Wednesday, 31 October 2007

வேஷங்கள் - இந்திரா பார்த்தசாரதி

எனக்கு பிடித்த பல எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வேதபுரத்து வியாபாரிகள், தந்திர பூமி, சுதந்திர பூமி ஆகியவற்றை சொல்லலாம். முக்கியமாக அங்கத நாவலான வேதபுரத்து வியாபாரிகள் நாவலில் ஒவ்வொரு வரியிலும் இழைந்தோடும் அந்த நையாண்டியை மிகவும் ரசித்திருக்கிறேன். என்ன தான் நக்கல் என்றாலும் சுதந்திர பூமியில் கருணாநிதியை ஹிட்லருக்கு ஒப்பிடும் பகுதி கொஞ்சம் ஓவராக தான் படுகிறது. இருந்தாலும் அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அதுவும் ஒரு சிறந்த நாவலே.அவரின் கிருஷ்ணா கிருஷ்ணா நாவலை பலர் பாராட்டிப் பேசக் கேட்டிருக்கிறேன். அதை இன்னும் படிக்க சந்தர்ப்பம் வரவில்லை.

இன்று அவர் எழுதிய வேஷங்கள் என்ற குறுநாவல் ஒன்றை படித்தேன். இந்திரா பார்த்தசாரதி எழுதி நான் படித்தவற்றில் அரசியல் தளத்தில் இயங்காத முதல் கதை இது தான் என நினைக்கிறேன். வெகு எளிமையான கதையினூடாக ஒரு சராசரி மனிதனின் தடுமாற்றங்களையும் பலஹீனங்களையும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.

கால் ஊனமுற்ற சங்கரன் ஒரு அவலட்சணமான கோபு என்ற பதினாறு வயது சிறுவனை சந்திக்கின்றன். தனது மென்மையான தாய் மீது மிகுந்த நேசமும் தன் அவலட்சணத்திற்கு காரணமான தன் குருரமான குணம் கொண்ட தந்தை மீது அளவு கடந்த வன்மமும் கொண்டிருக்கும் கோபுவிற்கு சங்கரனை மிகவும் பிடித்து போக, தனது வீட்டில் வாடகைக்கு ஒரு அறை இருப்பதாகக் கூறி சங்கரனை தன்னுடன் தங்க அழைக்க அதற்கு சங்கரனும் ஒப்புக்கொண்டு அந்த வீட்டிற்க்கு குடியேறுகிறான். இதன் பிறகு கதை வாசகர்கள் எதிர்பார்க்கும் அதே திசையில் நகர்கிறது. கோபு ஒரு 'இம்பொடன்ட்' பசு மாட்டின் கதையை பள்ளிக் கட்டுரையாக எழுதியதை அறிந்து ஆச்சிரியப்படும் சங்கரன, கோபு பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறாமல் போவதிற்கு காரணம் அவன் தாழ்வு மனப்பான்மையே என்று புரிய வைக்க அதன் பின் கோபு நன்றாக படிக்க ஆரம்பிக்கிறான். சங்கரனுக்கு கோபுவின் தந்தை மேல் கோபமும் நல்ல புத்தகங்களை படிக்க விருப்பமுள்ள ஆனால் வாய்ப்பில்லாத கோபுவின் தாயின் மேல் அனுதாபம் கலந்த பரிவும் ஏற்படுகிறது. சரி, இந்தக் கதையும் ரிதம் திரைப்படம் போலத்தான் முடியும் என்று முடிவுக்கு வரும் வேளையில் எதிர்பாராத திருப்பமாக சங்கரன் கோபுவின் தாயிடம் ஒரு வினாடி சபலத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, அனைத்துமே முற்றிலும் கோணலாகப் போவதுடன் இக்கதை நிறைவடைகிறது.

இதில் பாரதியார் எழுதிய 'தேடிச் சோறு நிதந்தின்று' என்ற பாடலில் வரும் வேடிக்கை மனிதனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சங்கரன், சங்கரனைப் பார்த்து "என்னைப் பாரு, யார் மூஞ்சி அவலட்சணமாயிருக்கு பார்ப்போம்" என்று கூறும் கோபு, சங்கரனிடம் "நீங்க சராசரி மனுஷன் இல்ல" என்று சொல்லும் கோபுவின் தாய், கோபுவின் தாயை பொய் சொல்லித் தான் கல்யாணம் செய்து கொண்டதாக தயக்கம் இன்றி ஒத்துக் கொள்ளும் கோபுவின் தந்தை, "அநுதாபம் ஒரு ஆபத்தான உணர்ச்சி" என்று நடக்கப் போவதை சரியாக கணிக்கும் சங்கரனின் நண்பன் என் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அருமையாக செதுக்கி உள்ளார் இபா.

சங்கரன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு என்ன நடந்தது என்பதை ஆசிரியர் வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறார். இப்படி முடிவை சொல்லாமல் விடுவதை இபாவின் மற்றும் பல படைப்புக்களிலும் பார்க்கலாம்.

நல்ல நிறைவை தந்த ஒரு குறுநாவல்.

0 குட்டு: