Sunday, 11 November 2007

அளவில்லாத அபத்தங்கள் - II

அளவில்லாத அபத்தங்கள் பதிவை எழுது முடித்து விட்டு மீண்டும் குமுதம் வாசிக்கத் தொடங்கினேன். இம்முறை பாமரன் அவர்கள் எழுதும் "படித்ததும் கிழித்ததும்". அதில் காட்பாதர் படத்தை எடுத்து வெளியிட்டவர் மார்லன் பிராண்டோ என்று எழுதி இருக்கிறார்.

காட்பாதர் கதையை எழுதியவர் Mario Puzo. இப்படத்தை இயக்கியவர் கப்போலா. இதை தயாரித்து வெளியிட்டது பாரமௌண்ட் பிக்சர்ஸ். மார்லன் பிராண்டோ அப்படத்தில் நடித்த ஒரு நடிகர் மட்டுமே. அவர் இந்தப் படத்தை எடுக்கவும் இல்லை, வெளியிடவும் இல்லை.

அக்கட்டுரையில் சமூக அக்கறையின் காரணமாக பிராண்டோ ஆஸ்கார் விருதை தூக்கி எறிந்ததைப் பற்றி எழுதி இருக்கிறார் ஆசிரியர் பாமரன். காட்பாதர் படத்துக்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பிராண்டோ நிராகரித்தது உண்மை தான். ஆனால் அதற்கு முன்பே 'On the waterfront' என்ற படத்திற்க்கு அவருக்கு அதே விருது கொடுக்கப்பட்ட போது, அவர் மறுக்காமல் வாங்கிக் கொண்டார்! இந்தக் காரணத்திற்காகவே அவர் இரண்டாம் முறை விருதை நிராகரித்தது ஒரு ஸ்டண்ட் தான் என்று கருதுபவர்களும் உண்டு.

இது பாமரனுக்கு தெரியாதா, தெரிந்தும் மறந்து விட்டாரா அல்லது தெரிந்தும் மறைத்து விட்டாரா என்று தெரியவில்லை :)

Saturday, 10 November 2007

அளவில்லாத அபத்தங்கள்.

இன்று குமுதம் படிக்கும் போது தான் 'டோனி ராஜ்ஜியம்' என்று ஒரு தொடர் வருவதைக் கவனித்தேன். சில வாரங்களாக தொடர்ந்து வருகிறது போலும். இந்த வாரத்துடன் நிறைவு பெற்றது. நான் இது வரை இத்தொடரைப் படித்ததில்லை. இந்த வார பகுதியை மட்டுமே படித்தேன். படித்துப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ளாத குறை. பழைய பகுதிகளை பார்த்து வாசிக்க ஆர்வம் இல்லாததனால், இந்த வார பிழைகளை மட்டும் பார்ப்போம்.

முதல் நாலு போட்டிகளிலும் குறைந்த ரன்களில் சொதப்பினார் தோனி:
இது சரியான தகவல் அல்ல. அவர் விளையாடிய மூன்றாவது போட்டியில் இரண்டு ஸ்டம்பிங்கும் மூன்று காட்சும் பிடித்து ஐந்து விக்கெட்கள் விழக் காரணமாக இருந்தார். சரி, ஆசிரியர் சொல்வது போல பேட்டிங் பிடிக்கும் போது சொதப்பி இருப்பார் என்று நினைத்தால், அதுவும் இல்லை. அந்தப் போட்டியில் அவர் எதிர் கொண்டது கடைசி இரு பந்துகளை மட்டுமே. அதில் ஒரு சிக்ஸர் உட்பட ஏழு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து இருக்கிறார். இது எப்படி சொதப்பல் ஆகும் என்று தெரியவில்லை. இதுவாவது பரவாயில்லை, அடுத்து வருவது எல்லாம் அபத்தக் களஞ்சியம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்தார்:
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் சயீத் அன்வர் (இந்தியாவிற்கு எதிராக 194 ஓட்டங்கள்). தோனி அந்தப் போட்டியில் எடுத்தது 183 ஓட்டங்கள். ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் (10) அடித்த வீரர்:
இதுவும் தவறு. ஜெயசூரியாவும், அப்ரிதியும் ஒரே போட்டியில் 11 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்கள்.

சரி புள்ளிவிவரம் தான் சரியில்லை, மற்றதாவது ஒழுங்காக உள்ளதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

சச்சின் 10 வருடங்கள் போராடிப் பெற்ற ரசிகர்களை ஒரே வருடத்தில் வசமாக்கினார் டோனி:
இதை ஒரு அபிப்பிராயமாக சொல்லாமல், ஒரு ஆவணமாகவே கூறுகிறார் ஆசிரியர். எதுவும் கருத்துக் கணிப்பு எடுத்தாரா என்று தெரியவில்லை.

ஏற்கனவே நண்பர்களிடம் சபதமிட்டபடி, இந்திய அணியில் இடம்பிடித்தது மட்டுமின்றி உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த பின் தன் தலைமுடியை வெட்டினார் டோனி:
பழைய அத்தியாயங்களை படிக்காத காரணத்தினால் தோனி என்ன சபதம் போட்டார் என்று சரியாக தெரியவில்லை. இந்த வரியைப் படித்தால், முடி வெட்ட மாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார் போல. ஆனால் சென்ற ஆண்டில் ஒரு முறை, அவர் முடி வெட்ட போகும் பொழுது ரசிகர்கள் தொல்லை மிகுந்து போலீஸ் அடிதடி நடத்தியதாக செய்திகள் வெளிவந்ததாக ஞாபகம். அது உலகக் கோப்பையை வெல்வதற்க்கு முன்பா? இல்லை ஒருவேளை முடியை ஒட்ட நறுக்க மாட்டேன் என்று சபதம் போட்டிருந்தால், அது எல்லாம் ஒரு சபதமா? நானும் காவிரி பிரச்சனை ஓயும் வரையில் ஒரு வேளைக்கு 40 இட்லிக்கு மேல் சாப்பிட மாட்டேன் என்று சபதம் போடலாம்!

இந்த வாரத்தில் தான் தோனி முதல் முறையாக இந்திய அணிக்கு விளையாட ஆரம்பித்ததைப் பற்றி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அதாவது, பொதுவாக தோனியைப் பற்றி மக்களுக்கு சற்று தெரிந்த வரலாறு. இதை சொல்லும் பொழுதே ஏகப்பட்ட பிழைகள். தோனியைப் பற்றி பெரிதளவு தெரியாத பகுதிகளில் இன்னும் எவ்வளவு பிழைகளோ. அந்த ஆசிரியருக்குத் தான் வெளிச்சம்.

ஒருவர் பிரபலமானதும் அவரைப் பற்றி மற்ற பத்திரிக்கைகளில் செய்தி வருமுன் நம் பத்திரிக்கையில் தொடர் வெளியிட்டால் விற்பனை கூடும் என்று நம்புகிற பத்திரிக்கைகள், கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்ததும் சிறிது கூட ஆராய்ச்சி செய்யாமல் எதையாவது எழுதும் எழுத்தாளர், அதை சரி பார்க்காமல் வெளியிடும் ஆசிரியர் குழு இவர்கள் எல்லாம் சேர்ந்தால் இப்படித் தான் அபத்தமாக ஏதாவது வெளிவரும். இது இப்போதைக்கு ஒன்றும் பெரிய குற்றம் அல்ல. ஒரு வேளை இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அந்த ஆசிரியர் உற்சாக மிகுதியால் தோனியைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்து விடக் கூடாதே என்பது தான் என் கவலை எல்லாம்!


Thursday, 8 November 2007

இரு படங்கள். ஒரு பார்வை. ஒரு பதிவு.

இது ரெண்டு திரைப்படங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சி இங்கே வந்திருக்கிற எல்லோருக்கும் என்னைய மன்னிச்சிடுங்க. இது நான் வெளியிட்டு இருக்கிற ரெண்டு புகைப்படங்களைப் பற்றிய பதிவு.

மணிரத்னம், ஷங்கர், அமீர், பாலா இவங்க எல்லாம் ஒரு படம் ரிலீஸ் பண்ணா, அந்த படத்த பத்தி கேள்வி கேக்கணும், பேட்டி எடுக்கணும்னு 100 பேர் சுத்தி வருவாங்க. நானும் தான் ஒன்னுக்கு ரெண்டு படம் ரிலீஸ் பண்ணினேன். ஹூம், ஒன்னும் நடக்கல. அதுக்காக பேசாம இருக்க முடியுமா? இந்தியன் பேசாம இருந்தா செத்து போயிடுவான்னு நம்ம பாட்ஷாவே சொல்லி இருக்கார்! நான் இந்தியன் (அப்போ நீ தமிழன் இல்லையான்னு யாரும் கேக்கக் கூடாது சொல்லிட்டேன்).

நான் எடுத்து ரிலீஸ் பண்ண ரெண்டாவது படத்த பத்தி அதிகமா சொல்ல ஒன்னும் இல்ல. அது இன்னும் கொஞ்சம் கூர்மையா (sharpness) இருந்தா நல்ல இருக்கும்னு ஊருக்குள்ள பேசிக்கிறதா கேள்வி. உண்மை என்னன்னா, அது கூர்மையா இருந்த படம் தான். நான் தான் அத கொஞ்சம் மொக்கையாக்கி (smoothened) ரிலீஸ் பண்ணி இருக்கேன். பொதுவாவே வறட்சியான காட்சிகள் இருக்கிற புகைப்படங்கள் கூர்மையா இருந்தா, அது அந்த வறட்சிய கொஞ்சம் தூக்கலா காட்டும். அதே மாதிரி, குளுமையான காட்சிகள் இருக்கிற புகைப்படங்கள் கொஞ்சம் மழுங்கி இருந்தா அது இன்னும் கொஞ்சம் அதிகம் குளுமையா தெரியும் (அப்படிங்கறது என் கருத்து). இந்த படம் ஒரு குளிர் காலத்தில் எடுக்கப்பட்டது. ஆனா, அந்த குளுமை படத்துல அவ்வளவா தெரியல. அதான் கொஞ்சம் 'பின் தயாரிப்பு' (post production) வேளை பார்த்தேன்.

முதல் படம் கொஞ்சம் சிக்கலானது. ஒரு வேனில் பயணம் செய்யும் பொழுது எடுத்தது. சில விநாடிகளே இப்படி ஒரு பார்வைக் கோணம் (view point) கிடைக்கும். அந்த சில விநாடிகளில் சரியான aperture, shutter speed, focus எல்லாம் செட் செய்து புகைப்படம் எடுப்பதற்க்கு மிகவும் அநுபவம் வேண்டும். நம்ம கிட்ட தான் அதெல்லாம் இல்லையே! முடிஞ்ச வரைக்கும் ஒரு படம் எடுத்து வீட்டுல வந்து பார்த்தா, ரொம்ப கேவலமா இருந்த்து. நீங்களே பாருங்க அந்த கொடுமைய! (பார்க்க மூன்றாவது படம்)

முக்கியமான குறைகள்:
#1: அளவுக்கதிகமான வெண்மையான வானம்: பொதுவா ஒரு படத்துல வானம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கக் கூடாது. நல்ல நீல (அல்லது சிவப்பு) நிற வானம் இருந்து அது படத்தின் அலைவரிசைக்கு ஒத்து வந்தால் ஓகே. அல்லது மேகங்கள் நல்ல எடுப்பாக தெரிந்தாலும் ஓகே. மத்தபடி, வெறும் வெண்மையான வானம் பெரும்பாலும் எந்த வித சுவாரஸ்யமும் தராது. இந்தப் படத்தில் இரண்டு மலைகளையும் அந்தப் பள்ளத்தாக்கினையும் தெளிவாக காண்பிப்பதில் வானம் பெரும் பங்கு வகித்தாலும், இந்தப் படத்தின் ஹீரோவான அந்த நெளிந்த சாலையை காண்பிக்க அந்த வானம் சுத்தமாக உதவவில்லை.
#2: சூரிய வெளிச்சம் மற்றும் கோணம்: இந்தப் படம் எடுக்கும் பொழுது மணி சுமார் காலை 11 இருக்கும். இதே படத்தை சூரியன் இன்னும் கொஞ்சம் மேலே வரும் முந்தி எடுத்திருந்தால், அருமையாக வந்திருக்கும். படத்தின் கீழ் பகுதியில் இடது பக்கமாக பாருங்கள். அந்த வண்ணம் நல்ல அடர்த்தியாக இருக்கும் (dark tone). இதே படத்தின் மேல் வலது பக்கம் பார்த்தால், வெளீர் என இருக்கும். இதற்குக் காரணம், அதிகமான சூரிய ஒளி அங்கே பாய்வது தான். ஒரு படம் இப்படி ஆவதை தவிர்க்க எனக்கு தெரிந்து நாலு வழிகள் உள்ளன. ஒன்று - சூரியன் மிக மேலே வருவதற்க்கு முன்னமே படம் எடுப்பது. ரெண்டு - சூரிய ஒளி படாமல் வேறு கோணத்தில் இருந்து படம் எடுப்பது. மூன்று - filter ஒன்றை உபயோகித்து சூரிய ஒளியின் வீரியத்தை குறைப்பது. நாலு - படம் எடுத்த பிறகு கொஞ்சம் கோல்மால் செய்வது (post production techniques). நான் படம் எடுத்த சூழ்நிலையில் முதல் மூன்று வழிகளை பின்பற்றுவது நடக்காத விஷயம். அதனால் முடிந்த வரையில் நாலாவது வழியைக் கையாண்டேன்.
#3: போகஸ் சாலையில் இல்லை: இது ஒரு மன்னிக்க முடியாத பெரிய தவறாகும். ஆனால் சாலை சரியாக தெரியாமல் போனதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. இம்மாதிரியான காட்சிகளை படமெடுக்கும் போது, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளையும் (object) சேர்த்து எடுத்தால், அப்படத்தின் perspective நன்றாக தெரியும். அதாவது ஒரு landscape புகைப்படம் நல்ல ஆழமாகத் தெரிய வேண்டும் என்றால், பக்கத்தில் இருக்கும் ஒரு பொருளையும் சேர்த்து எடுக்க வேண்டும் (ஒரு மரக்கிளை, ஒரு பாறை). அப்படி எடுத்தால் தான் அந்த புகைப்படத்தின் தூர விகிதம் சரியாக தெரியும். இந்தப் படத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள பாறைகளை கையால் மறைத்து விட்டு பாருங்கள், நான் சொல்வது புரியும்.
ஆனால் அப்படி எடுப்பதில் சில ஆபத்துக்கள் உண்டு. அது தான் இங்கேயும் ஏற்ப்பட்டது. நீங்களாக போகஸ் செய்யும் வசதி இருந்தால், எந்த இடம் படத்தில் கூர்மையாக தெரிய வேண்டும் என்று முடிவு செய்யலாம். ஆனால் தானியங்கி (auto focus) கேமராக்கள் கொஞ்சம் ரிஸ்க் தான். படத்தின் போகஸ் எங்கே விழ வேண்டும் என்பதை அந்த கேமிராவே தீர்மானிக்கும். அதை மாற்ற முடியும் என்றாலும் அதை செய்வதற்க்கு கொஞ்சம் நேரமாகும். வேனில் செல்லும் பொழுது, அந்த வேனின் ஓட்டுனர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த படத்திலும், ஆழம் நன்றாக தெரிய வேண்டும் என்று அங்கே இருந்த சுவரையும் சேர்த்துப் படம் பிடித்தேன், என் கெட்ட நேரம், போகஸ் எல்லாம் அந்த சுவருக்கே சென்று விட்டது :(

இதைத் தவிர இந்தப் படத்தில் இன்னும் பல குறைகள் உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். இந்த மூன்று முக்கிய குறைகளை நீக்க சில post production வேலை பார்க்கலாம். அதைத் தான் நானும் செய்துள்ளேன். தேவை இல்லாத வானத்தை வெட்டித் தூக்கி எறிந்து விட்டேன், சூரிய ஒளியின் தீவிரத்தைக் குறைக்க மொத்தப் படத்தையும் கொஞ்சம் இருட்டாக்கி (darken) விட்டேன். மூன்றாவது குறைபாட்டை முழுவது நீக்குவது கடினம். இருந்தாலும் என்னால் முடிந்த முயற்சியாக முன்னால் இருந்த சுவரை நீக்கி விட்டேன். ஆனாலும் அந்த தூர விகிதம் தெரிய வேண்டும் என்பதற்க்காக ஒரு பாறையை மட்டும் நீக்காமல் விட்டு விட்டேன்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா, இன்னும் அழகாக்கி இருக்கலாம். ஆனா, ஆபீஸ் வேலையும் கொஞ்சம் பார்க்கனும் இல்லையா? அதான்..இதோட நிறுத்துக்கிட்டேன்! :)

Friday, 2 November 2007

நவம்பர் மாத PIT போட்டி

முன்குறிப்பு: முதலில் PIT அறிவித்து இருக்கும் இந்த மாத போட்டிக்கான புகைப்படங்கள். மற்றவை பின்குறிப்பில்.
புகைப்படம் 1:


புகைப்படம் 2:


இப்பொழுது சில பின்குறிப்புக்கள்:
பின்குறிப்பு 1: என்னடா படம் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்குதேன்னு திட்டாதீங்க. பின்குறிப்பு #2 படிங்க.

பின்குறிப்பு 2: இந்த போட்டிக்காக கொஞ்சம் படம் சுட்டுகிட்டு வரலாம்னு கேமராவ தேடினா, அத காணவே காணோம். ஒரு நாள் முழுக்க தேடின பிறகு, சரி ஊருக்கு போய் இருக்கிற சம்சாரத்துகிட்ட கேட்க்கும் போது தான் தெரிஞ்சது, அவங்க இந்தியா போகும் போது அத கையோட எடுத்துக்கிட்டு போயிடாங்கனு! இது என்னடா மதுரை மணிக்கு வந்த சோதனைன்னு, சரி மொபைல படம் பிடிக்கலாம்னு பார்த்தா, சனியன் நோக்கியா 6021 மாடல்ல கேமராவே இல்ல! அதனால நான் எடுத்த படத்துல இருந்து, அழகா நின்னு போஸ் கொடுத்த தோழர் தோழியர் எல்லோரையும் கட் பண்ணிட்டு பார்க்கும் போது கிடைச்சது இது தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க ப்ளீஸ்.

பின்குறிப்பு 3: நான் சான் பிரான்சிஸ்கோல கொஞ்ச நாள் இருந்தேன். அங்க இருக்கிற ரோடு எல்லாம் சூப்பரா இருக்கும். அத ஒரு மூணு ரோல் சுட்டு வச்சேன். அது எதுவும் இப்போ கைவசம் இல்ல. அது மட்டும் இப்போ கைல இருந்திருந்தா முதல் பரிசுல இருந்து கடைசி பரிசு வரை எல்லாம் நம்மளது தான்!

பின்குறிப்பு 4: இலவச இணைப்பா இன்னொரு படம். என்னடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒண்ணும் இல்ல, முதல் படத்தோட அம்மா தான் இவங்க!

அம்மா அழகா இல்ல பொண்ணு அழகான்னு சொல்லிட்டுப் போங்க. :)

பின்குறிப்பு 5:
மேல போட்டு இருக்கிற படம் எல்லாம் போட்டியில ஜெயிக்காதுன்னு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் போட்டதுக்கு காரணம் அட்லீஸ்ட் பதிவு கவுண்ட்ல ஒன்னு ஜாஸ்தி ஆகுதுல்ல...அதான்!

Wednesday, 31 October 2007

வேஷங்கள் - இந்திரா பார்த்தசாரதி

எனக்கு பிடித்த பல எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வேதபுரத்து வியாபாரிகள், தந்திர பூமி, சுதந்திர பூமி ஆகியவற்றை சொல்லலாம். முக்கியமாக அங்கத நாவலான வேதபுரத்து வியாபாரிகள் நாவலில் ஒவ்வொரு வரியிலும் இழைந்தோடும் அந்த நையாண்டியை மிகவும் ரசித்திருக்கிறேன். என்ன தான் நக்கல் என்றாலும் சுதந்திர பூமியில் கருணாநிதியை ஹிட்லருக்கு ஒப்பிடும் பகுதி கொஞ்சம் ஓவராக தான் படுகிறது. இருந்தாலும் அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அதுவும் ஒரு சிறந்த நாவலே.அவரின் கிருஷ்ணா கிருஷ்ணா நாவலை பலர் பாராட்டிப் பேசக் கேட்டிருக்கிறேன். அதை இன்னும் படிக்க சந்தர்ப்பம் வரவில்லை.

இன்று அவர் எழுதிய வேஷங்கள் என்ற குறுநாவல் ஒன்றை படித்தேன். இந்திரா பார்த்தசாரதி எழுதி நான் படித்தவற்றில் அரசியல் தளத்தில் இயங்காத முதல் கதை இது தான் என நினைக்கிறேன். வெகு எளிமையான கதையினூடாக ஒரு சராசரி மனிதனின் தடுமாற்றங்களையும் பலஹீனங்களையும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.

கால் ஊனமுற்ற சங்கரன் ஒரு அவலட்சணமான கோபு என்ற பதினாறு வயது சிறுவனை சந்திக்கின்றன். தனது மென்மையான தாய் மீது மிகுந்த நேசமும் தன் அவலட்சணத்திற்கு காரணமான தன் குருரமான குணம் கொண்ட தந்தை மீது அளவு கடந்த வன்மமும் கொண்டிருக்கும் கோபுவிற்கு சங்கரனை மிகவும் பிடித்து போக, தனது வீட்டில் வாடகைக்கு ஒரு அறை இருப்பதாகக் கூறி சங்கரனை தன்னுடன் தங்க அழைக்க அதற்கு சங்கரனும் ஒப்புக்கொண்டு அந்த வீட்டிற்க்கு குடியேறுகிறான். இதன் பிறகு கதை வாசகர்கள் எதிர்பார்க்கும் அதே திசையில் நகர்கிறது. கோபு ஒரு 'இம்பொடன்ட்' பசு மாட்டின் கதையை பள்ளிக் கட்டுரையாக எழுதியதை அறிந்து ஆச்சிரியப்படும் சங்கரன, கோபு பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறாமல் போவதிற்கு காரணம் அவன் தாழ்வு மனப்பான்மையே என்று புரிய வைக்க அதன் பின் கோபு நன்றாக படிக்க ஆரம்பிக்கிறான். சங்கரனுக்கு கோபுவின் தந்தை மேல் கோபமும் நல்ல புத்தகங்களை படிக்க விருப்பமுள்ள ஆனால் வாய்ப்பில்லாத கோபுவின் தாயின் மேல் அனுதாபம் கலந்த பரிவும் ஏற்படுகிறது. சரி, இந்தக் கதையும் ரிதம் திரைப்படம் போலத்தான் முடியும் என்று முடிவுக்கு வரும் வேளையில் எதிர்பாராத திருப்பமாக சங்கரன் கோபுவின் தாயிடம் ஒரு வினாடி சபலத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, அனைத்துமே முற்றிலும் கோணலாகப் போவதுடன் இக்கதை நிறைவடைகிறது.

இதில் பாரதியார் எழுதிய 'தேடிச் சோறு நிதந்தின்று' என்ற பாடலில் வரும் வேடிக்கை மனிதனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சங்கரன், சங்கரனைப் பார்த்து "என்னைப் பாரு, யார் மூஞ்சி அவலட்சணமாயிருக்கு பார்ப்போம்" என்று கூறும் கோபு, சங்கரனிடம் "நீங்க சராசரி மனுஷன் இல்ல" என்று சொல்லும் கோபுவின் தாய், கோபுவின் தாயை பொய் சொல்லித் தான் கல்யாணம் செய்து கொண்டதாக தயக்கம் இன்றி ஒத்துக் கொள்ளும் கோபுவின் தந்தை, "அநுதாபம் ஒரு ஆபத்தான உணர்ச்சி" என்று நடக்கப் போவதை சரியாக கணிக்கும் சங்கரனின் நண்பன் என் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அருமையாக செதுக்கி உள்ளார் இபா.

சங்கரன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு என்ன நடந்தது என்பதை ஆசிரியர் வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறார். இப்படி முடிவை சொல்லாமல் விடுவதை இபாவின் மற்றும் பல படைப்புக்களிலும் பார்க்கலாம்.

நல்ல நிறைவை தந்த ஒரு குறுநாவல்.

Tuesday, 30 October 2007

வீரப்பன் ஹீரோவா?

அக்டோபர் 31, 2007 தேதியிடப்பட்ட ஆனந்த விகடனில் "வீரப்பன் ஹீரோவா?" என்ற தலைப்பில் சின்னத்திரை இயக்குனர் திரு. கௌதமன் அவர்களின் பேட்டி வெளி வந்திருக்கிறது. அவர் இயக்கி மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தனக்காடு' என்ற தொடரைப் பற்றிய இயக்குனரின் பேட்டி இது. இதில் அவர் சொல்வது என்னவென்றால்

வீரப்பன் தேடுதல் வேட்டைங்கிற பேர்ல தமிழ்நாட்டு அதிரடிபடையும், கர்நாடக அதிரடிபடையும் நடத்திய வன்முறைகள் நமக்கு அதிகம் தெரியாத விஷயம். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தைக் கையில் எடுத்துக்க் கொண்டு ஒரு இனமும், வனமும் சிதைக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லும் கதை இது.

இது வரையிலும் எல்லாம் சரி தான். அதற்குப் பிறகு திரு. கௌதமன் சொல்வது தான் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
ஒரு வீரனோட உண்மையான வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு சொல்லனும்னு முடிவு பண்ணினேன்.

ஆக ஒரு சமுக விரோதியை, ஒரு பயங்கரவாதியை, ஒரு இரக்கம் இல்லாத மனிதனை வீரனாக சித்தரிக்க போகிறார்கள்.
வீரப்பன் ஹீரோவா? என்ற கேள்விக்கு இயக்குனர் அளித்த பதில் இதோ
அப்படி நான் சொல்லலை. ஆனா, எல்லோர்கிட்டேர்ந்தும் கத்துக்க ஒரு நல்ல விஷயம் இருக்கும் இல்லையா? அப்படி தன்னைச் சுத்தி இருந்தவங்களுக்கு எதாவது ஒரு பாதிப்புன்னா தட்டி கேட்கிறவன் வீரன். அந்த விதத்துல அவனை ஒரு சுத்தமான வீரனா நான் மதிக்கிறேன்.

இது ஒரு ஆபத்தான அசிங்கமான மற்றும் அருவருக்கத்தக்க ஒரு மனோபாவம் ஆகும். இந்த உலகில் உள்ள அனைவரிடமும் ஒரு பாராட்டத்தக்க குணம் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு குணத்தை மட்டும் தோண்டி எடுத்து ஒருவரை ஹீரோவாக முன்னிறுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. இந்த அளவுகோலுடன் பார்த்தால் ஹிட்லர், இடி அமீன், பின் லேடன் உட்பட அனைவரும் ஒரு விதத்தில் ஹீரோ தான். ஒருவரின் மொத்த குணநலன்களைக் கொண்டே ஒருவரை அளவிட வேண்டும். காந்தி, பெரியார், காமராஜர் போன்றோரின் கருத்துகளிலும் பிழைகள் உண்டு. அந்த பிழைகளை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்களை வில்லன்களாக சித்தரிப்பது எப்படி ஒரு மடத்தனமான செயலோ அதே போலத் தான் இதுவும்.
ஒரு கடத்தல்காரனை ஹீரோவாக முன்னிறுத்துவது ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்த மாதிரி ஒரு நிலை நீடித்தால், இந்த உலகில் ஹீரோக்களும் வில்லன்களும் மட்டும் தான் இருப்பார்கள். மனிதர்கள் என்று ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். இருக்கும் சில நல்ல மனிதர்களும் ஒரு பிரிவினருக்கு ஹீரோவாக முயற்சித்து மற்ற அனைத்து பிரிவினருக்கும் வில்லனாக மாறிப் போவார்கள்.