Tuesday, 30 October 2007

வீரப்பன் ஹீரோவா?

அக்டோபர் 31, 2007 தேதியிடப்பட்ட ஆனந்த விகடனில் "வீரப்பன் ஹீரோவா?" என்ற தலைப்பில் சின்னத்திரை இயக்குனர் திரு. கௌதமன் அவர்களின் பேட்டி வெளி வந்திருக்கிறது. அவர் இயக்கி மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தனக்காடு' என்ற தொடரைப் பற்றிய இயக்குனரின் பேட்டி இது. இதில் அவர் சொல்வது என்னவென்றால்

வீரப்பன் தேடுதல் வேட்டைங்கிற பேர்ல தமிழ்நாட்டு அதிரடிபடையும், கர்நாடக அதிரடிபடையும் நடத்திய வன்முறைகள் நமக்கு அதிகம் தெரியாத விஷயம். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தைக் கையில் எடுத்துக்க் கொண்டு ஒரு இனமும், வனமும் சிதைக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லும் கதை இது.

இது வரையிலும் எல்லாம் சரி தான். அதற்குப் பிறகு திரு. கௌதமன் சொல்வது தான் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
ஒரு வீரனோட உண்மையான வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு சொல்லனும்னு முடிவு பண்ணினேன்.

ஆக ஒரு சமுக விரோதியை, ஒரு பயங்கரவாதியை, ஒரு இரக்கம் இல்லாத மனிதனை வீரனாக சித்தரிக்க போகிறார்கள்.
வீரப்பன் ஹீரோவா? என்ற கேள்விக்கு இயக்குனர் அளித்த பதில் இதோ
அப்படி நான் சொல்லலை. ஆனா, எல்லோர்கிட்டேர்ந்தும் கத்துக்க ஒரு நல்ல விஷயம் இருக்கும் இல்லையா? அப்படி தன்னைச் சுத்தி இருந்தவங்களுக்கு எதாவது ஒரு பாதிப்புன்னா தட்டி கேட்கிறவன் வீரன். அந்த விதத்துல அவனை ஒரு சுத்தமான வீரனா நான் மதிக்கிறேன்.

இது ஒரு ஆபத்தான அசிங்கமான மற்றும் அருவருக்கத்தக்க ஒரு மனோபாவம் ஆகும். இந்த உலகில் உள்ள அனைவரிடமும் ஒரு பாராட்டத்தக்க குணம் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு குணத்தை மட்டும் தோண்டி எடுத்து ஒருவரை ஹீரோவாக முன்னிறுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. இந்த அளவுகோலுடன் பார்த்தால் ஹிட்லர், இடி அமீன், பின் லேடன் உட்பட அனைவரும் ஒரு விதத்தில் ஹீரோ தான். ஒருவரின் மொத்த குணநலன்களைக் கொண்டே ஒருவரை அளவிட வேண்டும். காந்தி, பெரியார், காமராஜர் போன்றோரின் கருத்துகளிலும் பிழைகள் உண்டு. அந்த பிழைகளை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்களை வில்லன்களாக சித்தரிப்பது எப்படி ஒரு மடத்தனமான செயலோ அதே போலத் தான் இதுவும்.
ஒரு கடத்தல்காரனை ஹீரோவாக முன்னிறுத்துவது ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்த மாதிரி ஒரு நிலை நீடித்தால், இந்த உலகில் ஹீரோக்களும் வில்லன்களும் மட்டும் தான் இருப்பார்கள். மனிதர்கள் என்று ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். இருக்கும் சில நல்ல மனிதர்களும் ஒரு பிரிவினருக்கு ஹீரோவாக முயற்சித்து மற்ற அனைத்து பிரிவினருக்கும் வில்லனாக மாறிப் போவார்கள்.

2 குட்டு:

said...

hi, madurai mani... i totally agree with you.... but the directorial touch and the locations are good in that series...

said...

karanscape,
//hi, madurai mani... i totally agree with you.... but the directorial touch and the locations are good in that series...//
நான் இன்னும் பார்த்தில்லை. கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இரு தரப்பு நியாய அநியாயங்களும் சரியான முறையில் காண்பித்து விட்டால், ஒரு அருமையான ஆவணமாகி விடும்.