதிகமான சூரிய ஒளி அங்கே பாய்வது தான். ஒரு படம் இப்படி ஆவதை தவிர்க்க எனக்கு தெரிந்து நாலு வழிகள் உள்ளன. ஒன்று - சூரியன் மிக மேலே வருவதற்க்கு முன்னமே படம் எடுப்பது. ரெண்டு - சூரிய ஒளி படாமல் வேறு கோணத்தில் இருந்து படம் எடுப்பது. மூன்று - filter ஒன்றை உபயோகித்து சூரிய ஒளியின் வீரியத்தை குறைப்பது. நாலு - படம் எடுத்த பிறகு கொஞ்சம் கோல்மால் செய்வது (post production techniques). நான் படம் எடுத்த சூழ்நிலையில் முதல் மூன்று வழிகளை பின்பற்றுவது நடக்காத விஷயம். அதனால் முடிந்த வரையில் நாலாவது வழியைக் கையாண்டேன்.
#3: போகஸ் சாலையில் இல்லை: இது ஒரு மன்னிக்க முடியாத பெரிய தவறாகும். ஆனால் சாலை சரியாக தெரியாமல் போனதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. இம்மாதிரியான காட்சிகளை படமெடுக்கும் போது, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளையும் (object) சேர்த்து எடுத்தால், அப்படத்தின் perspective நன்றாக தெரியும். அதாவது ஒரு landscape புகைப்படம் நல்ல ஆழமாகத் தெரிய வேண்டும் என்றால், பக்கத்தில் இருக்கும் ஒரு பொருளையும் சேர்த்து எடுக்க வேண்டும் (ஒரு மரக்கிளை, ஒரு பாறை). அப்படி எடுத்தால் தான் அந்த புகைப்படத்தின் தூர விகிதம் சரியாக தெரியும். இந்தப் படத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள பாறைகளை கையால் மறைத்து விட்டு பாருங்கள், நான் சொல்வது புரியும்.
ஆனால் அப்படி எடுப்பதில் சில ஆபத்துக்கள் உண்டு. அது தான் இங்கேயும் ஏற்ப்பட்டது. நீங்களாக போகஸ் செய்யும் வசதி இருந்தால், எந்த இடம் படத்தில் கூர்மையாக தெரிய வேண்டும் என்று முடிவு செய்யலாம். ஆனால் தானியங்கி (auto focus) கேமராக்கள் கொஞ்சம் ரிஸ்க் தான். படத்தின் போகஸ் எங்கே விழ வேண்டும் என்பதை அந்த கேமிராவே தீர்மானிக்கும். அதை மாற்ற முடியும் என்றாலும் அதை செய்வதற்க்கு கொஞ்சம் நேரமாகும். வேனில் செல்லும் பொழுது, அந்த வேனின் ஓட்டுனர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த படத்திலும், ஆழம் நன்றாக தெரிய வேண்டும் என்று அங்கே இருந்த சுவரையும் சேர்த்துப் படம் பிடித்தேன், என் கெட்ட நேரம், போகஸ் எல்லாம் அந்த சுவருக்கே சென்று விட்டது :(

இதைத் தவிர இந்தப் படத்தில் இன்னும் பல குறைகள் உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். இந்த மூன்று முக்கிய குறைகளை நீக்க சில post production வேலை பார்க்கலாம். அதைத் தான் நானும் செய்துள்ளேன். தேவை இல்லாத வானத்தை வெட்டித் தூக்கி எறிந்து விட்டேன், சூரிய ஒளியின் தீவிரத்தைக் குறைக்க மொத்தப் படத்தையும் கொஞ்சம் இருட்டாக்கி (darken) விட்டேன். மூன்றாவது குறைபாட்டை முழுவது நீக்குவது கடினம். இருந்தாலும் என்னால் முடிந்த முயற்சியாக முன்னால் இருந்த சுவரை நீக்கி விட்டேன். ஆனாலும் அந்த தூர விகிதம் தெரிய வேண்டும் என்பதற்க்காக ஒரு பாறையை மட்டும் நீக்காமல் விட்டு விட்டேன்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா, இன்னும் அழகாக்கி இருக்கலாம். ஆனா, ஆபீஸ் வேலையும் கொஞ்சம் பார்க்கனும் இல்லையா? அதான்..இதோட நிறுத்துக்கிட்டேன்! :)

0 குட்டு: